01 February, 2017

விவிலியத்தேடல் : வேதனை வேள்வியில் யோபு – பகுதி 5

Jacob wrestling with God

புகழ்பெற்ற கிரேக்க எழுத்தாளர், Nikos Kazantzakis அவர்கள் 'Report to Greco' என்ற தலைப்பில் எழுதியுள்ள நினைவுத் தொகுப்பில், பின்வரும் கதையைப் பகிர்ந்துள்ளார்:
ஓர் இளைஞனாக, கோடைவிடுமுறையை, ஒரு துறவு மடத்தில் கழிக்கச் சென்றேன். அங்கு, வயது முதிர்ந்த ஒரு துறவியுடன் நான் பேசிக்கொண்டிருந்தபோது, "குருவே, நீங்கள் இன்னும் சாத்தானுடன் போராடுகிறீர்களா?" என்று கேட்டேன். "இல்லை. நான் இளவயதில் போராடியிருக்கிறேன். இப்போது, வயது முதிர்ந்து, தளர்ந்துவிட்டேன். சாத்தானும், வயது முதிர்ந்து, தளர்ந்துவிட்டான். எனவே, நான் அவனை விட்டுவிட்டேன்; அவனும் என்னை விட்டுவிட்டான்" என்று அவர் பதில் சொன்னார். "அவ்வாறெனில், உங்கள் வாழ்வு இப்போது சுமுகமாக, எளிதாகச் செல்கிறது. அப்படித்தானே?" என்று நான் கேட்டதும், வயது முதிர்ந்த அத்துறவி, "இல்லை, இல்லை. வாழ்க்கை, இப்போது, முன்பைவிட அதிகக் கடினமாக உள்ளது. இப்போது நான் கடவுளுடன் போராடுகிறேன்" என்றார்.

"கடவுளுடன் போராடுதல்" என்ற சொற்றொடரில் ஆழமான எண்ணங்கள், வாழ்வியல் அனுபவங்கள் பொதிந்துள்ளன. இறைவனை ஒருவர் நேருக்கு நேர் பார்த்தாலே, அது, மரணத்திற்கு சமம் என்று நம்பியிருந்த இஸ்ரயேல் மக்கள் நடுவில், இறைவனோடு இரவு முழுவதும் போராடியவர் என்ற புகழுக்குரியவர், யாக்கோபு. தொடக்க நூல் 32ம் பிரிவில் விவரிக்கப்பட்டுள்ள இந்த போராட்டத்தின் இறுதியில், யாக்கோபு முற்றிலும் மாற்றம் பெறுகிறார். அவரது பெயரும், 'யாக்கோபு' என்பதிலிருந்து, 'இஸ்ரயேல்' அதாவது, இறைவனோடு போராடுபவர் என்று மாற்றம் பெறுகிறது.
தன்னுடன், சாத்தானுடன், கடவுளுடன் போராடுதல், அனைத்து மனிதர்களுக்கும் பொதுவான ஓர் அனுபவம். குறிப்பாக, நேரிய மனதுடையவர்கள், இந்தப் போராட்டத்தை அதிக ஆழமாக, வாழ்நாள் முழுவதும் உணரக்கூடும். சூழ்நிலையில் துவங்கி, ஆழ்மனம் வரை செல்லக்கூடிய இப்போராட்ட அனுபவத்தின் முழுப் பரிமாணங்களையும் சொல்லித்தருவது, யோபு நூல். மனித வாழ்வின் மறுக்கமுடியாத பல உண்மைகளைச் சொல்லித்தரும், யோபு நூல் என்ற பள்ளிக்குள் இன்று அடியெடுத்து வைக்கிறோம்.

இலக்கிய வடிவம் என்ற அடிப்படையில், விவிலியத்தில் காணப்படும் நூல்களை, வரலாறு, சட்டம், ஞானம், கவிதை, இறைவாக்கு, திருமுகம் என்ற பல பிரிவுகளாக வகைப்படுத்தலாம். தொடக்க நூல், அரசர்கள் நூல், திருத்தூதர் பணிகள் போன்ற நூல்கள், வரலாற்று நூல்கள். லேவியர், இணைச்சட்டம் போன்ற நூல்கள், சட்ட நூல்கள். யோபு, நீதிமொழிகள், சாலமோனின் ஞானம் போன்ற நூல்கள், ஞான நூல்கள். எசாயா, எரேமியா போன்றவை, இறைவாக்கு நூல்கள்.
யூதர்களின் விவிலியத்தில், சட்ட நூல்களும், இறைவாக்கினர் நூல்களும் முக்கிய இடம் வகிக்கின்றன. இவற்றைத் தொடர்ந்து முக்கியமென கருதப்படும், திருப்பாடல்கள், யோபு நூல், நீதிமொழிகள் ஆகியவை, ஞான நூல்கள், அல்லது, 'உண்மையின் நூல்கள்' என்று அழைக்கப்படுகின்றன. ஞான நூல்கள், அல்லது, உண்மையின் நூல்கள், கால வரையறைக்கு, வரலாற்றுக்கு அப்பாற்பட்டவை. அவை, எக்காலத்திற்கும் உகந்த உண்மைகளைச் சொல்வதோடு, வாழ்வுக்குத் தேவையான அடிப்படைக் கேள்விகளை எழுப்புகின்றன.

