27 April, 2016

விவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பகுதி – 19


From withered hands to winning hands

இயேசு, ஒய்வு நாளில், தொழுகைக் கூடத்தில் ஆற்றியதாக லூக்கா நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ள முதல் புதுமை, அவரைக் குறித்து நல்ல எண்ணங்களை மக்கள் மனதில் பதித்தன என்று இப்புதுமையின் இறுதி வரிகள் கூறுகின்றன. ஆனால், லூக்கா நற்செய்தி, 6ம் பிரிவில் மீண்டும் இயேசு ஓய்வுநாளில் தொழுகைக் கூடத்தில் ஆற்றும் மற்றொரு புதுமை, மாறுபட்ட பதிலிறுப்பை உருவாக்குகிறது. இந்தப் புதுமையை நம் அடுத்தத் தேடலில் சிந்திப்போம்.
என்று சென்ற விவிலியத் தேடலை நிறைவு செய்தோம். இன்று தொடர்கிறோம்.

லூக்கா நற்செய்தி ஆறாம் பிரிவில் இயேசு ஆற்றிய புதுமையில் ஒரு பிரச்சனையைச் சந்திக்கிறார். சந்திக்கிறார் என்பதை விட, பிரச்சனையை ஆரம்பிக்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. பிரச்சனையைத் துவக்கிவைக்கும் வண்ணம் இயேசு ஆற்றிய புதுமையை லூக்கா நற்செய்தியிலிருந்து கேட்போம்.

லூக்கா நற்செய்தி 6: 6-11
மற்றோர் ஓய்வுநாளில் இயேசு தொழுகைக்கூடத்திற்குள் சென்று கற்பித்தார். அங்கே வலக்கை சூம்பியவர் ஒருவர் இருந்தார். மறைநூல் அறிஞரும் பரிசேயரும் இயேசுவிடம் குற்றம் காணும் நோக்குடன், ஓய்வுநாளில் அவர் அவரைக் குணப்படுத்துவாரா என்று கூர்ந்து கவனித்துக் கொண்டேயிருந்தனர். இயேசு அவர்களுடைய எண்ணங்களை அறிந்து, கை சூம்பியவரை நோக்கி, “எழுந்து நடுவே நில்லும்!என்றார். அவர் எழுந்து நின்றார். இயேசு அவர்களை நோக்கி, “உங்களிடம் ஒன்று கேட்கிறேன்; ஓய்வுநாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை?” என்று கேட்டார். பிறகு அவர் சுற்றிலும் திரும்பி அவர்கள் யாவரையும் பார்த்துவிட்டு, “உமது கையை நீட்டும்!என்று அவரிடம் கூறினார். அவரும் அப்படியே செய்தார். அவருடைய கை நலமடைந்தது. அவர்களோ கோபவெறி கொண்டு இயேசுவை என்ன செய்யலாம் என்று ஒருவரோடு ஒருவர் கலந்து பேசினர்.

வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வதற்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றைப் பட்டியலிடத் தேவையில்லை. நாம் வாசித்த நற்செய்தியில், தொழுகைக் கூடத்தில் இருந்தவர்கள் அங்கு சென்றதன் காரணங்களைப் பற்றி கொஞ்சம் சிந்திக்கலாம். இயேசு தொழுகைக் கூடத்தில் இருந்தார். காரணம்? மக்களுக்கு நல்ல செய்தியைச் சொல்ல. மக்கள் அங்கு வரக் காரணம் என்ன? இயேசுவின் போதனைகளைக் கேட்க. அவரது போதனைகள், மற்ற மறை நூல் அறிஞர்களின் போதனைகள் போல் இல்லாமல், நன்றாக இருப்பதாக செய்தி பரவி வந்ததால், அவரது போதனையைக் கேட்க மக்கள் வந்திருந்தனர். போதனையைக் கேட்டுக்கொண்டிருந்த மக்கள் கூட்டத்தில், வலக்கை சூம்பிய ஒருவர் இருந்தார். ஒரு வேளை, இயேசுவிடம் தன் குறையைச் சொல்லி, ஏதாவது ஒரு தீர்வு காணலாம் என்று நம்பிக்கையோடு வந்திருப்பார்.

