16 January, 2019

விவிலியத்தேடல் : ஒத்தமை நற்செய்திகளில் பொதுவானப் புதுமைகள்


Pongal Celebration

Chanthaburi - Thailand - fruit decorations
https://www.flickr.com

பூமியில் புதுமை அகிலமெங்கும் அறுவடைத் திருவிழா

தமிழ்கூறு நல்லுலகெங்கும் சனவரி 15, இச்செவ்வாயன்று, பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது. இயற்கை அன்னையும், மனித உழைப்பும் இணைந்து, வழங்கியுள்ள அறுவடைப் பலன்களுக்கு நன்றி கூறும் நன்னாள், பொங்கல் திருநாள். இந்த நன்னாளில் உலகின் வேறு சில நாடுகளில் சிறப்பிக்கப்படும் அறுவடைத் திருநாள்களைக் குறித்து ஒரு மேலோட்டமான பார்வை இதோ:
இந்தோனேசியாவின் பாலித்தீவில் (Bali) அரிசியை, 'தேவி ஸ்ரீ' என்ற தேவதையாகக் கொண்டாடுகின்றனர். அறுவடைக் காலத்தில், இந்த தேவதைக்கு மூங்கிலால் கோவில்கள் உருவாக்கப்படுகின்றன. அந்தத் தீவில் வாழும் மக்கள், இந்த தேவதையின் உருவத்தை, நெல் கதிர்களால் உருவாக்கி, நெல் களஞ்சியங்கள் மீது, பாதுகாப்பின் அடையாளமாக வைக்கின்றனர்.
தாய்லாந்து நாட்டின் சந்தபுரி (Chanthaburi) என்ற நகரம், பல்வேறு வண்ணங்களால் ஒளிரும் படிகக் கற்களுக்கும், பலவண்ணங்கள் கொண்ட பழங்களுக்கும் புகழ்பெற்றது. கோடைக்காலத்தில், அறுவடையாகும் பல வண்ணப் பழங்களைக் கொண்டு, அலங்கரிக்கப்பட்ட இரதங்கள், அறுவடைத் திருநாளன்று ஊர்வலமாகச் செல்லும்.
ஆர்ஜென்டீனா நாட்டின் மென்டோன்சா (Mendonza) மாநிலம், திராட்சைத் தோட்டங்கள் நிறைந்த மாநிலம். அங்கு, பிப்ரவரி இரண்டாம் ஞாயிறன்று, மென்டோன்சா பேராயர், அவ்வாண்டில் விளைந்த முதல் திராட்சைக் கனிகள் மீது புனித நீரைத் தெளித்து அர்ச்சித்தபின், திராட்சைக் கனிகளின் அறுவடையும், அறுவடைத் திருவிழாவும் ஆரம்பமாகும்.
ஒவ்வோர் ஆண்டும், அக்டோபர் மாதத்தில், இஸ்ரேல் நாட்டவர், ‘சுக்கோத் (Sukkot) என்றழைக்கப்படும் கூடாரத் திருவிழாவைக் கொண்டாடுகின்றனர். அறுவடையை நினைவுறுத்தும் இந்தக் கூடாரத் திருவிழாவையொட்டி, பல குடும்பங்கள், திறந்த வெளியில், கூரையற்ற கூடாரங்கள் அமைத்து, அவற்றில் தங்குவர். வானத்தைப் பார்த்து, அறுவடையைத் தந்த இறைவனுக்கு நன்றி சொல்வதெற்கென, இந்தக் கூடாரங்கள் கூரையின்றி உருவாக்கப்படுகின்றன.
பிரித்தானியாவில், ஆகஸ்ட் முதல் தேதி, லம்மாஸ் (Lammas) என்ற திருநாளுடன் அறுவடை மாதம் ஆரம்பமாகிறது. கோதுமை அறுவடையைக் கொண்டாடும் இந்நாள்களில், முதலில் அறுவடை செய்யப்படும் புதிய கோதுமை மணிகளால் உருவாக்கப்பட்ட ரொட்டி, ஆலயப் பீடத்தில் காணிக்கையாக வைக்கப்பட்டபின், அறுவடைத் திருவிழா ஆரம்பமாகின்றது. (National Geographic)