எக்காலத்திற்கும் உகந்த உண்மையை, ஞானத்தை வழங்கும் நூல்களில் ஒன்றான யோபு நூல், உண்மையில் இரு நூல்களின் இணைப்பு என்பது, பல விவிலிய ஆய்வாளர்களின் கருத்து. யோபுவின் பாரம்பரியக் கதை (The Fable of Job) மற்றும், யோபுவின் கவிதை (The Poem of Job) என்ற இரு நூல்களின் இணைப்பே, தற்போது விவிலியத்தில் இடம்பெற்றுள்ள யோபு நூல். இந்நூலின் 1,2,42 ஆகிய மூன்று பிரிவுகளில், யோபுவின் பாரம்பரியக் கதை இடம்பெற்றுள்ளது. 3ம் பிரிவு முதல், 42ம் பிரிவு 6ம் இறைச்சொற்றொடர் முடிய, யோபுவின் கவிதை என்ற நூல் இடைச் செருகலாக இணைக்கப்பட்டுள்ளது. யோபுவின் பாரம்பரியக் கதை, தெளிவான, எளிமையான உரைநடை வடிவில் அமைந்துள்ளது. யோபுவின் கவிதையோ, மறைமுகமான, இரகசியங்களை உள்ளடக்கிய, பல பொருள் கொண்ட செய்யுள் நடை வடிவில் அமைந்துள்ளது. இதோ, யோபு நூலின் அறிமுக வரிகள்...

யோபு நூல் 1: 1-3
ஊசு என்ற நாட்டில் யோபு என்ற ஒருவர் இருந்தார். அவர் மாசற்றவரும் நேர்மையானவருமாய் இருந்தார். கடவுளுக்கு அஞ்சித் தீயதை விலக்கி வந்தார்.  அவருக்கு ஏழு புதல்வரும் மூன்று புதல்வியரும் பிறந்தனர். அவருடைய உடைமைகளாக ஏழாயிரம் ஆடுகளும், மூவாயிரம் ஒட்டகங்களும், ஐந்நூறு ஏர்க் காளைகளும், ஐந்நூறு பெண் கழுதைகளும் இருந்தன. பணியாள்களும் மிகப் பலர் இருந்தனர். கீழை நாட்டு மக்கள் எல்லாரிலும் இவரே மிகப் பெரியவராக இருந்தார்.

'ஓர் ஊரில் ஓர் அரசர் இருந்தார்' என்று பாரம்பரியக் கதைகள் ஆரம்பமாவதைப்போல், இந்நூலின் ஆரம்ப வரிகள் அமைந்துள்ளன. 'யோபு' என்ற பெயர், எபிரேய மொழியில், இயோவ் (Iyov), அல்லது, இய்யோபு (Iyyob) என்று அழைக்கப்படுகிறது. இப்பெயர், 'துன்புறுத்தப்படும் ஒருவர்', 'மனம் வருந்தும் ஒருவர்', அல்லது, 'ஓர் எதிரியாக இறைவனால் நடத்தப்பட்டவர்' என்று பலவாறாகப் பொருள் பெறுகிறது. யோபுவைக் குறித்த அறிமுக வரிகளில், 'மாசற்றவர்', 'நேர்மையாளர்', மற்றும் 'கடவுளுக்கு அஞ்சித் தீயதை விலக்கி வந்தவர்' என்ற சொற்றொடர்களைக் காண்கிறோம். அவரது பிள்ளைச் செல்வம், அவரது கால்நடைச் செல்வம் அனைத்தும் முழுமையான எண்களில் கூறப்பட்டுள்ளன. முழுமையான இவ்வெண்கள் வழியே, இறைவனிடமிருந்து நிறைவான ஆசீர் பெற்றவர் யோபு என்று சித்திரிக்கப்பட்டுள்ளார்.

யோபு நூலின் நாயகர், இஸ்ரயேல் குலத்தைச் சேர்ந்தவர் அல்ல. இன்னும் சொல்லப்போனால், அவர் சாதாரண, சராசரி, தினசரி மனிதர்களில் ஒருவர். இஸ்ரயேல் சமுதாயத்தைச் சூழ்ந்திருந்த சுமேரியா, எகிப்து ஆகிய நாட்டு பாரம்பரியங்களிலும் இவரையொத்த ஒருவரைக் குறித்து கதைகள் வழக்கத்தில் இருந்தன. இவ்வாறு, பல கலாச்சாரங்களிலும் யோபு கதை பேசப்பட்டதால், இக்கலாச்சாரங்களில் வாழ்ந்த அனைவரும், "துன்பம் ஏன்?", "மாசற்றவர் ஏன் துன்புறவேண்டும்?" என்ற கேள்விகளை எழுப்பி, பதில்கள் தேட முயன்றனர் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.

