08 February, 2017

விவிலியத்தேடல் : வேதனை வேள்வியில் யோபு – பகுதி 6

The Lord gave and the Lord has taken away

இரு கற்பனைக் காட்சிகளுடன் இன்றைய நம் தேடலைத் துவக்குவோம். குடிபோதையில் ஒருவர், வாகனத்தை ஒட்டிச் செல்கிறார்; சாலையோரத்தில் இருந்த ஒரு மரத்தில் மோதி, அடிபடுகிறார். இது, முதல் காட்சி. இரண்டாவது காட்சியில், குடிபோதையில் வண்டி ஒட்டிச் செல்பவர், மரத்தில் மோதுவதற்குப் பதில், நடைபாதையில் சென்றுகொண்டிருந்த ஒரு சிறுவன் மீது மோதி, இருவரும் அடிபடுகின்றனர்.
இவ்விரு காட்சிகளையும் சிந்திக்கும்போது, முதல் காட்சியில் நடப்பது, நம் மனதை அதிகம் பாதிக்காது. ஒருவர் குடிபோதையில் வண்டியை ஒட்டி, மரத்தில் மோதி, அடிபட்டார் என்பதை அறியும்போது, அவர் பட்ட துன்பத்திற்கு அவரே காரணமாக இருந்தார் என்று, எளிதில் கூற முடிவதால், நம்மில் பாதிப்பு அதிகம் இல்லை.
ஆனால், ஒருவர், குடிபோதையில் வண்டியை ஒட்டி, பள்ளிக்குச் சென்ற ஒரு சிறுவன் மீது மோதினார் என்பதை அறியும்போது, குடிபோதையில் இருந்தவரின் தவறால், எப்பாவமும் அறியாத சிறுவன் ஏன் அடிபடவேண்டும் என்ற கேள்வியும், கூடவே, கோபமும் எழுகிறது.

கடந்த ஆண்டு, பிரேசில் நாட்டின் ரியோவில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் ஒலிம்பிக் விளையாட்டில், தங்கப்பதக்கத்தையும், இவ்வாண்டு, இந்தியக் குடியரசின் பத்மஸ்ரீ விருதையும் வென்ற இளையவர், மாரியப்பன் தங்கவேலு அவர்களின் வாழ்விலும், நாம் இரண்டாவது காட்சியில் சிந்தித்ததைப் போன்ற விபத்து நிகழ்ந்தது. 5 வயது நிறைந்த சிறுவன் மாரியப்பன், பள்ளிக்குச் சென்ற வழியில், ஒரு பேருந்து அவரது வலது கால் மீது ஏறி, அவர் கால் ஊனமுற்றார். அந்தப் பேருந்தை ஓட்டியவர், குடிபோதையில் இருந்தார். குடிபோதையில் பேருந்தை ஓட்டியவர், ஒரு மரத்தின்மீது மோதி, அவருக்கு மட்டும் அடிபட்டிருந்தால், அவர் செய்த தவறுக்குத் தகுந்த விளைவைச் சந்தித்தார் என்று நமக்கு நாமே சமாதானம் சொல்லிக்கொள்ளலாம். ஆனால், சாலையின் ஓரமாக, பள்ளிக்குச் சென்ற சிறுவன் மாரியப்பனுக்கு ஏன் இவ்விதம் நிகழவேண்டும் என்ற கேள்வி, பல ஆண்டுகள் அச்சிறுவனையும், அவரது குடும்பத்தையும் வேதனையில் ஆழ்த்தியிருக்கும்.
விடை கிடைக்காத அந்த வேதனைக் கேள்விக்கு, ரியோவில் விடை கிடைத்ததைப் போல் நம்மில் சிலர் எண்ணிப் பார்க்கலாம். அவர் தங்கப்பதக்கம் பெற்றபோது, "ஒருவேளை, மாரியப்பனுக்கு இந்த விபத்து நிகழ்ந்திராவிடில், அவரும் ஒரு சராசரி இளைஞனாக வளர்ந்திருப்பார். ஒலிம்பிக் பதக்கம் வெல்லும் அளவு, அவர் தன் திறமைகளை வளர்க்காமல் போயிருக்கலாம்" என்ற கோணத்திலும் நம் சிந்தனைகள் செல்வதை நாம் உணர்கிறோம். பதிலேதும் கிடைக்காமல் பல ஆண்டுகள் மாரியப்பனும், அவரது குடும்பத்தினரும் அடைந்த துன்பத்திற்கு, இவ்வாறு ஒரு விளக்கம் தந்து, நம்மில் பலர், ஓரளவு மன திருப்தி அடைந்திருப்போம்.
இது, மனித இயல்பு. நடக்கும் நிகழ்வுகளுக்கு, குறிப்பாக, துன்ப நிகழ்வுகளுக்கு ஏதாவது ஒருவகையில் காரணங்கள் தேடுவது, அல்லது, நாமாகவே, விளக்கங்கள் தருவது, மனித இயல்பு.

