24 January, 2017

விவிலியத்தேடல் : வேதனை வேள்வியில் யோபு – பகுதி 4

Why does God allow Pain and Suffering?

கடந்த ஒரு வாரமாக, தமிழக இளையோர் மேற்கொண்ட ஓர் அறப்போராட்டம், உலகினரின் கவனத்தை ஈர்த்துள்ளது என்பதை மறுக்க இயலாது. குறிப்பாக, இளையோரிடம் காணப்பட்ட கட்டுப்பாடு, ஒற்றுமை, கொள்கையை மட்டும் முன்னிறுத்திப் போராடிய துணிவு, ஆகியவை, அனைவரையும் வியக்கவைத்தன. இளையோருடன், இல்லத்தரசிகள், வயது முதிர்ந்தோர், குழந்தைகள் என்று அனைவரும் இணைந்தது, நமக்கு மகிழ்வையும், நம்பிக்கையையும் அளித்தது. இத்திங்களன்று, இந்தப் போராட்டம், சில கசப்பான திருப்பங்களைச் சந்தித்திருப்பது, மனதை வேதனைப்படுத்துகிறது; பல கேள்விகளை எழுப்புகிறது.

நம்மைச் சுற்றி நிகழ்வனவற்றிற்கு விளக்கங்கள் தருவதும், அவை குறித்து கேள்விகள் எழுப்புவதும், மனிதர்களாகிய நாம் எப்போதும் பின்பற்றும் செயல்பாடு. அவற்றில் சில, சரியாக இருக்கும், வேறு சில, குத்துமதிப்பான, அல்லது, கற்பனை கலந்த விளக்கங்களாக இருக்கும். உலகில் தோன்றும் அனைத்து உயிரினங்களிலும், மனிதர்கள் மட்டுமே, 'meaning-makers' அதாவது, 'பொருள் உருவாக்குபவர்கள்' என்பது, பல அறிஞர்களின் கருத்து. இதையே, யூத மத குரு, ஹெரால்டு குஷ்னர் அவர்கள், தான் எழுதியுள்ள 'The Book of Job - When Bad Things Happened to a Good Person' அதாவது, 'யோபு நூல் - நல்லவர் ஒருவருக்கு பொல்லாதவை நிகழ்ந்தபோது' என்ற நூலின் முதல் பிரிவில் குறிப்பிட்டுள்ளார்.

மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவரும், நம் தனிப்பட்ட வாழ்வில் நிகழ்வனவற்றையும், உலகில் நிகழ்வனவற்றையும் புரிந்துகொள்வதற்கு முயற்சிகள் மேற்கொள்கிறோம். நம் குடும்பத்தில் ஒருவருக்கு புற்றுநோய் உருவாகியுள்ளது என்பதை அறிந்ததும், நிலைகுலைந்து போகிறோம். இருப்பினும், விரைவில், அந்த நோய் உருவாகக் காரணம் என்ன என்பதைப் புரிந்துகொள்ளவும், அந்தக் காரணத்தை நீக்கவும் முயற்சிகள் எடுக்கிறோம். ஏதோ ஒரு நாட்டில், நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்ததும், வேதனைப்படுகிறோம்; அந்த இயற்கைப் பேரிடர் ஏன் அந்த நேரத்தில், அந்த இடத்தில் ஏற்பட்டது என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிகள் எடுக்கிறோம்.
நேரடியாக நம்மைப் பாதிப்பனவற்றிலும், செய்தியாக நம்மை வந்து அடைவனவற்றிலும் காரண, காரியங்களை ஆய்வு செய்து, ஒவ்வொரு நிகழ்வுக்கும் அர்த்தம் தருவதால், அந்த நிகழ்வைக் குறித்து நாம் கொண்டுள்ள அச்சத்தை குறைத்துக்கொள்ள முயல்கிறோம். இல்லையெனில், அந்த அச்சம், நம்மை ஆட்டிப்படைக்கும், செயலிழக்கச் செய்துவிடும்.