பரிசேயரும், மறைநூல் அறிஞரும் தொழுகைக் கூடத்தில் இருந்தனர். அவர்கள் வந்தததற்குக் காரணம் என்ன? இயேசுவின் போதனைகளைக் கேட்கவா? செபம் செய்யவா? அல்லது மக்களை செபத்திலும், தொழுகையிலும் வழிநடத்தவா? ஒருவேளை, இந்த காரணங்களுக்காக அவர்கள் அங்கு வந்திருக்கலாம். ஆனால், இயேசுவை அந்த தொழுகைக்கூடத்தில் பார்த்ததும், அவர்களுக்குள் பல்வேறு பகைமை உணர்வுகள் அலைமோதியிருக்க வேண்டும். இயேசுவைச் சுற்றி கூடியிருந்த மக்கள் கூட்டம், அவர் கூறிய சொற்களில் ஆழ்ந்து ஈடுபட்டிருந்ததும் மதத் தலைவர்களின் பொறாமையை இன்னும் தூண்டியிருக்க வேண்டும். இந்த உணர்வுகளோடு அவர்கள் மக்கள் கூட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, இயேசுவுக்கு முன்னால் குறையுள்ள அந்த மனிதரைக் கண்டனர். அவரைக் கணடதும், மதத்தலைவர்கள், தாங்கள் தொழுகைக்கூடத்திற்கு வந்ததற்கான குறிக்கோளை அடைந்துவிட்டதைப் போல் உணர்ந்தனர். அவர்கள் உதட்டோரம் இலேசான ஒரு புன்னகை. மக்கள் முன் இயேசுவை அவமானப்படுத்த இதைவிட அவர்களுக்கு சிறந்த சந்தர்ப்பம் கிடைக்காது என்று கணக்கு போட்டனர்.
கை சூம்பிய அந்த மனிதருக்கு இயேசு உதவாவிடில், அவர் இதயமற்றவர் ஆகிவிடுவார். ஆனால், அந்த மனிதர் மேல் இரக்கம் காட்டி, அவரை குணமாக்கினால், மோசே வழியே இறைவன் தந்த ஓய்வு நாள் சட்டத்தை மீறுபவர் ஆகிவிடுவார். நல்லது செய்தாலும் தவறு, செய்யாமல் போனாலும் தவறு. இயேசு தங்களிடம் அன்று வசமாக மாட்டிக்கொண்டார் என்று, அவர்கள் கணக்கு போட்டனர்.
அவர்கள் போட்ட கணக்கில் ஒரே ஒரு தவறு செய்தனர்... இயேசுவின் அறிவுத்திறனை, அவர்கள் சிறிது குறைவாக மதிப்பிட்டுவிட்டனர். நாம் வாசித்த நற்செய்தியில் "அவர்கள் எண்ணங்களை அறிந்த இயேசு..." என்ற அழகான ஒரு சொற்றொடரை வாசிக்கிறோம். இன்றைய பேச்சு வழக்கில் இதைச் சொல்ல வேண்டுமென்றால், இயேசு அவர்களை அளந்து வைத்திருந்தார் என்று சொல்லலாம்.

