20 March, 2018

விவிலியத்தேடல் : புதுமைகள் – தண்ணீர் திராட்சை இரசமாக... பகுதி 9


Woman of Steel: Kiran Kanojia

இமயமாகும் இளமை தூண்டுதலாக, துணையாக இருக்கும் தந்தை

2011ம் ஆண்டு, டிசம்பர் மாதம் ஒரு நாள், கிரண் கனோஜியா (Kiran  Kanojia) என்ற இளம்பெண், ஹைதராபாத் இரயில் நிலையத்திலிருந்து பயணமானார். தகவல் தொழில்நுட்பத் துறையில் பொறியாளராகப் பணியாற்றி வந்த கிரண் அவர்கள், தன் 21வது பிறந்தநாளை, பெற்றோருடன் கொண்டாட சென்றுகொண்டிருந்தார்.
அந்த துரித இரயில் புறப்பட்ட சிறிது நேரத்தில், இரு இளைஞர்கள், கிரண் அவர்களின் கைப்பையைப் பறிக்க முயன்றனர். அப்போது நிகழ்ந்த போராட்டத்தில், அவ்விரு இளைஞர்கள், கிரண் அவர்களை, ஓடும் இரயிலிலிருந்து வெளியே தள்ளிவிட்டனர்.
இந்த விபத்தில் தன் இடது காலை இழந்த கிரண் அவர்கள், ஒட்டப்பந்தயங்களில் பயன்படுத்தப்படும் சிறப்பு வடிவத்தில் செய்யப்பட்ட செயற்கைக் காலுடன், நீண்ட தூர ஒட்டப்பந்தயங்களில் பங்கேற்று வருகிறார். 2014ம் ஆண்டு நடைபெற்ற 'ஏர்டெல் மாரத்தான்' போட்டியில் தன் முதல் பதக்கத்தை வென்றார் கிரண். பாராலிம்பிக் விளையாட்டுகளில் பங்கேற்று, இந்தியாவுக்கு பதக்கம் பெற்றுத் தருவதை தன் கனவாக, இலட்சியமாகக் கொண்டு, பயிற்சிகள் எடுத்து வருகிறார். தன்னை இவ்வளவு தூரம் ஊக்குவித்து, உற்சாகப்படுத்த, தன் தந்தை எப்போதும் தன்னுடன் இருக்கிறார் என்று, கிரண் அவர்கள், தன் பேட்டிகளில் கூறிவருகிறார்.
மார்ச் 18, ஞாயிறு, தென் கொரியாவின் Pyeongchang நகரில், மாற்றுத்திறனாளிகளின் குளிர்கால பாராலிம்பிக் விளையாட்டுக்கள் நிறைவடைந்தன. மார்ச் 19, திங்கள், புனித யோசேப்பு திருநாளன்று, உலகின் பல நாடுகளில் தந்தை நாள் கொண்டாடப்பட்டது. மாற்றுத்திறன் கொண்ட பல இளையோர் தங்கள் கனவுகளை நனவாக்க, தூண்டுதலாக, துணையாக இருந்துவரும் தந்தையருக்குத் தலை வணங்குவோம்.

The First Miracle

புதுமைகள் தண்ணீர் திராட்சை இரசமாக... பகுதி 9

கடந்த 8 வாரங்களாக தேடல் பயணத்தை மேற்கொண்ட கானா திருமண புதுமையை ஒருங்கிணைத்து, அசைபோட வந்திருக்கிறோம். கானா திருமண விருந்தில் இயேசு ஆற்றிய முதல் அரும் அடையாளத்தைக் குறித்து நற்செய்தியாளர் யோவான் பதிவு செய்துள்ள இறைவாக்கியங்களில் சில, நமக்குச் சொல்லித்தரும் பாடங்களைப் பயில முயல்வோம்.