சில வேளைகளில், வாழ்வில் எதிர்பாராத மகிழ்வு உண்டாகும்போது, அந்நிகழ்வுகளிலும் அர்த்தம் காண முயல்கிறோம். நாம் தரும் அர்த்தம், கண்டுபிடிக்கும் காரணம், குருட்டு நம்பிக்கையாக, மூட நம்பிக்கையாக, பலருக்குத் தெரியலாம். எடுத்துக்காட்டாக, நம் குடும்பத்தில் ஒருவர், பல மாதங்களாக எதிர்பார்த்து காத்திருந்த வேலை, அன்று வீடுதேடி வருகிறது என்று வைத்துக்கொள்வோம். அது நிகழ்ந்ததற்கு, இது காரணம், அது காரணம் என்று பல காரணங்களைக் கண்டுபிடிக்க முயல்கிறோம். அன்றைய தேதியின் எண்களைக் கூட்டினால் வரும் ஒரு குறிப்பிட்ட எண், அன்று காலை நாம் உடுத்தியிருந்த சட்டை, அன்று அதிகாலை நாம் கண்விழித்ததும், நம் கண்ணில் பட்ட முதல் பொருள், அல்லது, முதல் நபர்... என்று பல காரணங்கள், அந்த நல்ல செய்தியுடன் இணைக்கப்படுகின்றன.
ஒருசிலர், வாழ்வில் நிகழும் நல்லவை, தீயவை அனைத்திற்கும், பிறந்த நட்சத்திரம், பிறந்த நேரம், ஜாதகம், கைரேகை என்று பல காரணங்களை முன்னிறுத்துவதையும் காணலாம். இவை அனைத்திற்கும் மேலாக, உலக நிகழ்வுகள், தனிப்பட்ட வாழ்வு நிகழ்வுகள் அனைத்திலும், இறைவனை நாம் இணைக்க முயல்கிறோம். குறிப்பாக, அந்நிகழ்வுகள் துயர நிகழ்வுகளாக இருந்தால், அவற்றை, இறைவன் தந்த தண்டனை என்று எளிதில் சுட்டிக்காட்டிவிடுகிறோம்.

நாம் தற்போது சிந்தித்துவரும் குஷ்னர் அவர்களின் நூலில், ஹெயிட்டி நாட்டில் நிகழ்ந்த நிலநடுக்கத்தைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். 2010ம் ஆண்டு, சனவரி 12ம் தேதி, ஹெயிட்டி நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம், ஏறத்தாழ 1,60,000 பேரின் உயிரைப் பறித்தது. இன்னும் பல இலட்சம் பேரை பெரிதும் பாதித்தது. இந்நிலநடுக்கத்தைப் பற்றி பேசிய ஒரு கிறிஸ்தவப் போதகர், 200 ஆண்டுகளுக்கு முன், ஹெயிட்டியில் வாழ்ந்தவர்கள், தங்கள் நாட்டின் விடுதலைக்காக, சாத்தானுடன் ஒப்பந்தங்கள் செய்துகொண்டனர் என்றும், அதன் விளைவாகவே, இறைவன் அவர்களைத் தண்டித்தார் என்றும் கூறியதை, குஷ்னர் அவர்கள், தன் நூலில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதைத் தொடர்ந்து அவர் கூறும் எண்ணங்கள் நம்மைச் சிந்திக்கத் தூண்டுகின்றன: "இத்தகைய விளக்கங்கள் உண்மைக்குப் புறம்பானவை மட்டுமல்ல, அவை, மிகத் தரக்குறைவான விளக்கங்கள். இத்தகைய விளக்கங்களைக் கொண்டு, இந்த போதகர்கள் இறைவனைப் பாதுகாப்பதாக நினைத்தால், அது, முற்றிலும் தவறு. இவ்விதம் போதிக்கப்படும் இறைவன், நம்மை அச்சத்தால் ஆட்டிப்படைக்கலாம், ஆனால், நம் ஆராதனைக்கு உரியவராக இருக்கமுடியாது."

