12 July, 2017

விவிலியத்தேடல் : வேதனை வேள்வியில் யோபு – பகுதி 28


Blessed are those who mourn 

பாசமுள்ள பார்வையில் துயருறுவோர், ஆறுதல் பெறுவர், தருவர்...

தன் மகனின் மரணத்தால் மனம் நொறுங்கிப்போன ஓர் இளம் தாய், ஊருக்கு நடுவிலிருந்த கோவிலுக்கு ஓடிச்சென்றார். அங்கிருந்த ஒரு குருவிடம், "என் மகனை மீண்டும் உயிரோடு கொண்டுவர உங்களிடம் மந்திரங்கள் உள்ளனவா?" என்று அழுதபடியே கேட்டார், அந்தத் தாய்.
குரு அவரிடம், "ஊருக்குள் போ, மகளே... எந்த ஒரு வீட்டில், இதுவரை, துயரம் எதுவும் நுழையவில்லையோ, அந்த வீட்டிலிருந்து ஒரு கோதுமை மணியைக் கொண்டுவா. அதை வைத்து நாம் மந்திரம் சொன்னால், உன் மகன் உயிர் பெறுவான்" என்று சொல்லி அனுப்பினார்.
இளம் தாய் உடனே புறப்பட்டுச் சென்றார். அழகு நிறைந்த ஒரு மாளிகை அவர் கண்ணில் பட்டது. அங்கு கட்டாயம் துயரம் எதுவும் நுழைந்திருக்காது என்று எண்ணிய தாய், அங்கு சென்று, "துயரம் நுழையாத ஓர் இல்லத்தைத் தேடி வந்துள்ளேன்" என்று சொன்னதும், அங்கிருந்தோர் அவரிடம், தங்களுக்கு நேர்ந்த துயரங்களையெல்லாம் கொட்டித் தீர்த்தனர். துயரத்தில் இருக்கும் தன்னால் இவர்களுக்கு தகுந்த ஆறுதல் தரமுடியும் என்று எண்ணிய தாய், அந்த மாளிகையில் இரு நாள்கள் தங்கி, அங்கிருந்தோருக்கு ஆறுதல் கூறிவந்தார்.
துயரமற்ற இல்லமாக இருக்கக்கூடும் என்றெண்ணி, அவர் நுழைந்த அனைத்து இல்லங்களிலும் துயரம் இருந்ததைக் கண்டு, அவர்களுக்கு ஆறுதல் அளிப்பதிலேயே தன் நேரத்தையெல்லாம் செலவிட்டார், அந்த இளம் தாய். அவர் உள்ளத்தை நிறைத்திருந்த துயரம், அவரிடமிருந்து விடைபெற்றுச் சென்றதை உணர்ந்தார்.
"துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் ஆறுதல் பெறுவர்" (மத்தேயு 5: 4) என்று இயேசு கூறியுள்ளார். ஆறுதல் பெறுவதால் மட்டுமல்ல, ஆறுதல் தருவதாலும் அவர்கள் பேறுபெற்றவராவர்.
The Fear of the Lord

வேதனை வேள்வியில் யோபு – பகுதி 28

நம் அனைவருக்கும் அறிமுகமான ஒரு கதை, இன்றைய நம் விவிலியத் தேடலை துவக்கிவைக்கிறது... இலக்கியங்களைக் கரைத்துக் குடித்திருந்த ஒரு மேதை, ஒருநாள், படகிலேறி ஆற்றைக் கடந்துகொண்டிருந்தார். ஆற்றில் சிறிது தூரம் சென்றதும், அந்த மேதை, படகோட்டியிடம், "உனக்குக் கம்பராமாயணம் தெரியுமா?" என்று கேட்க, படகோட்டி, "தெரியாது, ஐயா" என்றார். "சே! உன் வாழ்வில் பாதியை நீ இழந்துவிட்டாயே!" என்று அறிவாளி வருத்தப்பட்டார். இன்னும் சிறிது தூரம் சென்றபின், மீண்டும் அந்த மேதை, படகோட்டியிடம், "சரி, உனக்கு ஏதாவது ஒரு திருக்குறளாவது சொல்லத் தெரியுமா?" என்று கேட்டார். படகோட்டி, தலை குனிந்து, "தெரியாது" என்று முணுமுணுத்தார். அறிவாளி அவரிடம், "உன் வாழ்வின் முக்கால் பகுதியை நீ இழந்துவிட்டாய்!" என்று கூறினார். அவ்வேளையில், படகு, நடு ஆற்றில், ஒரு சுழலில் சிக்கியது. அப்போது படகோட்டி, அறிவாளியிடம், "ஐயா! உங்களுக்கு நீச்சல் தெரியுமா?" என்று கேட்க, அறிவாளி, "தெரியாது!" என்று சொன்னார். "அப்படியானால், நீங்கள் இப்போது உங்கள் முழு வாழ்வையும் இழந்துவிட்டீர்கள்" என்று சொல்லிவிட்டு, படகோட்டி, தண்ணீரில் குதித்து, நீந்திச்சென்றார் என்று கதை முடிகிறது. அந்தப் படகோட்டி, அறிவாளியையும் தன் முதுகில் சுமந்து, நீந்தி, அவரைக் கரை சேர்த்திருப்பார் என்று நாம் நிச்சயம் நம்பலாம்.