"மூன்றாம் நாள் கலிலேயாவில் உள்ள கானாவில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இயேசுவின் தாயும் அங்கு இருந்தார்." (யோவான் 2:1)
யோவான் நற்செய்தியில், இரண்டு நிகழ்வுகளில் மட்டுமே 'இயேசுவின் தாய்' இடம்பெறுகிறார். ஒன்று, கானா திருமணம் (யோவான் 2:1-11); மற்றொன்று, கல்வாரி மலை நிகழ்வுகள் (யோவான் 19:25-27). இயேசுவின் தாய் 'அங்கு இருந்தார்' என்று கானா திருமணத்தில் அவரை அறிமுகம் செய்யும் யோவான், சிலுவை அருகில் இயேசுவின் தாய் 'நின்று கொண்டிருந்தார்' (யோவான் 19:25) என்று கூறியுள்ளார்.
"இயேசுவின் தாயும் அங்கு இருந்தார்" என்ற எளிய சொற்கள், மரியாவின் சிறப்பானதொரு குணநலனை நம்முள் ஆழப் பதிக்கின்றன. எங்கெல்லாம் தன் உதவி தேவை என்று அன்னை மரியா உணர்கிறாரோ, அங்கெல்லாம், எவ்வித அழைப்பும் இல்லாமல் சென்று, அவர்களோடு தங்கி, உதவி செய்வது, அவரது தனிப்பட்ட குணம். தன் உறவினரான எலிசபெத்து, முதிர்ந்த வயதில் கருவுற்றிருக்கிறார் என்ற செய்தியை வானதூதர் கபிரியேல் வழியே அறிந்ததும், "மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார்" (லூக்கா 1:39-40) என்று நற்செய்தியாளர் லூக்கா கூறியுள்ளார்.
இயேசுவைப் பற்றிய தவறான வதந்திகள் பரவின என்பதை, மாற்கு நற்செய்தி 3ம் பிரிவில், வாசிக்கிறோம். இயேசு மதிமயங்கி இருக்கிறார், தீய ஆவி பிடித்தவராய் இருக்கிறார் என்று மக்கள் பேசிக்கொண்டிருந்தனர். அவருடைய உறவினர் இதைக் கேள்விப்பட்டு, அவரைப் பிடித்துக்கொண்டுவரச் சென்றார்கள். (மாற்கு 3:21) இச்சூழலில், தன்னை தீய ஆவி எதுவும் நெருங்கவில்லை என்பதை இயேசு விளக்கிக் கூறினார். அப்பொழுது அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து வெளியே நின்று கொண்டு அவரை வரச் சொல்லி ஆள் அனுப்பினார்கள் (மாற்கு 3:31) என்று நற்செய்தியாளர் மாற்கு குறிப்பிடுகிறார். தன் மகனைக் குறித்து ஊரில் பல்வேறு வதந்திகள் எழுந்ததும், அவருக்கு அருகில் இருப்பதற்காக மரியா விரைந்து சென்றார்.
இவ்வாறு, தேவையுள்ள இடங்களில் பிரசன்னமாவது அன்னை மரியாவின் அழகு. கானாவில் திருமணம் ஒன்று நிகழப்போகிறது என்பதை அறிந்ததும், திருமண வீட்டாரின் பல தேவைகளை நிறைவு செய்ய, திருமணத்திற்கு முன்னரே அங்கு சென்றுவிட்டார் என்பதைக் கூறவே, "இயேசுவின் தாயும் அங்கு இருந்தார்" என்ற எளிய சொற்களில் புனித யோவான் அன்னை மரியாவை அறிமுகப்படுத்தியுள்ளார்.  

இயேசுவின் தாய் அவரை நோக்கி, திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது என்றார். (யோவான் 2:3)
இறை வல்லுனர்கள் பலர், மரியாவின் இந்தக் கூற்றை, அழகான ஒரு செபம் என்று கூறுகின்றனர். திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது என்று சொல்வது, சாதாரணமான, எதார்த்தமான ஒரு கூற்று. அதை செபம் என்ற கோணத்தில் எண்ணிப்பார்க்க நாம் தயங்கலாம். ஆனால், ஆழமாகச் சிந்தித்தால், இது ஓர் அழகிய செபம் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
இயேசு சொல்லித்தந்த வானகத்திலுள்ள எங்கள் தந்தையே என்ற செபத்தை ஆய்வு செய்தால், நம் தயக்கம் நீங்கி, தெளிவு பிறக்கும். பெரும் இறையியல், மெய்யியல் தத்துவங்களெல்லாம் இந்த செபத்தில் இடம்பெறவில்லை. அங்கு இயேசு சொல்லித்தரும் விண்ணப்பங்கள் எல்லாமே, அன்றாட வாழ்வுக்குத் தேவையானவை. எங்கள் அனுதின உணவைத் தாரும், மன்னிக்கும் மனதைத் தந்தருளும், தீமைகளிலிருந்து எங்களைக் காத்தருளும் என்ற விண்ணப்பங்களே, இச்செபத்தில் இடம்பெற்றுள்ளன.