Jesus cures Peter’s mother-in-law

ஒத்தமை நற்செய்திகளில் பொதுவானப் புதுமைகள்

'ஒத்தமை நற்செய்திகள்' என்றழைக்கப்படும், மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்திகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ள 12 பொதுவான புதுமைகளில் நம் தேடல் பயணம் இன்று துவங்குகிறது. இப்பயணத்தைத் துவங்குவதற்கு முன், 'ஒத்தமை நற்செய்திகளைக்' குறித்து ஒரு தெளிவைப் பெறுவது நல்லது.
'ஒத்தமை நற்செய்திகள்' என்ற சொற்றொடர், ஆங்கிலத்தில், 'Synoptic Gospels' என்றழைக்கப்படுகிறது. 'Synoptic' என்ற சொல், Syn மற்றும் Opsis என்ற இரு கிரேக்கச் சொற்களை இணைத்து உருவாக்கப்பட்ட ஒரு சொல். Syn என்ற சொல்லுக்கு, 'ஒன்று சேர்ந்து' என்றும், Opsis என்ற சொல்லுக்கு, 'பார்வை' அல்லது 'கண்ணோட்டம்' என்றும் பொருள். எனவே, 'Synoptic' என்ற சொல்லுக்கு, 'ஒன்று சேர்ந்த பார்வை' அல்லது, 'ஒன்று சேர்ந்த கண்ணோட்டம்' என்று பொருள்.

நற்செய்தியாளர்கள், மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூவரும், ஒருமித்தக் கண்ணோட்டத்துடன் தங்கள் நற்செய்திகளை உருவாக்கியுள்ளதால், இம்மூன்று நற்செய்திகளும், 'Synoptic Gospels' அல்லது, 'ஒருமித்தக் கண்ணோட்டம் கொண்ட நற்செய்திகள்' என்று அழைக்கப்படுகின்றன.
கண்ணோட்டத்தில் ஒருமித்து இருப்பதோடு மட்டுமல்லாமல், இம்மூன்று நற்செய்திகளும் ஏறத்தாழ ஒருமித்த அமைப்பையும், பல இடங்களில் ஒருமித்த சொற்களையும், இறை வாக்கியங்களையும் கொண்டிருப்பதால், இவற்றை நாம் தமிழில், 'ஒத்தமை நற்செய்திகள்' என்று அழைக்கிறோம்.

இம்மூன்று நற்செய்திகளில் மாற்கு நற்செய்தி முதலில் எழுதப்பட்டது என்பது பாரம்பரியக் கருத்து. மாற்கு எழுதிய நற்செய்தி, மற்றும், இயேசுவின் படிப்பினைகள் அடங்கிய 'Q' என்ற தொகுப்பு, ஆகிய இரு ஆதாரங்களையும் அடிப்படையாகக் கொண்டு, நற்செய்தியாளர்கள் மத்தேயுவும், லூக்காவும் தங்கள் நற்செய்திகளை உருவாக்கியுள்ளனர்.
மாற்கு நற்செய்தி, திருமுழுக்கு யோவானின் அறிக்கையில் துவங்கி, இறுதியில், 'நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்' என்று, இயேசு, விண்ணேற்றத்திற்கு முன், தன் சீடர்களுக்கு விடுத்த கட்டளையில் முடிவடைகிறது. இந்த நற்செய்தியுடன், மத்தேயு, லூக்கா ஆகிய இருவரின்  நற்செய்திகளை ஒப்புமைப்படுத்திக் காணும்போது, 30 பகுதிகளில், மிக நெருங்கிய ஒப்புமைகளைக் காணமுடிகிறது. மாற்கு நற்செய்தியில் இடம்பெற்றுள்ள 661 இறை வாக்கியங்களில், 630 இறை வாக்கியங்கள், மத்தேயு மற்றும் லூக்கா ஆகிய இருவரின் நற்செய்திகளில் இடம்பெற்றுள்ளன.

