20 April, 2016

விவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பகுதி – 18

Jesus in the synagogue of Nazareth

இவ்வாண்டு, சனவரி 12ம் தேதி, 'இறைவனின் பெயர் இரக்கம்' என்ற நூல் வெளியீட்டு விழாவில், இத்தாலிய நடிகரும், இயக்குனருமான ரொபெர்த்தோ பெநிஞ்னி (Roberto Benigni) அவர்கள் கலந்துகொண்டார். திருத்தந்தையின் நூலை அவர் வாசித்ததிலிருந்து, இரக்கத்தைப் பற்றி தான் அறிந்ததை அவர் இவ்வாறு விளக்கினார்:
"இரக்கம், சாய்வு நாற்காலியில் அமர்ந்து, புன்னகைக்கும் ஒரு புண்ணியம் அல்ல. அது, செயல்வடிவில் வெளியாகும் புண்ணியம். திருத்தந்தையைப் பொருத்தவரை, இரக்கம் என்பது, சர்க்கரையில் தோய்த்தெடுக்கப்பட்ட புண்ணியம் அல்ல. தேவைப்பட்டால், அது, மிகக் கசப்பான உண்மைகளை வெளிப்படுத்தும் புண்ணியம்" என்று பெநிஞ்னி அவர்கள் கூறினார்.
இரக்கத்தைக் குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ள கருத்துக்களை சரியாகப் புரிந்துகொண்டால், அது, எளிதான, மிருதுவான உணர்வு அல்ல என்பதைப் புரிந்துகொள்ளலாம். இரக்கம், ஓரிடத்தில் தங்கியிராது; தேவைப்பட்டால், அது, எதிர்ப்புக்கள் எழும் சூழல்களுக்குச் சென்று, அங்கு உண்மையை நிலைநாட்டும் என்பது, திருத்தந்தை வழங்கும் கருத்துக்களில் வெளிப்படுகிறது. இந்தப் பின்னணியில் இன்று நாம் இயேசுவின் புதுமைகளில் நம் தேடலைத் தொடர்கிறோம்.

இயேசு ஆற்றிய புதுமைகள், அவரது இரக்கத்தை வெளிப்படுத்தும் அடையாளங்கள் என்பதை அனைவரும் அறிவோம். ஆனால், இயேசுவின் இரக்கம், வெறும் பரிதாபத்தால் எழும் உணர்வு அல்ல. அவரது இரக்கம், தேவையில் தவிப்பவர்களைத்  தொடும் அதே வேளையில், அந்தத் தேவைகளை, தவிப்பை, உருவாக்குபவர்களையும் கேள்விக்கு உள்ளாக்குகிறது என்பதை, இயேசுவின் புதுமைகள் நமக்குச் சொல்லித் தருகின்றன. இந்தக் கோணத்தில், நாம், இயேசு, ஒய்வு நாளில் ஆற்றிய புதுமைகளைச் சிந்திக்கவேண்டும்.
குணமாக்கும் புதுமைகளில் பலவற்றை, இயேசு ஒய்வு நாட்களில் நிகழ்த்தினார். லூக்கா நற்செய்தியில் பதிவுசெய்யப்பட்டுள்ள புதுமைகளில் மூன்றில் ஒரு பகுதி, ஓய்வு நாட்களில் நிகழ்ந்தவை. இயேசு ஆற்றியதாக லூக்கா கூறும் முதல் புதுமையே, ஒய்வு நாளில், தொழுகைக் கூடத்தில் நடந்தது. இந்தப் புதுமையைச் சிந்திப்பதற்கு முன், இப்புதுமை நிகழ்ந்த சூழலை நாம் சிந்திப்பது பயனளிக்கும்.