ஒரு கற்பனைக் காட்சியைக் காண்பதற்கு உங்களை அழைக்கிறேன். இயேசுவைப் பற்றிய ஒரு திரைப்படத்தில் வருவது போலவும் இந்த காட்சியைக் கற்பனை செய்து கொள்ளலாம். இயேசு போதித்துக் கொண்டிருப்பார், அவரைச் சுற்றி எளிய மக்கள் அமர்ந்திருப்பர். எல்லாருடைய முகத்திலும் ஒரு வித அமைதி, ஆவல் காட்டப்படும். சூம்பியக் கை உள்ளவரும் அவ்வப்போது காட்டப்படுவார். மென்மையான இசை பின்னணியில் ஒலித்துக் கொண்டிருக்கும். திடீரென, இசை மாறும். காமெரா ஒரு பகுதியைக் காட்டும். அங்கு பரிசேயரும், மறைநூல் அறிஞரும் நின்று கொண்டிருப்பர். அவர்களைக் காணும் மக்கள் முகங்களில் ஒரு வித கலக்கம் தெரியும். இது வரை அங்கு இருந்த இதமானச் சூழ்நிலை மாறி, ஒரு இறுக்கமானச் சூழல் உருவாகும்.
வாழ்க்கையில் இதை நாம் கட்டாயம் உணர்ந்திருப்போம். நல்லதொரு சூழலில் நண்பர்களுடன் நாம் பேசி, சிரித்துக்கொண்டிருக்கும் வேளையில், நமக்குப் பிடிக்காத ஒருவர் அப்பக்கம் வந்தால், ஆனந்தமாய் இருந்த சூழல் மாறி, ஒரு வித மௌனம், இறுக்கமான மௌனம், அங்கு குடிகொள்வதை உணர்ந்திருப்போம். தொழுகைக் கூடத்தில் நிலவிய இறுக்கத்தைக் குறைக்க, அல்லது, உடைக்க, இயேசு முன்வருகிறார். சூம்பிய கையுடையவரிடம், "எழுந்து நடுவே நில்லும்." என்கிறார். இயேசு இவ்வாறு கூறியது, அங்கு நிலவிய இறுக்கத்தை இன்னும் கூட்டியது என்றே சொல்லவேண்டும்.

உடல் ஊனமுற்றவர்களை கூர்ந்து பார்ப்பதே அநாகரிகமானச் செயல் என்று இக்காலத்தில் நமக்குப் பல வழிகளில் சொல்லித்தரப்படுகிறது. அவர்களது ஊனத்தைப் பெரிதுபடுத்தாமல், முடிந்தவரை, அவர்களை, இயல்பான வாழ்க்கையில் ஈடுபடுத்த அனைவரும் முயலவேண்டும் என்பது, இன்று பள்ளிகளில், குழந்தைகளுக்கும் சொல்லித்தரப்படும் ஒரு பாடம். உடலில் நோயோ, குறையோ உள்ளவர்களை மதிக்காத யூத சமூகத்தில், உடல் குறை உள்ள ஒருவரை, இயேசு, ஏன் கூட்டத்தின் நடுவில் வந்து நிற்கச் சொல்கிறார்? குறையுள்ளவர் மனமும், உடலும் அதிகம் பாடுபட்டிருக்குமே. உடல் குறையுள்ளவர்களை சமுதாயத்தின் ஓரத்தில் தள்ளி, அவர்களை வேதனைப்படுத்தும் தன் சமூகத்தினர், குறிப்பாக, மதத் தலைவர்கள் இத்தருணத்தில் நல்ல பாடங்களைப் பயிலவேண்டும் என்ற ஆவலில், இயேசு, கைசூம்பிய மனிதரை தொழுகைக் கூடத்தின் நடுவே நிறுத்துகிறார்.