நமது தேடல் முயற்சிகளில், மாற்கு நற்செய்தியை அடித்தளமாகக் கொண்டு, ஒத்தமை நற்செய்திகள் மூன்றிலும் பதிவு செய்யப்பட்டுள்ள 12 பொதுவானப் புதுமைகளில் நம் பயணத்தைத் துவக்குவோம். மாற்கு நற்செய்தியில் பதிவுசெய்யப்பட்டுள்ள இந்த 12 புதுமைகளை பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்.
1. சீமோன் பேதுருவின் மாமியாரை இயேசு குணமாக்குதல்
2. அதே நாள் மாலை, மேலும் பல பிணியாளரைக் குணமாக்குதல்.
3. தொழுநோயாளரை இயேசு குணப்படுத்துதல்
4. முடக்குவாதமுற்றவருக்கு இயேசு குணமளித்தல்
5. கை சூம்பியவரை இயேசு குணமாக்குதல்
6. காற்றையும், கடலையும் அடக்குதல்
7. கேரசேனர் பகுதியில் பேய் பிடித்து அலைந்தவரை நலமாக்குதல்.
8. இரத்தப் போக்குடைய பெண் குணமடைதல்
9. தொழுகைக்கூடத் தலைவர் யாயிர் என்பவரின் மகளை இயேசு குணமாக்குதல்.
10. 5000த்திற்கும் அதிகமான மக்களுக்கு இயேசு உணவு வழங்குதல். நான்கு நற்செய்திகளிலும் பதிவுசெய்யப்பட்டுள்ள இந்த தனித்துவமிக்கப் புதுமையை, நாம், யோவான் நற்செய்தியில் மேற்கொண்ட தேடல் பயணத்தில் ஏற்கனவே சிந்தித்தோம்.
11. தீய ஆவி பிடித்திருந்த ஒரு சிறுவன் நலமடைதல்
12. பாரவையற்ற பர்த்திமேயு பார்வை பெறுதல்.

இந்தப் பன்னிரு புதுமைகளில், முதல் புதுமை, இயேசு, சீமோன் பேதுருவின் மாமியாரைக் குணப்படுத்தியப் புதுமை. இப்புதுமை, மாற்கு நற்செய்தியில், பின்வரும் சொற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது:
மாற்கு 1: 29-31
பின்பு அவர்கள் தொழுகைக் கூடத்தை விட்டு வெளியே வந்து யாக்கோபு, யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள். சீமோனுடைய மாமியார் காய்ச்சலாய்க் கிடந்தார். உடனே அவர்கள் அதைப் பற்றி இயேசுவிடம் சொன்னார்கள். இயேசு அவரருகில் சென்று கையைப் பிடித்து அவரைத் தூக்கினார். காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவர் அவர்களுக்குப் பணிவிடை செய்தார்.

இப்பகுதியின் துவக்கத்தில், 'சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள்' இயேசு சென்றார் என்ற சொற்களைக் காணும்போது, அது ஒரு கூட்டுக்குடும்பமாக இருந்தது என்பதை உணர்கிறோம். அத்துடன், சீமோனின் மாமியார், சீமோனின் வீட்டில் வாழ்ந்துவந்தார் என்ற தகவலும் நம் கவனத்தை ஈர்க்கிறது. பொதுவாக, இஸ்ரயேல் மக்களிடையே, பெற்றோரைப் பாதுகாக்கும் கடமை, அவர்களது மகன்களைச் சேரும். இங்கு, சீமோனின் மாமியார், சீமோனின் வீட்டில் வாழ்ந்தார் எனில், ஒருவேளை, சீமோனின் மனைவிக்கு சகோதரர்கள் யாரும் இல்லாத காரணத்தால், மனைவியின் தாயும் அவர்கள் வீட்டில் தங்கியிருந்தார் என்று எண்ணத் தோன்றுகின்றது.
சீமோன், அந்திரேயா, என்ற இரு சகோதரர்களும் ஒரு கூட்டுக் குடும்பத்தில் கூடுதல் பொறுப்புக்களுடன் வாழ்ந்தவர்கள். அத்தகைய கூட்டுக் குடும்பத்தையும், அதில் தங்களுக்கு இருந்த பொறுப்புக்களையும் விட்டுவிட்டு, அவர்கள் இருவரும் இயேசுவைப் பின்தொடர்ந்தனர் என்பதை எண்ணிப் பார்க்கும்போது, அவர்கள் இயேசுவின் மீது கொண்டிருந்த பற்றையும், அவரைப் பின்தொடர்வதற்கு அவர்கள் செய்த பெரும் தியாகத்தையும் நாம் உணரலாம்.