மாசற்றவரும், நீதிமானுமாகிய யோபின் வாழ்வில் ஒன்றன்பின் ஒன்றாக துன்பங்கள் வந்து சேருகின்றன. இவை ஏன் நிகழ்ந்தன என்பதை, யோபு நூலின் ஆசிரியர், கடவுளுக்கும், சாத்தானுக்கும் இடையே நிகழும் ஓர் உரையாடல் வழியே விளக்க முயற்சி செய்கிறார். யோபு நூல் முதல் பிரிவில், ஆசிரியர் சித்திரிக்கும் காட்சி இதோ:
யோபு 1:6-12
ஒருநாள் தெய்வப் புதல்வர் ஆண்டவர் முன்னிலையில் ஒன்றுகூடினர். சாத்தான் அவர்கள் நடுவே வந்துநின்றான். ஆண்டவர் சாத்தானிடம், "எங்கிருந்து வருகிறாய்?" என்று கேட்டார். சாத்தான் ஆண்டவரிடம் "உலகைச் சுற்றி உலவி வருகிறேன்" என்றான்.
ஆண்டவர் சாத்தானிடம், "என் உழியன் யோபைப் பார்த்தாயா? அவனைப் போல் மாசற்றவனும், நேர்மையானவனும், கடவுளுக்கு அஞ்சி தீமையானதை விலக்கி நடப்பவனும் மண்ணுலகில் ஒருவனும் இல்லை" என்றார். மறுமொழியாக, சாத்தான் ஆண்டவரிடம் "ஒன்றுமில்லாமலா யோபு கடவுளுக்கு அஞ்சி நடக்கிறான்? அவனையும் அவன் வீட்டாரையும், அவனுக்குரிய அனைத்தையும் நீர் சூழ்ந்து நின்று காக்கவில்லையா? அவன் கைவேலைகளுக்கு ஆசி வழங்கவில்லையா? அவன் மந்தைகளை நாட்டில் பெருகச் செய்யவில்லையா? ஆனால், உமது கையை நீட்டும்; அவனுக்குரியவற்றின்மீது கை வையும். அப்போது அவன் உம் முகத்திற்கு நேராகவே உம்மைப் பழிப்பான்" என்றான்.
ஆண்டவர் சாத்தானிடம், "இதோ! அவனுக்குரியவையெல்லாம் உன் கையிலே; அவன்மீது மட்டும் கை வைக்காதே" என்றார். சாத்தானும் ஆண்டவர் முன்னிலையினின்று புறப்பட்டான்.

யோபு நூலின் துவக்கத்தில் விவரிக்கப்பட்டுள்ள இக்காட்சி, மனதில் ஒரு சில சிந்தனைகளைத் தூண்டுகிறது, பாடங்களைப் புகட்டுகிறது. ஆண்டவர் முன்னிலையில் 'தெய்வப் புதல்வர்' கூடுவதை நம்மால் புரிந்துகொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும் முடிகிறது. ஆனால், 'சாத்தான் அவர்கள் நடுவே வந்து நின்றான்' என்று வாசிக்கும்போது, மனதில் நெருடல் எழுகிறது. கடவுளுக்கு முன் சாத்தான் எப்படி வந்து நிற்க முடியும்? அவனுக்கு உரிய இடம் நரகம் மட்டும்தானே? என்ற கேள்விகள் எழுகின்றன.
கடவுளின் முன்னிலை, என்பதை, விண்ணகம் என்ற ஓர் 'இடமாக' எண்ணும்போது, இந்த நெருடல் உருவாக வாய்ப்புண்டு. ஆனால், 'கடவுளின் முன்னிலை' என்பதை, ஒரு 'நிலை'யாக எண்ணும்போது, அனைத்தையும் அறியும் கடவுளின் 'ஞான நிலை'யில் சாத்தானும் இடம் பெறுகிறான் என்பதைப் புரிந்துகொள்கிறோம்.

அடுத்து, இப்பகுதியில், "எங்கிருந்து வருகிறாய்?" என்று ஆண்டவர் கேட்கும்போது, "உலகைச் சுற்றி உலவி வருகிறேன்" என்று சாத்தான் கூறும் வார்த்தைகள், நம் கவனத்தை ஈர்க்கின்றன. தீய சக்திகள் இவ்வுலகில் பல வடிவங்களில் உலவிவருவதை நாம் அனைவரும் வெவ்வேறு வழிகளில் உணர்ந்து வருகிறோம். தடுப்புச் சுவர்களை எழுப்பும் தலைவர்கள், தங்கள் சுயநலனைக் காத்துக்கொள்வதற்காக, ஒரு மாநிலத்தின் மக்களை கிள்ளுக்கீரையாக, பகடைக்காயாகப் பயன்படுத்தும் அரசியல்வாதிகள், தங்கள் ஆயுதங்களை விற்பனை செய்வதற்காக, மனசாட்சி ஏதுமின்றி, போர்களை ஆங்காங்கே தூண்டிவிடும் ஆயுத வர்த்தகர்கள், மனிதரை, பொருளாகக் கருதி, மனித வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் முதலாளிகள் என்று... பல வடிவங்களில், சாத்தான், இவ்வுலகில் உலவிவருவதை நாம் மறுப்பதற்கில்லை.