தெரியுமா?’ என்று, அறிவாளியும், படகோட்டியும் ஒருவர் மற்றவரிடம் கேட்ட கேள்விகளை, இன்னும் சிறிது ஆழமாக அலசுவது, அறிவாற்றல், ஞானம் என்ற கருத்துக்களைப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும். மேதை, படகோட்டியிடம் கேட்ட, தெரியுமா?’ கேள்விகள், படகோட்டியின் அறிவாற்றலை, அதாவது, அவரது மூளையில் பதிந்திருந்த, அல்லது, உண்மையில் சொல்லப்போனால், அந்த மூளையில் திணிக்கப்பட்டிருந்தத் தகவல்களை அளக்கும் கேள்விகளாக இருந்தன. படகோட்டி, மேதையிடம் கேட்ட, 'நீச்சல் தெரியுமா?' என்ற கேள்வி, அவரது வாழ்வைக் காக்கக்கூடிய திறமையைப் பற்றியக் கேள்வியாக இருந்தது. கம்பராமாயணத்தையும், திருக்குறளையும் தெரிந்து வைத்திருப்பது, நம் அறிவுக்குள் தகவல்களைத் திரட்டும் ஒரு முயற்சி. ஆனால், நீச்சலடிக்கத் தெரிந்திருப்பது, நம் வாழ்வைக் காக்கும் ஒரு திறமை.

படகில் சென்ற அறிவாளி, ஒருவேளை, நீச்சல் பற்றிய பல நூல்களைப் படித்திருக்கலாம். அந்த அறிவைக் கொண்டு, 'நீச்சல் என்றால் என்னவென்று தெரியும்' என்றுமட்டுமே அவரால் கூற முடியுமே தவிர, தனக்கு 'நீச்சலடிக்கத் தெரியும்' என்று அவரால் கூறமுடியாது. இதைத்தான், 'ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது' என்ற பழமொழி நமக்கு உணர்த்த முயல்கிறது. அதேவண்ணம், கம்பராமாயணத்தின் கவிதைகளையும், திருக்குறளின் வரிகளையும் மனப்பாடமாகச் சொல்வது, நமது நினைவாற்றலை வெளிப்படுத்தக்கூடும். ஆனால், அவ்வரிகளின் பொருளுணர்ந்து, அதை வாழ்வில் கடைபிடிக்கும்போது, அவ்வரிகளைப் புரிந்துகொண்ட முழுமையான அறிவுத்திறனை நாம் வெளிப்படுத்துகிறோம்.

மனிதராயப் பிறந்த ஒவ்வொருவரும், தெரிந்துகொள்ளுதல், அறிந்துகொள்ளுதல், புரிந்துகொள்ளுதல் என்ற மூன்று வழிகளில் அறிவைப் பெறமுடியும். 'தெரிந்துகொள்ளுதல்' என்ற அடிப்படை முயற்சியின் வழியே, பல விடயங்கள், நம் அறிவுக்கு அறிமுகமாகின்றன. தெரிந்துகொண்ட விடயங்களைப் பற்றி, இன்னும் கூடுதல் முயற்சி எடுக்கும்போது, நாம் அவற்றைப்பற்றி 'அறிந்துகொள்கிறோம்'. இவ்விரு முயற்சிகளின் அடிப்படையில் உருவாகும் அடுத்தகட்ட முயற்சியே, 'புரிந்துகொள்ளுதல்'. ஒரு விடயத்தை, நிகழ்வை, மனிதரை, புரிந்துகொள்ளும் நிலையை அடையும்போது, அது நமக்குள் தாக்கங்களை உருவாக்கும். நாம் தெரிந்து, அறிந்து, புரிந்துகொண்ட அறிவை, தகுந்த நேரத்தில், தகுந்த வழியில், பயனுள்ள வகையில் செயல்படுத்துவதே, உயர்வான அறிவுநிலை. இதை நாம் ஞானம் என்றழைக்கிறோம்.