குறையுள்ள அந்த மனிதரைப் பகடைக்காயாக்கி, அவரை குணமாக்கினாலும், குணமாக்காவிட்டாலும் இயேசுவை எப்படியாவது மடக்கிவிடலாம் என்று நினைத்த அந்த மதத் தலைவர்களின் திட்டங்களை நிலைகுலையச் செய்வதற்கு, இயேசு, இந்த வழியைக் கடைபிடிக்கிறார். ஊனமுள்ள அந்த மனிதர் நடுவில் வந்து நின்றதும், அவரது குறையைக் கண்டதும், அங்கிருந்த எளிய மக்களின் மனதில் இரக்கம் அதிகம் பிறந்திருக்கும். "ஐயோ பாவம் இந்த மனுஷன். இவரைக் கட்டாயம் இயேசு குணப்படுத்துவார்..." என்று பரிதாபமும், நம்பிக்கையும் கலந்த மன நிலையில் அந்த மக்கள் அமர்ந்திருக்கின்றனர். இயேசுவின் கேள்வி, அவர்களைத் தட்டி எழுப்புகிறது. இயேசு அவர்களை நோக்கி, உங்களிடம் ஒன்று கேட்கிறேன்; ஓய்வுநாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை?” என்று கேட்டார்.

இயேசு யாரிடம் இந்தக் கேள்வியை எழுப்புகிறார்? மக்களிடம் அல்ல. தன் போதனைகளால், ஏற்கனவே மக்களின் மனதில் ஓய்வுநாளைப் பற்றி நல்ல கருத்துக்களை உருவாக்கியிருப்பார். இந்தக் கேள்வி மதத்தலைவர்களுக்கு. அவர்களிடமிருந்து பதில் எதையும் காணோம். ஓய்வுநாளை வைத்து இயேசுவை மடக்கிவிடலாம் என்று கணக்கு போட்டுக் கொண்டிருந்த மதத் தலைவர்கள், தங்களிடமே இந்த கேள்வி எழுப்பப்படும் என்று கொஞ்சமும் நினைத்திருக்க மாட்டார்கள். வாயடைத்து நின்றார்கள்.
அங்கே நிலவிய அமைதியை, நல்லது செய்வதற்கு, மக்களும், மதத் தலைவர்களும் தந்த சம்மதமாக இயேசு எடுத்துக்கொண்டு, நல்லது செய்கிறார். நோயுற்றவரின் கை நலமடைந்தது. சூழ இருந்த மக்களின் மனங்களும் நலமடைந்தது. தான் வாய் திறந்து வார்த்தைகளால் எதுவும் கேட்காமலேயே இயேசு தனக்கு ஆற்றிய இந்த அற்புதத்தைக் கண்டு, அந்த மனிதர் தன் வாழ்நாளெல்லாம் நன்றியுடன் வாழ்ந்திருப்பார். அனால், இயேசுவிடம் குற்றம் காணும் நோக்குடன், தொழுகைக் கூடத்தில் காத்திருந்த மறைநூல் அறிஞரும் பரிசேயரும் கோபவெறி கொண்டு, இயேசுவை என்ன செய்யலாம் என்று ஒருவரோடு ஒருவர் கலந்து பேசினர் என்று, இந்த நற்செய்திப் பகுதி நிறைவடைகிறது.

ஒரு மனிதர் நல்லது செய்யும்போது, மாலையிட்டு மரியாதை செய்வதற்கு பதிலாக, கோபவெறி கொண்டு இயேசுவை என்ன செய்யலாம் என்று யோசிக்கிறார்களே, இவர்களெல்லாம் மனிதர்கள்தானா? என்ற நியாயமானக் கோபம் நமக்கு எழலாம். தயவுசெய்து உடனே நீதி இருக்கையில் அமர்ந்து, தீர்ப்பை வாசித்துவிட வேண்டாம். வழக்கு என்று வரும்போது இரு பக்கமும் உண்டல்லவா? இயேசுவின் பக்கம் நியாயம் இருப்பது வெட்ட வெளிச்சம். ஆனால், அவருக்கு எதிர்பக்கம் இருப்பவர்களுக்கும் ஏதாவது ஒரு காரணம் இருக்க வேண்டும், இல்லையா?  அடுத்த விவிலியத்தேடலில் மறை நூல் அறிஞர், பரிசேயர் இவர்கள் பக்கமிருந்து ஓய்வுநாள் பற்றிய எண்ணங்களை அறிய முயல்வோம்.

No comments:

Post a Comment