16 July, 2019

விவிலியத்தேடல்: ஒத்தமை நற்செய்தி – கல்லறை மனிதரைக் காத்த இறைவன் - 5

Nature based agriculturist – Mr Kathirvel

பூமியில் புதுமை – வெளிநாட்டுப் வேலையை உதறி, வேளாண்மை

கடலூர் மாவட்டத்தின் வள்ளிமதுரம் கிராமத்தில், அண்மைய ஆண்டுகளாக, விவசாயம் பொய்த்துப்போனதால், நகரங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் மக்கள் புலம்பெயர்ந்தனர். அதே கிராமத்தைச் சேர்ந்த கதிர்வேல் என்ற இளைஞர், தான் செய்துகொண்டிருந்த வெளிநாட்டுப் வேலையை உதறிவிட்டு, இயற்கை விவசாயத்தின் வழியே, அக்கிராமத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார்.
கதிர்வேல் அவர்களின் வயலில், மஞ்சளும், ஊடுபயிராக வெங்காயமும் பயிரிட்டப்பட்டிருந்தன. மழையின்மையால் ஈரம் கண்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும், அவ்வயல், பசுமையாகவும், அடிமண் காய்ச்சல் இன்றியும் காணப்படுகிறது. இதுவே இரசாயன உரம் போட்ட வயலாக இருந்தால், அந்த உப்பின் வெப்பத்தில், பயிர்கள் இந்நேரம் காய்ந்து போயிருக்கும். 3 வருடமாக மாட்டு எருவில் உரமூட்டிய வயல், இப்போது மழை தள்ளிப்போனாலும், பயிர்களைப் பாதுகாத்து வருகிறது என்று கூறியபடி, வெங்காயப் பயிரின் தழைகளைக் கோதிவிடுகிறார், கதிர்வேல்.
விவசாயக் குடும்பத்தில் பிறந்து, ஆடு மாடு வளர்ப்பு, வயல்வெளி வாசம் என வளர்ந்த கதிர்வேல் அவர்களுக்கு, இளவயது முதல், வேளாண்மையில் ஈடுபாடு அதிகம். ஆனால் நடைமுறையில், உழைப்புக்கேற்ற பலன் இல்லாததால், தொழில் கல்வி பட்டயப் படிப்பு முடித்ததும், ஊரில் மற்றவர்கள் செய்ததுபோல், இவரும், பிழைப்புக்காக சிங்கப்பூர் சென்றார்.
ஏழு வருடம் கழித்து ஊர் திரும்பியவர், வயலில் முழுமனதோடு களமிறங்கினார். வெளிநாட்டில் உழைத்துச் சேமித்ததையெல்லாம், தனக்குச் சொந்தமான வயலில் முதலீடு செய்தார். கூடுதலாக நிலம் வாங்கி, 2 கிணறுகளுடன் 10 ஏக்கருக்கு விவசாயப் பரப்பை அதிகரித்தார். 40 மாடுகளை வளர்த்து, அவற்றின் வழியே கிடைக்கும் இயற்கை உரத்தால், வயலுக்கு உயிர் சேர்த்தார்.
சொந்த நிலம் மட்டுமன்றி, குத்தகை நிலங்களையும் சேர்த்துக்கொண்டு, தற்போது, 35 ஏக்கரில், இயற்கை விவசாய முயற்சிகளை மேற்கொள்கிறார், கதிர்வேல். எல்லா வயல்களையும் திருத்தி, ஏரிகளில் இருந்து வண்டல் மண் அடிச்சு உயிரூட்டினேன். என்னோட சொந்த நிலத்தில், செலவில்லாத இயற்கை விவசாயத்தை, மக்களுக்கு, காட்சி பொருளாக்கினேன். இப்போ, கணிசமான இளைஞர்கள் விவசாயத்துக்குத் திரும்பி வர்றாங்க. என்னோட மாட்டுப் பண்ணையையும் அதில் கிடைக்கும் வருமானத்தையும் பார்த்துட்டு, வீட்டுக்கு வீடு, கறவை மாடுகள் வளர்க்க ஆரம்பிச்சிருக்காங்க என்று பெருமிதப்படுகிறார், இளம் விவசாயி, கதிர்வேல். (ஆதாரம்: தி இந்து தமிழ் திசை)