துன்பம் நம்மைச் சூழும்போது, கடவுள் இருக்கிறாரா, அப்படியே அவர் இருந்தால் என்னதான் செய்துகொண்டிருக்கிறார், இப்போது எங்கே மறைந்துவிட்டார் என்று கேள்விகள் பல மனதில் குவியும். பல சமயங்களில், துன்ப நேரத்தில், நாமே ஒரு சில விடைகளையும் நமக்குச் சொல்லிக்கொள்கிறோம். நமக்கு வந்திருக்கும் துன்பம், கடவுளிடமிருந்து வந்திருக்கிறது என்பது, அந்த விடைகளில் ஒன்று. கடவுளிடமிருந்து வரும் துன்பங்களையும், இரு வழிகளில் நாம் புரிந்துகொள்ள முயல்கிறோம். நாம் செய்த தவறுகளுக்காக, கடவுள், இத்துன்பத்தின் வழியாக, நம்மைத் தண்டிக்கிறார், நமக்குப் பாடம் சொல்லித் தருகிறார் என்பது அடிக்கடி நாம் சொல்லும் பதில். அல்லது, நமது விசுவாசத்தைச் சோதிக்கவோ, பலப்படுத்தவோ, கடவுள் துன்பங்களைத் தருகிறார் என்பது, நாம் சொல்லும் மற்றொரு பதில்.

துன்பங்களின் வழியாக, இறைவன் நம்மைத் கண்டிக்கிறார் என்பது, புதிதான எண்ணங்கள் அல்ல. இஸ்ரயேல் மக்கள் மத்தியில், இத்தகைய எண்ணங்கள் பரவலாக இருந்தன. இதோ ஒரு சில எடுத்துக்காட்டுகள்:
இறைவாக்கினர் எசாயா 10: 5
ஆண்டவர் கூறுவதாவது: அசீரிய நாடு! சினத்தில் நான் பயன்படுத்தும் கோல் அது: தண்டனை வழங்க நான் ஏந்தும் தடி அது.
தாவீதின் மகனான சாலமோனை, தான் எவ்வாறு வழி நடத்துவேன் என்று, நாத்தானின் வழியாக இறைவன் பேசுகிறார்.
சாமுவேல் - இரண்டாம் நூல் 7: 14
நான் அவனுக்குத் தந்தையாக இருப்பேன். அவன் எனக்கு மகனாக இருப்பான். அவன் தவறுசெய்யும்போது மனித இயல்புக்கேற்ப அடித்து, மனிதருக்கே உரிய துன்பங்களைத் தருவேன்.
நீதிமொழிகள் நூலின் ஆசிரியர் கூறும் அறிவுரைகளில் ஒன்று இது:
நீதிமொழிகள் 13: 24
பிரம்பைக் கையாளாதவர், தம் மகனை நேசிக்காதவர்: மகனை நேசிப்பவரோ அவனைத் தண்டிக்கத் தயங்கமாட்டார்.