'ஞானம்' என்ற சொல், விவிலியத்தில் 216 முறை பயன்படுத்தப்பட்டுள்ளதென விவிலிய விரிவுரையாளர்கள் கணித்துள்ளனர். இவற்றில், இச்சொல், 164 முறை, பழைய ஏற்பாட்டில், குறிப்பாக, 'ஞான இலக்கியம்' என்றழைக்கப்படும் ஏழு நூல்களில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 'ஞான இலக்கிய'த்தில் ஒன்றான யோபு நூலின் 28ம் பிரிவில், 'ஞானம்', என்ற சொல்லுடன், 'அறிவு' என்ற மற்றொரு சொல்லும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்பிரிவின் இறுதி வரிகளில், ஞானம், அறிவு ஆகியவற்றின் இலக்கணம் இவ்வாறு வரையறுக்கப்பட்டுள்ளது:
யோபு 28: 28
அவர் (கடவுள்) மானிடர்க்குக் கூறினார்; ஆண்டவர்க்கு அஞ்சுங்கள்; அதுவே ஞானம்; தீமையை விட்டு விலகுங்கள்; அதுவே அறிவு.

இந்த இலக்கணத்தில், 'ஆண்டவருக்கு அஞ்சுவது' ஞானம் என்றும், 'தீமையைவிட்டு விலகுவது' அறிவு என்றும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. யோபு நூல் முதல் பிரிவில், நம் கதை நாயகன் யோபு அறிமுகமாகும்போது, ‘ஆண்டவருக்கு அஞ்சுதல் மற்றும், ‘தீமையைவிட்டு விலகுதல் என்ற இரு பண்புகளிலும் யோபு ஈடு இணையற்றவர் என்று அங்கு கூறப்பட்டுள்ளது. ஈடு இணையற்ற ஞானமும், அறிவும் கொண்டவர் யோபு, என்ற சான்றிதழை வழங்கி மகிழ்வது, இறைவன் என்பதும், இந்நூலின் முதல் பிரிவில் கூறப்பட்டுள்ளது:
யோபு 1: 6-8
ஒருநாள் தெய்வப் புதல்வர் ஆண்டவர் முன்னிலையில் ஒன்றுகூடினர். சாத்தான் அவர்கள் நடுவே வந்துநின்றான். ஆண்டவர் சாத்தானிடம், "எங்கிருந்து வருகிறாய்?" என்று கேட்டார். சாத்தான் ஆண்டவரிடம் "உலகைச் சுற்றி உலவி வருகிறேன்" என்றான். ஆண்டவர் சாத்தானிடம், "என் உழியன் யோபைப் பார்த்தாயா? அவனைப் போல் மாசற்றவனும், நேர்மையானவனும், கடவுளுக்கு அஞ்சி, தீமையானதை விலக்கி நடப்பவனும் மண்ணுலகில் ஒருவனும் இல்லை" என்றார்.
அவருக்கு இணையானவர் யாருமில்லை என்ற அளவு, ஞானம், அறிவு ஆகிய இரு உன்னதப் பண்புகளையும் கொண்ட யோபு, துன்பம் என்ற தீயில் எரிக்கப்பட்டாலும், இறைவனுக்கு அஞ்சுதல், தீமையை விலக்குதல் என்ற இரு பண்புகளையும் இழக்காமல் வாழ்ந்தார் என்பதை, நாம், இதுவரை கடந்துவந்துள்ள 28 பிரிவுகளில் உணர்ந்து வந்துள்ளோம்.

ஆண்டவருக்கு அஞ்சுவது ஞானத்தின் தொடக்கம் என்பதை விவிலியத்தின் பல நூல்கள் கூறியுள்ளன. அவற்றில் ஒரு சில வரிகள் இதோ:
திருப்பாடல் 111: 10
ஆண்டவர்பற்றிய அச்சமே ஞானத்தின் தொடக்கம்; அவர்தம் கட்டளைகளைக் "கடைப்பிடிப்போர் நல்லறிவுடையோர்; அவரது புகழ் என்றென்றும் நிலைத்துள்ளது.

நீதி மொழிகள் 9: 10
ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம்; தூயவராகிய அவரைப்பற்றிய உணர்வே மெய்யுணர்வு.