அடுத்ததாக, சீமோனின் மாமியாருக்கு வந்திருந்தது 'காய்ச்சல்' என்று மத்தேயுவும், மாற்கும் குறிப்பிடும்போது, அதை, 'கடுங்காய்ச்சல்' (லூக்கா 4:38) என்று, லூக்கா மட்டும் குறிப்பிட்டுள்ளார். நற்செய்தியாளர் லூக்கா ஒரு மருத்துவர் என்பது, பாரம்பரியக் கருத்து. எனவே, அவர், அந்தச் சூழலின் தீவிரத்தை உணர்ந்து, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் என்று எண்ணிப் பார்க்கலாம்.
அடுத்ததாக, இயேசு, சீமோனின் மாமியாரை எவ்வாறு குணமாக்கினார் என்பதை மூன்று நற்செய்தியாளர்களும் வெவ்வேறு சொற்களில் கூறியுள்ளனர்.
இயேசு அவரருகில் சென்று கையைப் பிடித்து அவரைத் தூக்கினார். காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று (மாற்கு 1:31) என்று மாற்கு கூறியுள்ளார். இதையொத்த சொற்களை மத்தேயுவும் பயன்படுத்தியுள்ளார். இயேசு அவரது கையைத் தொட்டதும் காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. (மத்தேயு 8:15) என்று மத்தேயு குறிப்பிட்டுள்ளார். லூக்கா நற்செய்தியில், இயேசு அவரருகில் நின்று, காய்ச்சலைக் கடிந்துகொள்ள அது அவரைவிட்டு நீங்கிற்று (லூக்கா 4:39) என்று, வேறொரு வகையில் கூறப்பட்டுள்ளது. தீய ஆவிகளை விரட்டும்போது இயேசு பயன்படுத்தும் கடிந்துகொள்ளுதல் என்ற யுக்தியை இங்கும் பயன்படுத்தியுள்ளதுபோல் நற்செய்தியாளர் லூக்கா இக்காட்சியை சித்திரித்துள்ளார்.

சீமோனின் மாமியார் குணமடைந்ததும், "அவர் அவர்களுக்குப் பணிவிடை செய்தார்" (மாற்கு 1:31) என்பதை, ஒத்தமை நற்செய்திகள் மூன்றும் தவறாமல், ஒரே விதமாகக் குறிப்பிட்டுள்ளன.
இயேசுவின் குணமளிக்கும் புதுமைகளால் உருவாகும் நன்மைகள், அப்புதுமைகளால் நலம் பெற்றோருடன் நின்றுவிடுவதில்லை. நலம் பெற்றோர், மற்றவர்களுக்குப் பணிவிடை புரிவதில்தான் இயேசுவின் குணமளிக்கும் சக்தி முழுமை பெறுகிறது என்ற எண்ணத்தை வலியுறுத்தவே, மூன்று நற்செய்தியாளர்களும், இப்புதுமையின் இறுதியில், மாமியார் பணிவிடைகள் ஆற்றினார் என்பதை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர். இயேசுவால் குணம் பெற்றவர்கள், உயிர் பெற்றவர்கள், தீய ஆவியிலிருந்து விடுதலை பெற்றவர்கள் அனைவரும், தாங்கள் பெற்ற அருளை, பிறரோடு பகிர்ந்துகொள்ளும் வழியில் தங்கள் எஞ்சிய வாழ்நாள்களை வாழ்ந்திருப்பர் என்பது உறுதி.

சீமோனின் மாமியார் குணமடைந்த செய்தி, கப்பர்நாகும் ஊரெங்கும் விரைவில் பரவியதால், அன்று மாலையில், நலமிழந்தோர் பலர் பேதுருவின் வீட்டு வாசலில் கூடிவந்தனர். இயேசு அவர்களைக் குணமாக்கிய அந்தப் புதுமையில் நம் தேடலை அடுத்தவாரம் தொடர்வோம்.


No comments:

Post a Comment