கடவுள் தண்டிக்கிறார் என்பதை, பல சமயங்களில், வெகு எளிதாக, மேலோட்டமாகப் புரிந்து கொள்கிறோம். நாமே சரியாகப் புரிந்து கொள்ளாத, அல்லது மேலோட்டமாகப் புரிந்து கொண்ட எண்ணங்களை, பிறருக்கு, முக்கியமாக, குழந்தைகளுக்குச் சொல்லியும் தருகிறோம்.
எடுத்துக்காட்டாக, வேகமாக ஓடி, கீழே விழுந்து அடிபடும் குழந்தையிடம், சக்தியை மீறிச் செயல்படுவது ஆபத்து என்று சொல்லித் தருவதற்குப் பதிலாக, "நான் ஓடாதேன்னு சொன்னேன். நீ கேட்கல. இப்பப்பாரு. கடவுள் உன்னைக் கீழே விழவெச்சுட்டார்" என்று, எளிதாகச் சொல்லிவிடுகிறோம். இப்படி நாம் சொல்லும்போது, அக்குழந்தையின் பிஞ்சு மனதில் எவ்வகையான கடவுளை நாம் புகுத்துகிறோம் என்பதைச் சிந்திக்கவேண்டும். குழந்தையைக் கட்டுப்படுத்த, குழந்தையின் எல்லைகளைச் சொல்லித்தர, நேரம் எடுத்துக்கொள்ளாமல், வெகு எளிதாக, கடவுளை அங்கு நுழைப்பதால், ஒரு தவறான கடவுளை, குழந்தைக்கு ஊட்டிவிடுகிறோம்.

இப்படி, சிறு காரியங்களில், நாம் நுழைத்துவிடும் கடவுளை, சில நேரங்களில் பெரிய விடயங்களிலும் நுழைத்துவிடுகிறோம். கடவுளைப்பற்றி, மக்களிடம் தவறாக எடுத்துச் சொல்லும் போதகர்களைக் கண்டு வருத்தப்பட்டிருக்கிறேன். சில சமயங்களில் கோபமும் பட்டிருக்கிறேன். அப்படி எனக்குள் கோபத்தை, வருத்தத்தை உண்டாக்கிய ஒரு நிகழ்ச்சி இது.
இந்தியாவின் ஒரிஸ்ஸா மாநிலத்தில், தொழு நோயாளர்கள் மத்தியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்து வந்த Graham Staines என்ற கிறிஸ்தவப் போதகரும், அவரது இரு மகன்களும், 1999ம் ஆண்டு, சனவரி 23ம் தேதி, இந்து மத அடிப்படைவாதிகளால், உயிரோடு எரிக்கப்பட்டனர். அதே ஆண்டு, அக்டோபர் மாதம், ஒரிஸ்ஸாவில் வீசிய ஒரு பெரும் புயல், மற்றும், வெள்ளத்தில் 10,000 பேருக்கு மேல் உயிரிழந்தனர். இவ்விரண்டையும் இணைத்துப் பேசிய சில அருள்பணியாளர்கள், மதப் போதகர்கள், ஒரிஸ்ஸாவில்,  கிறிஸ்தவப் போதகரும், அவரது இரு மகன்களும் கொல்லப்பட்ட குற்றத்துக்குத் தண்டனையாக, பெரியதொரு புயலையும், வெள்ளத்தையும் இறைவன் அனுப்பினார் என்று, கடவுள் மேல் பழி சுமத்தினர்.

துன்பத்தையும், இறைவனையும் இணைத்து நாம் மேற்கொள்ளும் சிந்தனைகளில், மிக அதிகமான நெருடல்களை உருவாக்கும் ஒரு கேள்வி, மாசற்றவர்கள், நல்லவர்கள் ஏன் துன்புறவேண்டும் என்ற கேள்வி. விவிலியத்தில் இந்தக் கேள்வி, பல நூல்களில், பல வடிவங்களில் எழுப்பப்பட்டுள்ளது. அவற்றில், யோபு நூல், இந்தக் கேள்வியை மிக ஆழமாகச் சிந்திக்க வழிவகுக்கிறது. 42 பிரிவுகளைக் கொண்ட இந்நூலில், யோபு, அவரது மனைவி, நண்பர்கள், இறுதியாக இறைவன் என்று பலரும் பங்கேற்கும் ஓர் உரையாடல், 40 பிரிவுகளில் கூறப்பட்டுள்ளது. விவிலியத்தில் அதிக சவால்கள் நிறைந்தது, யோபு நூல் என்று குஷ்னர் அவர்கள் குறிப்பிடும் இந்நூலில், நம் தேடல் பயணம் தொடர்கிறது.




No comments:

Post a Comment