சீராக்கின் ஞானம் 1: 14
ஆண்டவரிடம் அச்சம் கொள்ளுதலே ஞானத்தின் தொடக்கம்; அது இறைப்பற்றுள்ளோருக்கு தாய் வயிற்றிலிக்கும்பொழுதே வழங்கப்பெறுகிறது.

'ஞான இலக்கியத்தின்' ஒரு சிகரமாகக் கருதப்படும் நூல், 'சாலமோனின் ஞானம்' என்ற நூல். 19 பிரிவுகளைக் கொண்ட இந்நூலின் பெரும்பகுதி, ஞானமும், மனிதரின் முடிவும், ஞானத்தின் தோற்றம், இயல்பு, அதை அடையும் வழி, ஆகிய கருத்துக்களை வழங்குகிறது. இந்நூலின் 7ம் பிரிவில், 'ஞானத்தின் இயல்பும், மேன்மையும்' என்ற பகுதி மிக அழகான ஒரு கவிதை. இக்கவிதையின் ஒரு சில வரிகளை கேட்டு, தியானிப்பது, பயன்தரும் ஒரு முயற்சி:
சாலமோனின் ஞானம் 7: 22-23, 25-26, 28-30
ஞானம் - ஆற்றல் கொண்டது. அவ்வாற்றல் அறிவுடையது; தூய்மையானது; பலவகைப்பட்டது; நுண்மையானது; உயிரோட்டம் உள்ளது; தெளிவுமிக்கது; மாசுபடாதது; வெளிப்படையானது; கேடுறாதது; நன்மையை விரும்புவது; கூர்மையானது.
ஞானம் -எதிர்க்கமுடியாதது; நன்மை செய்வது; மனிதநேயம் கொண்டது; நிலைபெயராதது; உறுதியானது; வீண்கவலை கொள்ளாதது; எல்லாம் வல்லது; எல்லாவற்றையும் பார்வையிடுவது; அறிவும் தூய்மையும் நுண்மையும் கொண்ட எல்லா உள்ளங்களையும் ஊடுருவிச் செல்வது...
ஞானம் - கடவுளின் ஆற்றலிலிருந்து புறப்படும் ஆவி; எல்லாம் வல்லவரின் மாட்சியிலிருந்து எழும் தூய வெளிப்பாடு. எனவே மாசுபட்டது எதுவும் அதனுள் நுழையமுடியாது. ஞானம் - என்றுமுள ஒளியின் சுடர்; கடவுளது செயல்திறனின் கறைபடியாக் கண்ணாடி; அவருடைய நன்மையின் சாயல்...
ஞானத்தோடு வாழ்கின்றவர்கள்மீது அன்பு செலுத்துவது போல வேறு எதன்மீதும் கடவுள் அன்பு செலுத்துவதில்லை. ஞானம் - கதிரவனைவிட அழகானது; விண்மீன் கூட்டத்திலும் சிறந்தது; ஒளியைக் காட்டிலும் மேலானது. இரவுக்குப் பகல் இடம் கொடுக்கிறது. ஆனால், ஞானத்தைத் தீமை மேற்கொள்ளாது.

ஞானத்தின் மேன்மையைக் கூறும் இவ்வரிகளைக் கேட்கும்போது, அன்பின் மேன்மையைக் குறித்து, புனித பவுல் அடியார் எழுதியுள்ள கவிதை வரிகள் நம் நினைவுக்கு வருகின்றன. கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தின் 13ம் பிரிவில், அன்பைப் பற்றி கூறப்பட்டுள்ள இவ்வரிகள், நம் தேடலை இன்று நிறைவுக்குக் கொணரட்டும்.
1 கொரிந்தியர் 13: 4-7,13
அன்பு பொறுமையுள்ளது; நன்மை செய்யும்; பொறாமைப்படாது; தற்புகழ்ச்சி கொள்ளாது; இறுமாப்பு அடையாது. அன்பு இழிவானதைச் செய்யாது; தன்னலம் நாடாது; எரிச்சலுக்கு இடம் கொடாது; தீங்கு நினையாது. அன்பு தீவினையில் மகிழ்வுறாது; மாறாக உண்மையில் அது மகிழும். அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்; அனைத்தையும் நம்பும்; அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்; அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும்... நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன. இவற்றுள் அன்பே தலைசிறந்தது.

இத்துணை நற்பண்புகள் கொண்ட ஞானமும், அன்பும் நம் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படவேண்டும் என்று, இறைவனை இறைஞ்சுவோம்.


No comments:

Post a Comment