Jesus driving the demons away

ஒத்தமை நற்செய்தி கல்லறை மனிதரைக் காத்த இறைவன் - 5

முதல் உலகப்போரின் நூறாவது ஆண்டு நினைவையொட்டி, 2014ம் ஆண்டு, செப்டம்பர் 13ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவ்வுலகப்போரில் இறந்த வீரர்கள் புதைக்கப்பட்டிருந்த Redipuglia இராணுவக் கல்லறையில் திருப்பலியாற்றினார். வடகிழக்கு இத்தாலியில் அமைந்துள்ள Redipuglia கல்லறையில், ஏறத்தாழ 40,000 இத்தாலியப் படைவீரர்களும், 60,000த்திற்கும் அதிகமான அடையாளம் தெரியாத படைவீரர்களும் புதைக்கப்பட்டுள்ளனர்.
உலகில், இன்று, துண்டு துண்டாக நடக்கும் போர்களும், படுகொலைகளும் நாம் சந்திக்கும் மூன்றாம் உலகப்போர் என்று, தன் மறையுரையில் குறிப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை, போர் என்ற கொடுமையை எண்ணி, மனித சமுதாயம் கண்ணீர் வடிக்கவேண்டும் என்று கூறி, தன் மறையுரையை நிறைவு செய்தார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியதுபோல், சிறிதும், பெரிதுமாக உலகின் பல பகுதிகளில் நிகழ்ந்துவரும் மூன்றாம் உலகப் போர், ஒரு தீய சக்தியாக இவ்வுலகை ஆட்டிப்படைக்கிறது என்பதை நாம் மறுக்க இயலாது. வன்முறை, சுயநலம் என்ற தீய ஆவிகளால் தூண்டப்பட்டுள்ள பலர் தொடுத்துவரும் இப்போர்கள், கெரசேனரில், தீய ஆவியால் துன்புறுத்தப்பட்ட மனிதரை நமக்கு நினைவுறுத்துவதால், போரையும், இந்தப் புதுமையையும் இணைத்துச் சிந்திக்க இன்றையத் தேடலில் முயல்வோம்.
'அரபு வசந்தம்' (The Arab Spring) என்ற ஓர் உன்னதமான உணர்வுடன், 2011ம் ஆண்டு, சிரியாவில் ஆரம்பமான உள்நாட்டுப் போர், கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்கின்றது. இது, வெறும் உள்நாட்டுப் போராக மட்டும் நிகழ்ந்திருந்தால், ஒருவேளை, விரைவில், ஏதோ ஒரு தீர்வு வந்திருக்கலாம். ஆனால், இந்தப் போரில், இரஷ்யா, அமெரிக்க ஐக்கிய நாடு, பிரித்தானியா, பிரான்ஸ், சவுதி அரேபியா என்ற பல நாடுகள் நுழைந்துவிட்டதால், யார் பெரியவர் என்ற பலப்பரீட்சை உருவாகியது. அரசின் பெயரால் போரில் ஈடுபட்டுள்ளவர்கள் போதாதென்று, எந்த அரசாலும் கட்டுப்படுத்தமுடியாத சுயநல சுறாமீன்கள், சிரியாவில் ஓடும் இரத்த வெள்ளத்தில் நீந்தி மகிழ்கின்றன. ஆம், ஆயுத விற்பனை, மனித வர்த்தகம் என்ற பல்வேறு தீய சக்திகளின் தொழிற்சாலையாக சிரியா மாறிவிட்டதால், இந்தப் போர் இன்னும் தொடர்கிறது.

சிரியாவிலும், அதன் அண்டை நாடுகளான துருக்கியிலும், ஈராக்கிலும் நிகழும் குண்டுவெடிப்புக்கள் நாம் அடிக்கடி கேட்கும் செய்திகளாகிவிட்டன என்பதால், அவை நம் கவனத்தை அதிகம் ஈர்ப்பதில்லை. இருந்தாலும், சிலவேளைகளில், இந்த வன்முறைகளுடன் தொடர்புள்ள சில விடயங்கள் வெளிச்சத்திற்கு வரும்போது, அவை, நம்மைப் பாதிக்கின்றன, சிந்திக்கத் தூண்டுகின்றன.
2016ம் ஆண்டு, ஆகஸ்ட் 20ம் தேதி, துருக்கி நாட்டின், காசியான்டெப் (Gaziantep) என்ற ஊரில், திருமண விழா ஒன்றில் ஏற்பட்ட ஒரு குண்டுவெடிப்பில், 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தற்கொலைப் படையைச் சேர்ந்த ஒருவரால் இத்தாக்குதல் நடைபெற்றது என்றும், தன்னைச் சுற்றி குண்டுகளைக் கட்டியிருந்தவர், 12 அல்லது 14 வயதுள்ள ஒரு சிறுவனாக இருந்திருக்கக்கூடும் என்றும் செய்திகள் வெளியாயின. அச்சிறுவன் தானாகவே அந்த குண்டுகளை வெடிக்கச் செய்தாரா, அல்லது, வேறொருவர் தூரத்திலிருந்து அதை வெடிக்கச் செய்தாரா என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன.
இத்தாக்குதலுக்கு அடுத்தநாள், ஆகஸ்ட் 21ம் தேதி, ஞாயிறன்று, ஈராக் நாட்டின் கிர்குக் (Kirkuk) நகரில், 11 வயதுள்ள ஒரு சிறுவனின் உடலைச் சுற்றி கட்டப்பட்டிருந்த குண்டுகளை காவல்துறையினர் அகற்றினர் என்று மற்றொரு செய்தி வெளியாகியிருந்தது. இவ்விரு செய்திகளிலும், இஸ்லாமிய அடிப்படைவாதக் குழு ஒன்று தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. அடிப்படைவாதக் குழுவினர், தங்கள் வெறிச் செயல்களுக்கு, சிறுவர், சிறுமியரைப் பயன்படுத்துகின்றனர் என்று கேள்விப்படும்போது, 'இவர்களெல்லாம் மனிதப் பிறவிகள்தாமா?' என்ற கேள்வி எழுகிறது. இவ்வளவு கொடூரமான வெறிச் செயல்களில், சிறுவர், சிறுமிகளையும் ஈடுபடுத்தும் இவர்களை ஆட்டிப்படைப்பது, நிச்சயம், மத உணர்வுகள் அல்ல; வேறு தீய சக்திகளே என்பதை யாரும் புரிந்துகொள்ளமுடியும்.

