08 September, 2020

விவிலியத்தேடல்: லூக்கா நற்செய்தி – கூன் விழுந்த பெண் குணமடைதல் 3

 

Steaming chicken sizzler with noodles

https://www.niralicookery.com

விதையாகும் கதைகள் : முகர்வதற்கும், கேட்பதற்கும் விலை

பெருநகர் ஒன்றில், வறியோருக்கென அரசால் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது தளத்தில், ஏழை மாணவர் ஒருவர் தனியே வாழ்ந்துவந்தார். பகுதிநேர வேலை செய்துகொண்டே, தன் கல்வியைத் தொடர்ந்த அவர், ஒவ்வொருநாளும், இரண்டுவேளை மட்டும், வெறும் சோறு பொங்கி சாப்பிட்டுவந்தார். மீதிப்பணத்தையெல்லாம், தன் மேற்படிப்பிற்காகச் சேர்த்துவந்தார்.

ஒருநாள் இரவு, அவர் சோறு உண்பதற்குமுன், வீட்டின் சன்னலைத் திறந்தார். அவர் வாழ்ந்த அறைக்குக் கீழ் புதிதாக ஆரம்பிக்கப்பட்டிருந்த உணவகத்திலிருந்து அறுசுவை உணவின் நறுமணம் அந்த சன்னல் வழியே நுழைந்து, அவரது மூக்கைத் துளைத்தது. அவர் உடனே, தான் தயார் செய்திருந்த சோற்றை ஒரு தட்டில் பரிமாறி, அந்தச் சன்னலுக்கருகே அமர்ந்தபடி, உணவகத்திலிருந்து வந்த நறுமணத்தை முகர்ந்தவாறு, உணவை முடித்தார். அடுத்து வந்த நாள்களில், இந்தப் பழக்கம் தொடர்ந்தது.

ஒருநாள், அவரைக் காணவந்த நண்பர் ஒருவர், அவரை அழைத்துக்கொண்டு, அந்த உணவகத்திற்குச் சென்றார். உணவகத்தில் அமர்ந்து இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது, ஏழை மாணவர், அந்த உணவகத்திலிருந்து மேலே வரும் நறுமணத்தின் உதவியோடு தான் உணவு உண்பதைப்பற்றிக் கூறினார். அவர்களது உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த உணவகத்தின் உரிமையாளர், தன் உணவகத்தின் நறுமணத்தைப் பயன்படுத்திய மாணவர், தனக்கு பணம் செலுத்தவேண்டுமெனக் கூறினார். மாணவர் மறுத்தார்.

இருவரும், அவ்வூரில் இருந்த நீதிபதியிடம் சென்றனர். வழக்கைச் செவிமடுத்த நீதிபதி, மாணவரிடம், "உணவகத்தின் நறுமணத்தை நீ முகர்ந்தது உண்மையா?" என்று கேட்டார். மாணவர் 'ஆம்' என்று சொன்னதும், "சரி, உன்னிடம் எவ்வளவு பணம் உள்ளதோ, அதையெல்லாம் என்னிடம் கொண்டு வா" என்று கூறி, மாணவரை அனுப்பினார். மாணவர் தன் அறைக்குச் சென்று, தன் மேற்படிப்புக்காக சேர்த்துவைத்திருந்த பணத்தையெல்லாம் கொண்டுவந்தார். அவை அனைத்தும் நாணயங்களாக இருந்தன.

நாணயங்கள் இருந்த பையைக் கண்டதும், உணவக உரிமையாளர் பெரும் மகிழ்ச்சியடைந்தார். நீதிபதி, தன் பணியாளரிடம், ஒரு வெண்கலக் கிண்ணத்தைக் கொண்டுவரச் சொன்னார். பின்னர், அந்தப் பையில் இருந்த நாணயங்களை எடுத்து, ஒவ்வொன்றாக அந்தக் கிண்ணத்தில் போட்டார். ஒவ்வொரு நாணயமும், ஒலியெழுப்பிய வண்ணம் கிண்ணத்தில் விழுந்தன.

பையில் இருந்த நாணயங்கள் அனைத்தையும் கிண்ணத்தில் போட்ட நீதிபதி, மீண்டும் அவற்றை பையில் போட்டு, அந்த மாணவரிடம் கொடுத்தார். இதைக்கண்டு அதிர்ச்சியுற்ற உரிமையாளர், "எனக்குச் சேரவேண்டிய பணம் எங்கே?" என்று கேட்டார். அதற்கு நீதிபதி, "அவர் முகர்ந்த நறுமணத்திற்கு ஈடாக, நீங்கள் நாணயங்களின் ஒலியைக் கேட்டுவிட்டீர்கள். அதுதான் உங்களுக்குச் சேரவேண்டியது" என்று தீர்ப்பளித்தார்.