செபம் என்றதும், இது வேண்டும், அது வேண்டும் என்று, நீண்ட பட்டியல்களை, கடவுளிடம் அனுப்புவதற்கு பதில், நமது உண்மை நிலையை, நம்மிடம் உள்ள குறைகளைச் சொல்வது, இன்னும் அழகான செபங்கள். இத்தகைய செபத்தைச் சொல்வது அவ்வளவு எளிதல்ல. இத்தகைய செபத்தைச் சொல்வதற்கு, ஆழ்ந்த நம்பிக்கை வேண்டும். நமது தேவைகளை, நம்மைவிட, நம் இறைவன் நன்கு அறிவார்; அவரிடம் குறையைச் சொன்னால் போதும், மற்றவை அனைத்தையும் அவர் பார்த்துக்கொள்வார் என்று எண்ணுவதற்கு, நிறைவான நம்பிக்கை வேண்டும். "திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது" என்று அன்னை மரியா இயேசுவிடம் கூறுவது, இத்தகைய நம்பிக்கையுடன் எழுப்பப்பட்ட செபமே!

இயேசுவின் தாய் பணியாளரிடம், "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" என்றார். (யோவான் 2:5)
'இயேசு சொல்வதைக் கேளுங்கள்' என்று அன்னை மரியா கூறவில்லை. மாறாக, ‘அவர் சொல்வதைச் செய்யுங்கள் என்பதே அவர் விடுத்துள்ள அழைப்பு. இந்தக் கூற்றில் உள்ள மற்றொரு முக்கியமான சொல், 'சொல்வதெல்லாம்' என்ற சொல். இறைவன் நம்மிடம் சொல்வனவற்றையெல்லாம் செய்வதே சரியான வழி. இதற்கு மாறாக, இறைவன் சொல்வதில் நமக்கு விருப்பமானவற்றை மட்டும் தெரிவுசெய்து செயலாற்றுவது, அன்னை மரியா நமக்கு விடுத்துள்ள அழைப்பு அல்ல.
இறைவன் சொல்வதைக் கேட்டு செயல்பட்டால் அற்புதங்கள் நிகழும் என்பதை தன் வாழ்வில் உணர்ந்திருந்ததால், 'அவர் சொல்வதெல்லாம் செய்யுங்கள்' என்று அன்னை மரியா கூறினார்.

"அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" (யோவான் 2:5) என்று அன்னை மரியா கூறிய இந்த நான்கு சொற்களே, விவிலியத்தில் அவர் கூறிய இறுதிச் சொற்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே, இந்த நான்கு சொற்களே, அன்னை மரியா, நமக்கு விட்டுச்சென்றுள்ள விலைமதிப்பற்ற பாரம்பரியம். இந்த நான்கு சொற்கள், நம் வாழ்வின் அடித்தளமாக மாறினால், நம் குறைகள் நீங்கி, நிறைவு தோன்றும் அற்புதத்தை நம்மால் காணமுடியும்.

மரியா பணியாளர்களிடம் "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" என்று சொல்லிவிட்டு அந்த இடத்தைவிட்டு அகன்றார். புதுமை நிகழ்ந்த வேளையில், அன்னை மரியா அங்கிருந்ததாக நற்செய்தி கூறவில்லை. இதுதான், அன்னை மரியாவின் அழகு, இதுவே அவரது இலக்கணம். குறைகள் உருவானதும் வந்து நிற்கும் அன்னை மரியா, அவரது பரிந்துரையால் புதுமைகள் நிகழும் வேளையில், அந்தப் புகழில் பங்கேற்காமல் மறைந்துவிடுவார்.