வெறி உணர்வுகளையும், வன்முறைகளையும் உலகில் பரப்புவதால் இலாபம் அடைவது, ஆயுதங்களை உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்களே என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பலமுறை கூறியுள்ளார். அமெரிக்க ஐக்கிய நாட்டின் காங்கிரஸ் அவை உறுப்பினர்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2015ம் ஆண்டு, மார்ச் 24ம் தேதி ஆற்றிய உரையில், ஆயுதங்களின் உருவாக்கம், வர்த்தகம் இவை குறித்து பேசினார்:
உலகெங்கும் நடைபெறும் ஆயுதம் தாங்கிய மோதல்களை எண்ணிப் பார்க்கிறோம். அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கும் ஆயுதங்கள் ஏன் இவ்வுலகில் இன்னும் விற்பனை செய்யப்படுகின்றன? ஒரே ஒரு பதில் மட்டுமே உள்ளது. பணம். அப்பாவி மக்களின் இரத்தத்தில் தோய்ந்த பணம். ஆயுத உற்பத்தியையும், வர்த்தகத்தையும் குறித்து ஒன்றும் பேசாமல் அமைதி காப்பது, நம்மையும் இக்குற்றத்திற்கு துணைபோகச் செய்துவிடும்.

கெரசேனர் பகுதியில் தீய ஆவி பிடித்த ஒருவரை, இயேசு குணமாக்கிய புதுமையைச் சிந்திக்கும்போது, வெறுப்பு என்ற தீய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டுள்ள அடிப்படைவாதக் குழுவினரையும், அவர்களுக்குப் பின்புலத்தில், தங்கள் இலாபத்தை மட்டும் இலக்காகக் கொண்டு செயலாற்றும் 'மரண வர்த்தகர்களான' ஆயுத உற்பத்தியாளர்களையும் ஆட்டிப்படைக்கும் தீய ஆவிகளை இறைவன் விரட்டியடிக்கவேண்டும் என்ற வேண்டுதலுடன் இன்றையத் தேடலைத் தொடர்வோம்.

கல்லறைகளை தன் உறைவிடமாகக் கொண்டு வாழ்ந்த ஒரு மனிதரை, மீண்டும் மனிதர்கள் நடுவே வாழவைப்பதற்காக, இயேசு இப்புதுமையை ஆற்றுகிறார். ஒரு பெரும் படையென அம்மனிதரை வதைத்துவந்த தீய சக்திகளை இயேசு வெளியேற்றிய காட்சியை,  நற்செய்தியாளர் மாற்கு இவ்விதம் விவரித்துள்ளார்:
மாற்கு நற்செய்தி 5: 11-13
அங்கே மலைப்பகுதியில் பன்றிகள் பெருங் கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்தன. நாங்கள் அப்பன்றிகளுக்குள் புகும்படி எங்களை அங்கே அனுப்பிவிடும் என்று தீய ஆவிகள் இயேசுவை வேண்டின. அவரும் அவற்றுக்கு அனுமதி கொடுத்தார். பின், தீய ஆவிகள் வெளியேறி, பன்றிகளுக்குள் புகுந்தன. ஏறக்குறைய இரண்டாயிரம் பன்றிகள் அடங்கிய அந்தக் கூட்டம், செங்குத்துப் பாறையிலிருந்து, கடலில் பாய்ந்து, வீழ்ந்து மூழ்கியது.