தொடர்ந்து, இப்பகுதியில், ஆண்டவருக்கும், சாத்தானுக்கும் இடையே நிகழும் உரையாடல், நாம் வாழ்வில் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு முக்கிய பாடத்தை உணர்த்துகிறது. மனிதர்களாகிய நம்மிடையே உள்ள 'இருப்பது' (being), 'வைத்திருப்பது' (having) என்ற இரு நிலைகளுக்கு இடையே உள்ள வேறுபாட்டை, இவ்வுரையாடல், வெளிச்சத்திற்குக் கொணர்கிறது. தன் ஊழியன் யோபு, மாசற்றவராக, நேர்மையாளராக, தனக்கு அஞ்சி, தீமையை விலக்கி நடப்பவராக 'இருக்கிறார்' என்று இறைவன் பெருமிதம் கொள்கிறார். யோபு, அவ்விதம் 'இருப்பதற்கு' அவர் 'வைத்திருக்கும்' சொத்துக்களே காரணம் என்று, சாத்தான் காரணம் சொல்கிறான்.
நாம் 'இருப்பது' போல் நம்மைக் காண்பவர், ஏற்றுக்கொள்பவர் இறைவன் என்பதையும், நாம் 'வைத்திருப்பது' எவ்வளவு என்பதைக் கணக்கிடுவது, சாத்தான் என்பதையும் இந்த உரையாடல் நமக்குத் தெளிவாக்குகிறது. ஒருவர் நல்லவராக 'இருப்பது', அவர் 'வைத்திருக்கும்' செல்வங்களைப் பொருத்தது என்றும், அச்செல்வங்கள் பறிக்கப்பட்டால், அவர் நல்லவராக 'இருக்கமுடியாது' என்றும் சாத்தான் வாதிடுகிறான். அவனது வாதம் தவறானது என்பதை நிலைநாட்ட, யோபு 'வைத்திருக்கும்' செல்வங்களைப் பறித்துக்கொள்ள, இறைவன், சாத்தானுக்கு உத்தரவு வழங்குகிறார்.

உத்தரவு பெற்ற சாத்தான், யோபின் கால்நடைகள், பயிர்கள், பணியாளர்கள் என்று ஒவ்வொன்றாக அழிக்கிறான். இறுதியாக, யோபின் புதல்வர், புதல்வியரையும் சாத்தான் அழிக்கிறான். இத்துயரங்கள் அனைத்தும், ஒரே நேரத்தில் நிகழாமல், ஒன்றன்பின் ஒன்றாக நிகழ்வதுபோல் நாம் இப்பகுதியில் வாசிக்கிறோம். 'பட்ட காலிலேயே படும்; கெட்ட குடியே கெடும்' என்ற பழமொழி, யோபின் வாழ்வில் அரங்கேறுவதுபோல் உணர்கிறோம்.
உறுதியாய் இருப்பவர் எவரும், ஒன்றன்பின் ஒன்றாக, தொடர்ந்து வரும் துன்பங்களால் தளர்ந்துவிடுவர் என்பதைச் சொல்ல, 'அடிமேல் அடி அடித்தால், அம்மியும் நகரும்' என்ற பழமொழியைப் பயன்படுத்துகிறோம். 'அடிமேல் அடி'யென வந்து சேர்ந்த துயரச் செய்திகளைக் கேட்ட யோபு, என்ன செய்தார், என்ன சொன்னார் என்பதை,  யோபு நூல், முதல் பிரிவின் இறுதி வரிகள் இவ்வாறு கூறியுள்ளன:

யோபு 1:20-22
யோபு எழுந்தார்; தம் ஆடைகளைக் கிழித்துக்கொண்டார்; தம் தலையை மழித்துக்கொண்டார். பின்பு தரையில் விழுந்து வணங்கி, "என் தாயின் கருப்பையினின்று பிறந்த மேனியனாய் யான் வந்தேன்; அங்கே திரும்புகையில் பிறந்த மேனியனாய் யான் செல்வேன்; ஆண்டவர் அளித்தார்; ஆண்டவர் எடுத்துக்கொண்டார். ஆண்டவரது பெயர் போற்றப்பெறுக!" என்றார். இவை அனைத்திலும் யோபு பாவம் செய்யவுமில்லை; கடவுள் மீது குற்றஞ்சாட்டவும் இல்லை.
காலம், காலமாக நாம் துயரங்களை அனுபவிக்கும் வேளையில், நம்மை இறைவனிடம் மீண்டும், மீண்டும் அழைத்துவர, ஆண்டவர் அளித்தார்; ஆண்டவர் எடுத்துக்கொண்டார். ஆண்டவரது பெயர் போற்றப்பெறுக! என்று யோபு சொல்லும் சொற்கள், நம்பிக்கை நற்செய்தியாக, இருந்து வருகின்றன. இவ்வளவு ஆழமான நம்பிக்கை கொண்ட யோபின் வாழ்வைச் சீர்குலைக்க, சாத்தான் தீட்டும் அடுத்தத் திட்டத்தை அடுத்த வாரம் சிந்திப்போம்.



No comments:

Post a Comment