Immediately she straightened up and praised God. – Luke 13:13

https://www.freebibleimages.org

லூக்கா நற்செய்தி கூன் விழுந்த பெண் குணமடைதல் 3 

செப்டம்பர் 8, இச்செவ்வாயன்று அன்னை மரியாவின் பிறந்தநாளைக் கொண்டாடினோம். அன்னையின் பிறந்தநாள், நலன்கள் அனைத்தையும் வழங்கும் ஆரோக்கிய அன்னையின் திருவிழாவாக, இந்தியாவின், வேளைநகரிலும், இன்னும், அன்னையின் பெயரால், உலகின் பலநாடுகளில் உருவாக்கப்பட்டுள்ள திருத்தலங்களிலும் கொண்டாட்டப்பட்டது.

ஆரோக்கிய அன்னைக்கென உருவாக்கப்பட்டுள்ள திருத்தலங்களில், கிறிஸ்தவர்கள் மட்டுமன்றி, பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களும் இலட்சக்கணக்கில் கூடிவந்து சிறப்பிக்கும் இத்திருநாள், இவ்வாண்டு, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சிறப்பிக்கப்பட்டது. அன்னையை நாடி, நலன்களைப் பெறுவதற்கு, மக்கள் கூடிவரக்கூடாது என்று, கோவிட்-19 தொற்றுக்கிருமி தடைசெய்துள்ளது.

மக்களுக்கு நலம் வழங்க, ஆண்டவனும், அன்னை மரியாவும் தயாராக இருக்கும்வேளையில், ஒரு கிருமியும், அதைக்கண்டு அஞ்சும் அரசுகளும், தடைகள் விதிப்பதைக் காணும்போது, "சாமி வரம் கொடுத்தாலும், பூசாரி வரம் கொடுக்கமாட்டார்" என்ற கூற்று நினைவுக்கு வருகிறது.

இறைவனுக்கும் நமக்கும் இடையில் வரும், சிலவேளைகளில், இடையூறாக வரும் சட்டங்கள், தடைகள், அகியவற்றை வலியுறுத்தும் பூசாரிகள், குருக்கள், ஆகியோரை எண்ணிப்பார்க்கும்போது, விக்ரம் பாட் (Vikram Bhatt) என்ற இந்திய திரைப்பட இயக்குனர் எழுதிய ஒரு கட்டுரை நினைவுக்கு வருகிறது.

No one should stand between you and God’ அதாவது, 'உனக்கும் கடவுளுக்கும் இடையே யாரும் குறுக்கே நிற்கக்கூடாது' என்ற தலைப்பில் விக்ரம் அவர்கள் எழுதிய இக்கட்டுரையில், அவர் சித்திரித்துள்ள ஒரு காட்சி, இன்றைய விவிலியத்தேடலைத் தொடர்வதற்கு உதவியாக உள்ளது.

பள்ளியிலிருந்து திரும்பிவரும் சிறுவன் தன் தாயைக் கட்டி அணைக்க ஓடுகிறான். அவர்கள் வாழும் அடுக்குமாடி கட்டடத்தின் காவலாளி, அந்நேரம் அங்கு வந்து, ‘அம்மாவை அணைப்பதற்கு இது நேரமல்ல என்று சிறுவனைத் தடுக்கிறார்என்று அக்காட்சியை விக்ரம் அவர்கள் விவரித்துள்ளார். அந்தக் காவலாளியின் செயல், நம்மை எரிச்சலடையச் செய்கிறது. அவரது கட்டளை, எவ்வளவு மடமையானது என்பதை நாம் உணர்கிறோம்.

இதையொத்த நிகழ்வுகள், நம் கோவில்களில், ஆலயங்களில், தொழுகைக்கூடங்களில் நிகழ்கின்றன என்று விக்ரம் அவர்கள் இக்கட்டுரையில் விளக்கிக் கூறியுள்ளார். கடவுளைச் சந்திக்கச் செல்லும் மனிதர்களுக்குத் தடையாக இருப்பவர்கள், ஆலயங்களில் இருக்கும் குருக்கள் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். இக்கருத்தை வலியுறுத்தவே, அவர், அம்மா, மகன், காவலாளி என்ற அந்த உருவகத்தைப் பயன்படுத்தியுள்ளார்.

கடவுளைச் சந்திக்கச் செல்வோரை வரிசையில் நிறுத்தும் விதிமுறைகள், பணம் இருந்தால், வரிசைகள் தேவையில்லை என்ற விதிவிலக்கு... என்று, கோவில்களில் காணப்படும் குறைகளை இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் விக்ரம்.