இந்தப் புதுமை, லூக்கா நற்செய்தி, 4ம் பிரிவில் கூறப்பட்டுள்ளது. இதே பிரிவில் கூறப்பட்டுள்ள மற்ற நிகழ்வுகள், இப்புதுமையையும், இயேசுவையும் இன்னும்  புரிந்துகொள்ள உதவும். லூக்கா நற்செய்தி, 4ம் பிரிவின் ஆரம்பத்தில், இயேசு அலகையால் சோதிக்கப்பட்ட நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன (லூக். 4:1-13). இந்தச் சோதனைகளின் இறுதியில், அலகை சோதனைகள் அனைத்தையும் முடித்தபின்பு ஏற்ற காலம் வரும்வரை அவரைவிட்டு அகன்றது. (லூக். 4:13). என்று, நற்செய்தியாளர் லூக்கா கூறும் வார்த்தைகள், ஓர் எச்சரிக்கை போல் ஒலிக்கின்றன. 'ஏற்ற காலம் வரும்வரை' என்ற சொற்றொடரை, பல விவிலிய விரிவுரையாளர்கள், இயேசுவின் பாடுகளோடு இணைத்துச் சிந்தித்துள்ளனர். ஆனால், அலகை அவ்வளவு நேரம் காத்திருக்கவில்லை என்பதை லூக்கா நற்செய்தியின் 4ம் பிரிவே நமக்கு உணர்த்துகிறது.
சோதனைகளை எதிர்கொண்ட இயேசு, அடுத்ததாக, தான் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு செல்கிறார். அலகை அவரைத் தொடர்கிறது. நாசரேத்து தொழுகைக் கூடத்தில், தன் பணிவாழ்வைப் பற்றிக் கூறுகிறார், இயேசு. தன் பணிவாழ்வின் முக்கிய இலக்கு, சமுதாயத்தின் விளிம்புகளில் வாழும் வறியோர், சிறைப்பட்டோர், நோயுற்றோர், மற்றும் ஒடுக்கப்பட்டோர் என்று இயேசு தெளிவுபடுத்துகிறார். இயேசு தேர்ந்துள்ள இம்மக்கள், இறைவனாலும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் என்பதை சுட்டிக்காட்ட, இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து ஒரு பகுதியை இயேசு வாசிக்கிறார்.
இயேசு வாசித்த வார்த்தைகள், இறைவாக்கினர் கூறிய வார்த்தைகளே என்றாலும், அவற்றை நாசரேத்து மக்கள் மறந்திருக்க வேண்டும். அவர்களை அவ்விதம் மறக்கச் செய்யும் வண்ணம், மதத் தலைவர்கள், ஏழைகளை, சிறைப்பட்டோரை, நோயோற்றோரை, இறைவனின் தண்டனை பெற்றவர்கள் என்று அம்மக்களுக்கு உணர்த்தியிருக்க வேண்டும்.
சமுதாயத்தின் விளிம்புகளுக்குத் தள்ளப்பட்டவர்களை இயேசு மீண்டும் மையத்திற்குக் கொண்டுவர முயன்றதால், தொழுகைக் கூடத்தில் எதிர்ப்பு உருவாகிறது. பொதுவாக, தொழுகைக் கூடத்தில், இறைவனைத் தேடி, அவர் தரும் அமைதியை, அருளை, தேடிச் செல்வோம். அங்கு, அந்த அமைதியைக் குலைக்க யாராவது முயன்றால், அவரை, அவ்விடத்திலிருந்து வெளியேற்றிவிட்டு, மீண்டும் தங்கள் வழிபாட்டைத் தொடரவேண்டும்.
நாசரேத்திலோ, இயேசுவை, தொழுகைக் கூடத்திலிருந்து மட்டுமல்ல, இவ்வுலகிலிருந்தே வெளியேற்றும் வண்ணம் வெறி கொண்டனர் மக்கள். அந்தக் கொலை வெறியை, நற்செய்தியாளர் லூக்கா இவ்விதம் விவரிக்கிறார்: தொழுகைக்கூடத்தில் இருந்த யாவரும் இவற்றைக் கேட்டபோது, சீற்றங் கொண்டனர்; அவர்கள் எழுந்து, அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வூரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர். (லூக்கா 4:28-29).

தொழுகைக் கூடங்களில் இத்தகைய வெறி உருவாகக்கூடுமா? உருவாகியுள்ளது என்பதை நாம் மிகுந்த வேதனையோடு உணர்ந்து வருகிறோம். அண்மைய ஆண்டுகளில், தொழுகைக் கூடங்களும், ஆலயங்களும் கட்டுக்கடங்காத வெறிக்கு இலக்காகி வருவதை நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆலயங்களுக்குள்ளும், ஆலயங்களுக்கு வெளியிலும் உருவாகும் இத்தகைய வெறியைத் தூண்டிவிடுவது, தீய சக்திகளே என்பதை அனைவரும் அறிவோம். இந்தத் தீயச் சக்திகள், இறைவனின் பெயரால், மதத்தின் பெயரால் செயலாற்றுவது, நம் வேதனையைக் கூட்டியுள்ளது. இயேசுவை சோதனைகளுக்கு உள்ளாக்கிய தீயோன், அலகை, சாத்தான், அவரைத் தொடர்ந்து, நாசரேத்துக்கு சென்றது என்பதையே, இந்நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது.