கானா திருமணத்தில், தண்ணீர் திராட்சை இரசமாக மாறியப் புதுமையை, நற்செய்தியாளர் யோவான், பின்வரும் வரிகளில் குறிப்பிட்டுள்ளார்:
யோவான் 2:7-9
இயேசு பணியாளரிடம், “இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள் என்று கூறினார். அவர்கள் அவற்றை விளிம்பு வரை நிரப்பினார்கள். பின்பு அவர், “இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டு போங்கள் என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள். பந்தி மேற்பார்வையாளர் திராட்சை இரசமாய் மாறியிருந்த தண்ணீரைச் சுவைத்தார்.
பணியாளர்கள் தொட்டியில் ஊற்றியது தண்ணீர். ஆனால், அதை அவர்கள் மொண்டு எடுத்துச் சென்றபோது, அது திராட்சை இரசமாக மாறியிருந்தது. எப்போது, எப்படி இந்தப் புதுமை நடந்தது என்பதை ஆய்வு செய்யும்போது, அழகிய, ஆழமான எண்ணங்கள் தோன்றுகின்றன.
வழக்கமாக, இயேசுவின் புதுமைகளில், அவர் சொல்லும் ஒரு சொல்லோ, அல்லது அவரது ஒரு செயலோ புதுமைகள் நிகழ காரணமாக அமையும். ஆனால், இந்தப் புதுமையைப்பற்றி நற்செய்தியில் நாம் வாசிப்பது இதுதான். இயேசு, இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள் என்றார். பின்னர், இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டு போங்கள் என்றார். இவ்விரு கூற்றுகளுக்குமிடையே, அவர், நீர் நிரப்பப்பட்ட தொட்டிகள் மீது கைகளை நீட்டியதாகவோ, தண்ணீரைத் தொட்டதாகவோ, ஆசீர் அளித்ததாகவோ, நற்செய்தியில் குறிப்பிடப்படவில்லை.

இயேசு கூறிய இவ்விரு கூற்றுகளுக்கிடையே, நற்செய்தியாளர் யோவான், ஓர் அழகிய வாக்கியத்தைப் பதிவுசெய்துள்ளார். 'தண்ணீர் நிரப்புங்கள்' என்று இயேசு சொன்னதும், பணியாளர்கள் அத்தொட்டிகளை விளிம்பு வரை நிரப்பினார்கள். இதுதான் அந்த வாக்கியம். மிகவும் பொருள்நிறைந்த வாக்கியம். எப்போது அந்தப் பணியாளர்கள் விளிம்பு வரை, அதாவது, தொட்டிகள் நிறைந்து வழியும் வரை நீர் நிரப்பினார்களோ, அப்போதே அந்தத் தண்ணீர், திராட்சை இரசமாக மாறிய புதுமை நிகழ்ந்துவிட்டது.

திராட்சை இரசம் தீர்ந்துவிட்டச் சூழலில், அந்தப் பிரச்சனைக்கு எவ்வகையிலும் தொடர்பில்லாத ஒரு செயலாக, கை கால் கழுவப் பயன்படுத்தப்படும் 'தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்' என்று இயேசு சொன்னதைக் கேட்டு, பணியாளர்கள், குழப்பமும், எரிச்சலும், அடைந்திருக்கலாம். இந்த எரிச்சலோடு, பணியாளர்கள் செயல்பட்டிருந்தால், அத்தொட்டிகளை, ஏனோதானோவென்று,  அரைகுறையாய் நிரப்பியிருப்பார்கள். ஆனால், நற்செய்தியாளர் யோவான், அவர்கள் அத்தொட்டிகளை விளிம்பு வரை நிரப்பினார்கள் என்று தெளிவாகக் கூறியுள்ளார்:. அவ்வாறெனில், அந்த பணியாளர்களின் உள்ளத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்க வேண்டும். இந்த உள்ள மாற்றம்தான், தண்ணீர் இரசமாக மாறிய அந்த மாற்றத்தையும் உருவாக்கியது.
தங்கள் அதிர்ச்சி, தயக்கம், எரிச்சல் எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு, பணியாளர்கள், தாங்கள் செய்யும் செயலை முழுமையாகச் செய்த அந்த நேரத்திலேயே, அவர்கள் ஊற்றிய தண்ணீர் திராட்சை இரசமாக மாற ஆரம்பித்துவிட்டது. முழுமையான ஈடுபாட்டுடன் செய்யும் ஒவ்வொரு செயலும் மன நிறைவைத் தருவதோடு, வாழ்வில் மாற்றங்கள் பலவற்றையும் உருவாக்கும்.

நம்பிக்கையோடு இறைவனிடம் நம் குறைகளைக் கூறுதல், இயேசு சொல்வதையெல்லாம் செய்தல், அவர் சொல்வதன் பொருள் தெளிவாகத் தெரியவில்லை எனினும், ‘விளிம்பு வரை நிறையுமளவு முழுமையான மனதுடன் பணியாற்றுதல் என்ற பாடங்களை, தண்ணீர் திராட்சை இரசமாக மாறும் புதுமை நமக்குச் சொல்லித் தந்துள்ளது.


No comments:

Post a Comment