ஒரு கோவிலில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். ஒருமுறை, கோவிலில் இருந்த ஒரு தெய்வத்தின் சிலையைத் தொட, அவர் முயற்சித்தபோது, அந்தக் கோவில் பூசாரி, அவரது கரங்களை கோபத்துடன் தட்டிவிட்டதாகவும், காரணம் கேட்டதற்கு, சிலைகளைத் தொடும் உரிமை, தனக்கு மட்டுமே உண்டு என்று, பூசாரி சொன்னதாகவும், விக்ரம் அவர்கள் கூறியுள்ளார்.

இத்தகைய, அல்லது, இதையொத்த அனுபவம் நமக்கும் நேர்ந்திருக்க வாய்ப்புண்டு. இறைவனைச் சந்தித்து, வரங்களைப் பெற கோவிலுக்குச் சென்றால், அங்கு, இறைவன் வரம் தர விழைந்தாலும், அந்த வரத்தைப் பெறுவதற்கு, பல்வேறு விதிமுறைளை சுமத்தும் பூசாரிகளும், குருக்களும் கோவில்களில் வலம்வருவதை நாம் அறிவோம். அத்தகைய ஒரு நிகழ்வை, நாம் தற்போது சிந்தித்து வரும் புதுமையிலும் காண்கிறோம்.

18 ஆண்டுகள் தீய ஆவியின் பிடியில் சிக்கி, 'சிறிதும் நிமிர முடியாதவாறு கூன்விழுந்த நிலையில்' இருந்த ஒரு பெண்ணை, இயேசு, தன் அருகில் அழைத்து, அவர் மீது தன் கைகளை வைத்து குணமாக்கிய வேளையில், தொழுகைக்கூடத்தின் தலைவர் கோபம் கொண்டு, மக்களை விரட்ட முற்பட்டார் என்பதை, சென்ற தேடலின் இறுதியில் குறிப்பிட்டோம். தொழுகைக்கூடத் தலைவர் பக்கம் நம் கவனத்தைத் திருப்புவதற்கு முன், இந்தப் புதுமையால் குணமடைந்த பெண்ணின் பக்கம் நம் சிந்தனைகளைத் திருப்புவோம். இப்பெண்ணைக் குறித்து ஒரு சில கருத்துக்களை சென்ற விவிலியத் தேடலில் சிந்தித்தோம். இன்னும் ஒரு சில கருத்துக்களை இன்று தொடர்கிறோம்.

நமது இலக்கியங்களிலும், கற்பனைக் கதைகளிலும் முதுகுத்தண்டு வளைந்து, கூன்விழுந்த நிலையில் இருக்கும் ஆண்களும், பெண்களும், பெரும்பாலும், தீமையின் வடிவங்களாகச் சித்திரிக்கப்பட்டுள்ளனர்.

பரதனின் தாயாக, இராமாயணத்தில் கூறப்பட்டிருக்கும் கைகேயியின் மனதில், இராமரை காட்டுக்கு அனுப்பிவிட்டு, பரதனை அரியணை ஏற்றும் சூழ்ச்சியை விதைக்கவரும் மந்தரை என்ற பணிப்பெண்ணைச் சந்திக்கிறோம். மனதில் கோணலான எண்ணங்களைச் சுமந்துவந்த மந்தரை, உடலளவிலும் ஒரு கூனியாக சித்திரிக்கப்பட்டுள்ளார். இவரது தூண்டுதலால், இராமன் காட்டுக்கு அனுப்பப்படுகிறார்.

பிரெஞ்சு மொழியில், விக்டர் ஹியூகோ (Victor Hugo) என்பவர் 1831ம் ஆண்டு உருவாக்கிய Notre-Dame de Paris என்ற நெடுங்கதை, ஆங்கிலத்தில் The Hunchback of Notre-Dame, அதாவது, "நோத்ருதாமின் கூனன்" என்ற பெயரில் வெளியானது. இந்நூலில் சித்திரிக்கப்படும் Quasimodo என்பவர், நோத்ருதாம் ஆலயத்தில் மணியடிப்பவர். கூன்விழுந்த நிலையில் இருக்கும் அவரை, ஊர் மக்கள் அனைவரும், சாத்தானின் மறுஉருவம் என்று, வெறுத்து ஒதுக்கியதாக, இந்நூலில் கூறப்பட்டுள்ளது.

இஸ்ரயேல் மக்களிடையே, கூன் விழுந்தோரும், குள்ளர்களும் இறைவனின் சாபத்தைப் பெற்றவர்கள் என்றும், அவர்கள் கடவுளுக்கு காணிக்கை செலுத்தக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது:

லேவியர் 21:16-17,20-21

ஆண்டவர் மீண்டும் மோசேயிடம் கூறியது: “நீ ஆரோனிடம் கூறவேண்டியது; உன் வழிமரபினரில் உடல் ஊனமுற்றவன் தன் கடவுளுக்கு உணவுப் படையலைச் செலுத்துதல் ஆகாது. கூனன், குள்ளன்,... உடல் ஊனமுற்ற எவனும் ஆண்டவரின் நெருப்புப் பலியைச் செலுத்த அருகில் வரவேண்டாம்."