தன் சொந்த ஊரில், அதுவும், தொழுகைக் கூடத்தில் எதிர்ப்பையும், வெறியையும் உணர்ந்த இயேசு, 'நமக்கேன் வம்பு' என்ற எண்ணத்தில், 'இனி தொழுகைக் கூடங்களில் நுழைய வேண்டாம்' என்று தீர்மானித்திருந்தால், மீட்பளிக்கும் நற்செய்தி தொடர்ந்திருக்காது. இயேசு, தான் சென்ற அடுத்த ஊரில், மீண்டும் தொழுகைக் கூடத்தைத் தேர்ந்தெடுத்தார் என்பதை, லூக்கா நற்செய்தியின் 4ம் பிரிவு நமக்கு உணர்த்துகிறது. கப்பர்நாகூம் ஊரில், தொழுகைக் கூடத்தில் இயேசு தன் போதனைகளை வார்த்தைகளோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், செயல் வடிவிலும் வெளிப்படுத்தினார். இயேசு ஆற்றிய முதல் புதுமை என்று, லூக்கா நற்செய்தியில் நாம் காண்பது இதுதான்:
லூக்கா 4: 31-37
பின்பு இயேசு கலிலேயாவிலுள்ள கப்பர்நாகும் ஊருக்குச் சென்று, ஓய்வு நாள்களில் மக்களுக்குக் கற்பித்து வந்தார். அவருடைய போதனையைக் குறித்து அவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஏனெனில் அவர் அதிகாரத்தோடு கற்பித்தார். தொழுகைக் கூடத்தில் தீய ஆவியான பேய் பிடித்திருந்த ஒருவர் இருந்தார். அவரைப் பிடித்திருந்த பேய், "ஐயோ! நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்" என்று உரத்த குரலில் கத்தியது. "வாயை மூடு, இவரை விட்டு வெளியே போ" என்று இயேசு அதனை அதட்டினார். அப்பொழுது பேய் பிடித்தவரை அவர்கள் நடுவே விழச்செய்து, அவருக்கு ஒரு தீங்கும் இழைக்காமல் பேய் அவரைவிட்டு வெளியேறிற்று. எல்லாரும் திகைப்படைந்து, "எப்படிப் பேசுகிறார், பாருங்கள்! அதிகாரத்தோடும் வல்லமையோடும் தீய ஆவிகளுக்குக் கட்டளையிடுகிறார்; அவையும் போய்விடுகின்றனவே!" என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டனர். அவரைப்பற்றிய பேச்சு சுற்றுப்புறமெங்கும் பரவியது.

ஓய்வு நாளை மீறுவது பெரும் பிரச்சனை. அதையும் இறைவன் சந்நிதியில், தொழுகைக் கூடத்தில் மீறுவது, அதைவிட பெரும் பிரச்சனை. இயேசு ஏன் இப்படி செய்தார்? அவர் பிரச்சனைகளைத் தேடிச் சென்றாரா? மேலோட்டமாகப் பார்த்தால், அப்படி தோன்றலாம். ஆனால் இன்னும் ஆழமாய்த் தேடினால், இயேசு, இவற்றை ஒரு தீர்மானத்தோடு செய்வது விளங்கும். தன் புதுமைகளால் தனியொருவர் மட்டும் பயன் பெறவேண்டும் என இயேசு நினைத்திருந்தால், ஊருக்கு வெளியே, தனியொரு இடத்தில் புதுமைகளைச் செய்திருக்கலாம். அல்லது, தேவையுள்ளவர் வீடு தேடிச்சென்று, புதுமைகள் செய்திருக்கலாம். இத்தகையப் புதுமைகளும் சொல்லப்பட்டுள்ளன. ஆனால், ஓய்வு நாளன்று, தொழுகைக் கூடத்தில் ஆற்றிய புதுமைகளில், இயேசுவின் எண்ணங்கள் வேறு வகையில் இருந்ததால், பிரச்சனைகளுக்கு மத்தியில், கேள்விகளுக்கு மத்தியில் புதுமைகளை ஆற்றுகிறார். யூதர்களுக்கும், யூத மதத்தலைவர்களுக்கும் ஒய்வு நாள் குறித்த பாடங்களைச் சொல்லித்தருவது, இயேசுவின் தலையாயக் குறிக்கோளாகத் தெரிகிறது. நாமும் இந்தப் பாடங்களைக் கற்றுக்கொள்வது நல்லதுதானே.

தனிப்பட்டோரின் உடல் நோயை மட்டும் குணமாக்குவது, இயேசுவின் நோக்கம் அல்ல, மாறாக, மனதிலும், சமுதாயத்திலும் காணப்படும் நோய்களை குணமாக்குவதும் இயேசுவின் நோக்கம். இயேசுவின் இரக்கம் வெறும் பரிதாபத்தால் எழும் பதிலிறுப்பு அல்ல. ஒய்வு நாளையும், தொழுகைக் கூடத்தையும் இணைத்து இயேசு ஆற்றிய முதல் புதுமை, அவரைக் குறித்து நல்ல எண்ணங்களை மக்கள் மனதில் பதித்தன என்று இப்புதுமையின் இறுதி வரிகள் கூறுகின்றன. ஆனால், லூக்கா நற்செய்தி, 6ம் பிரிவில் மீண்டும் இயேசு ஓய்வுநாளில் தொழுகைக் கூடத்தில் ஆற்றும் மற்றொரு புதுமை மாறுபட்ட பதிலிறுப்பை மக்கள் மத்தியில் உருவாக்குகிறது. இந்தப் புதுமையை நம் அடுத்தத் தேடலில் சிந்திப்போம்.


No comments:

Post a Comment