ஒரு மனிதரைக் காப்பாற்ற, 2000 பன்றிகளை இழக்கவேண்டுமா? இக்கணக்கு சரியா, தவறா என்பதைத் தீர்மானிப்பது, நாம் கொண்டிருக்கும் கண்ணோட்டம். நல்லது ஒன்று நடக்க, எவ்வளவானாலும் தியாகம் செய்யலாம் என்பது ஒரு கண்ணோட்டம். எள்ளளவு தியாகம் செய்தாலும், பெருமளவு இலாபம் கிடைக்கவேண்டும் என்பது மற்றொரு கண்ணோட்டம். ஒன்று கருணைக் கண்ணோட்டம், மற்றொன்று வர்த்தகக் கண்ணோட்டம். இந்த வர்த்தகக் கண்ணோட்டமே, ஒரு தனி மனிதரைக் காப்பாற்ற, 2000 பன்றிகளை இழக்கவேண்டுமா என்று நம்மை, கணக்கு பார்க்க வைக்கிறது.

கணக்கு பார்க்கும் இக்கண்ணோட்டத்தால், கெரசேனரில் உருவான சலசலப்பையும், பரபரப்பையும் இப்புதுமையின் இறுதி வரிகள் கூறுகின்றன:
மாற்கு நற்செய்தி 5: 14-20
பன்றிகளை மேய்த்துக்கொண்டிருந்தவர்களோ ஓடிப்போய் நகரிலும் நாட்டுப்புறத்திலும் இதை அறிவித்தார்கள். நடந்தது என்னவென்று பார்க்க மக்கள் வந்தனர். அவர்கள் இயேசுவிடம் வந்தபோது, பேய் பிடித்திருந்தவர், அதாவது இலேகியோன் பிடித்திருந்த அவர், ஆடையணிந்து, அறிவுத் தெளிவுடன் அமர்ந்திருப்பதைக் கண்டு அச்சமுற்றார்கள். நடந்ததைப் பார்த்தவர்கள் பேய் பிடித்தவருக்கும் பன்றிகளுக்கும் நேரிட்டதை அவர்களுக்கு எடுத்துரைத்தார்கள். அப்பொழுது அவர்கள் தங்கள் பகுதியை விட்டுப் போய்விடுமாறு இயேசுவை வேண்டிக்கொண்டார்கள்.

மேற்கண்ட வரிகளில், ஒரு சில அம்சங்கள் நம் கவனத்தை ஈர்க்கின்றன. இப்புதுமை நிகழ்ந்தபோது, வெகு சிலரே, அதாவது, இயேசுவின் சீடர்களும், பன்றிகளை மேய்த்துக்கொண்டிருந்தவர்களும் அங்கிருந்தனர் என்பதைப் புரிந்துகொள்ளலாம். இவ்விரு குழுவினரும், வெவ்வேறு கண்ணோட்டத்துடன் இப்புதுமையைக் கண்டிருக்கவேண்டும். சீடர்களின் கண்ணோட்டத்தில், குணமான மனிதர் மையமானார். பன்றிகளை மேய்த்தப் பணியாளர்கள் கண்ணோட்டத்தில், கடலில் மூழ்கிய 2000த்திற்கும் அதிகமான பன்றிகள் மையமாக மாறின.

இந்த வர்த்தகக் கண்ணோட்டத்தால் பாதிக்கப்பட்ட அப்பணியாளர்கள் ஓடிப்போய் நகரிலும் நாட்டுப்புறத்திலும் இதை அறிவித்தார்கள். அவர்கள் அறிவித்த செய்தியில் எதற்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பர் என்பதை நம்மால் கணிக்கமுடியும். அந்த ஊரின் பொதுச் சொத்தான 2000த்திற்கும் அதிகமான விலங்குகளின் இழப்பு, அவர்கள் அறிவிப்பில் முக்கியத்துவம் பெற்றிருக்கும் என்பது உறுதி.
அப்பணியாளரின் அறிவிப்பைத் தொடர்ந்து, ஊர் மக்கள் கல்லறைத் தோட்டத்திற்கு விரைந்திருக்க வேண்டும். அம்மக்கள் நடுவேதீய ஆவி பிடித்த மனிதரின் குடும்பத்தினரும் வந்திருப்பர். அம்மனிதருக்குக் கிடைத்த விடுதலையைக் கண்டு, அவரது குடும்பத்தினர் நிம்மதி அடைந்திருப்பர். ஆனால், ஊரிலிருந்த மற்றவர்கள், தங்கள் நிம்மதியை இழந்தனர். அவர்கள் அச்சமுற்றனர், இயேசுவை ஊரைவிட்டு போய்விடுமாறு வேண்டிக்கொண்டனர் என்று நற்செய்தியாளர் மாற்கு குறிப்பிடுகிறார். இதைத் தொடர்ந்து, அங்கு நிகழ்ந்தவற்றை நாம் அடுத்தத் தேடலில் அலசுவோம்.


No comments:

Post a Comment