கூன் விழுந்த நிலையில் வாழ்வோரை, இலக்கியங்களும், ஏன், மதங்களும் எதிர்மறை எண்ணங்களுடன் காண்பதால் விளையும் வேதனைகள் ஒரு புறம் என்றால், அத்தகைய குறைபாட்டுடன் வாழ்வது, உடலளவில் உருவாக்கும் வேதனைகளும் மிகப் பெரியவை.

உடலின் கட்டமைப்பைப் பொருத்தவரை, மனிதர்களையும், ஏனைய விலங்குகளையும் வேறுபடுத்தும் ஒரு முக்கிய அடையாளம், மனிதர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிமிர்ந்த முதுகுத்தண்டு. அந்த முதுகுத்தண்டு வளைந்துபோனால், நாம் மீண்டும் ஒரு விலங்கைப்போல வாழும் கொடியநிலைக்கு உள்ளாகிறோம்.

மேலும், நம் உடலின் மிக முக்கிய அங்கமாக விளங்கும் முதுகுத்தண்டு, நம் மூளையையும், உடலின் அனைத்துப் பகுதிகளையும் இணைக்கும் நரம்புகள் அனைத்தையும், பாதுகாக்கிறது. முதுகுத்தண்டில் ஏற்படும் குறைகள், நரம்புகளைப் பாதித்து, நம் உறுப்புக்களைச் செயலிழக்கச் செய்துவிடுகின்றன.

கூன் விழுந்த நிலையில் வாழ்ந்த அப்பெண், ஒவ்வொருநாளும், உடலளவில் வேதனைகளையும், சமுதாய அளவில், வெறுப்பையும் உணர்ந்தவர். அத்தகைய நரக வேதனையில், 18 ஆண்டுகளாக வாழ்ந்த அவரை, இயேசு விடுவித்தார்.

விடுதலையடைந்த அப்பெண் செய்த முதல் செயல், நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது. "உடனே அவர் நிமிர்ந்து, கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்" (லூக்கா 13:!3) என்று நற்செய்தியாளர் லூக்கா கூறியுள்ளார். அப்பெண், கடவுளைப் போற்றிப் புகழ்ந்த சொற்கள், அன்னை மரியாவின் புகழ்ப்பாடலை எதிரொலித்திருக்கக்கூடும். அந்தப் புகழ்ப்பாடலிலும், அன்னை மரியா,  தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார் (லூக்கா 1:52) என்று பாடியபோது, இந்தப் பெண்ணைப்போன்று இஸ்ரயேல் சமுதாயத்தில் வாழ்ந்த பலரின் சார்பாக, அவர் இறைவனைப் புகழ்திருக்கவேண்டும்.

அந்தப் பெண்ணுடன் இணைந்து, தொழுகைக்கூடத்தில் இருந்த பலர், இறைவனைப் போற்றி புகழ்ந்திருப்பர், இயேசுவின் வல்லமையைக் கண்டு வியந்திருப்பர். நாம் இந்தத் தேடலை மேற்கொண்டுள்ள வேளையில், உலகின் பல திருத்தலங்களில், ஆரோக்கிய அன்னையின் பரிந்துரையால், தொடர்ந்து பல புதுமைகள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன என்பதை மறவாமல், நம் உலகிற்குத் தேவையான நலன்களை வழங்கிவரும் இறைவனை, நாமும், அன்னை மரியாவோடு இணைந்து, போற்றிப் புகழ்வோம்.

பொங்கிவரும் பாலில் நீர் தெளித்து அடக்குவதுபோல், தொழுகைக்கூடத்தில் பொங்கியெழுந்த மகிழ்வை, தடுத்து நிறுத்த, தொழுகைக்கூடத் தலைவர் வருகிறார்.

லூக்கா 13:14

இயேசு ஓய்வுநாளில் குணமாக்கியதைக் கண்ட தொழுகைக்கூடத் தலைவர் கோபம்கொண்டு, மக்கள் கூட்டத்தினரைப் பார்த்து, “வேலை செய்ய ஆறு நாள்கள் உண்டே; அந்நாள்களில் வந்து குணம் பெற்றுக்கொள்ளுங்கள்; ஓய்வுநாளில் வேண்டாம்” என்றார்.

இதைத் தொடர்ந்து, அந்த தொழுகைக்கூடத்தில் நிகழ்ந்தவற்றை, நாம் அடுத்தத் தேடலில் சிந்திப்போம்.


No comments:

Post a Comment