"யோபு.... கடவுளுக்கு அஞ்சித் தீயதை விலக்கி வந்தார்" (யோபு 1:1) என்று இந்நூலின் துவக்கத்தில் கூறியிருப்பது, கடவுளுக்கு அஞ்சுவதுபற்றி நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது. கடவுளுக்கு அஞ்சி என்ற சொற்றொடரைச் சிந்திக்கும்போது, கடவுளின் தண்டனைகளுக்கு அஞ்சி, யோபு, தீயதை விலக்கி வந்தார் என்று பொருள் கொண்டால், யோபு பெற்றிருந்தது, அடிமைத்தனமான ஒரு மனநிலையோ என்று எண்ணத் தோன்றுகிறது. விவிலியத்தில், யோபு, ஆபிரகாம் என்ற இருவர், 'கடவுளுக்கு அஞ்சியவர்கள்' (யோபு 1:1, தொடக்க நூல் 22:12) என்று குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்த அச்சம், இறைவனுக்கும், அவரது கட்டளைகளுக்கும் கீழ்ப்படிய வேண்டும், இல்லையெனில் தண்டிக்கப்படுவோம் என்ற கட்டாயத்தில் எழுந்த அச்சம் அல்ல. மாறாக, நன்மை, தீமை இரண்டையும் தாங்களாகவே உய்த்துணர்ந்து, இறைவனுக்கு ஏற்புடையவர்களாக வாழ்வதற்கு இவ்விருவரும் முயன்றனர்.

கடவுள் மீது கொள்ளும் அச்சம், அனைத்து ஞானத்திற்கும் அடிப்படை என்பது, விவிலியக் கூற்று: "ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம்; தூயவராகிய அவரைப்பற்றிய உணர்வே மெய்யுணர்வு." (நீதிமொழிகள் 9:10) ஆபிரகாம், யோபு என்ற இருவரும், 'இறை அச்சம்' என்ற அடித்தளத்தின் மீது, தங்கள் வாழ்வை கட்டியெழுப்பியவர்கள். எனவே, அவர்கள் இருவரும் நீதிமான்களாக, ஞானிகளாக வாழ்ந்தனர் என்று கூறமுடியும்.
எக்காரணம் கொண்டும், இறைவனுக்கு எதிராக எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதில், யோபு கண்ணும் கருத்துமாகச் செயல்பட்டார் என்பதை, இந்நூலின் அறிமுக வரிகள் இவ்வாறு விளக்குகின்றன:
யோபு நூல் 1: 4-5
அவருடைய புதல்வர்கள் ஒவ்வொருவரும் தம் வீட்டில் தமக்குரிய நாளில் விருந்து தயாரித்து, தம் மூன்று சகோதரிகளைத் தம்முடன் உண்டு குடிப்பதற்கு அழைப்பது வழக்கம். விருந்து நாள்களின் முறை முடிந்ததும், யோபு அவர்களை வரவழைத்துத் தூய்மைப்படுத்துவார். "என் பிள்ளைகள் ஒருவேளை பாவம் செய்து, உள்ளத்தில் கடவுளைத் தூற்றியிருக்கக்கூடும்" என்று யோபு நினைத்து, காலையில் எழுந்து அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப எல்லாருக்காகவும் எரிபலியை ஒப்புக்கொடுப்பார். யோபு எப்பொழுதும் இவ்வாறு செய்வது வழக்கம்.

யோபுவின் அப்பழுக்கற்ற வாழ்வை, முதல் காட்சியில் இவ்வாறு அரங்கேற்றும் இந்நூலின் ஆசிரியர், அடுத்த காட்சியை விண்ணகத்தில் உருவாக்குகிறார். ஒருநாள் தெய்வப் புதல்வர் ஆண்டவர் முன்னிலையில் ஒன்றுகூடினர். சாத்தான் அவர்கள் நடுவே வந்துநின்றான். (யோபு 1:6) என்று இக்காட்சி ஆரம்பமாகிறது.

இறைவனுக்கும், சாத்தானுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலின் விளைவாக, இறைவன் சாத்தானுக்கு வழங்கிய அனுமதிகள், யோபுவின் வாழ்வில் எவ்வகையான சூறாவளியை, நிலநடுக்கத்தை, எரிமலையை உருவாக்கின என்பதை நாம் அடுத்தவாரம் சிந்திப்போம்.


No comments:

Post a Comment