05 October, 2021

விவிலியத்தேடல்: திருப்பாடல் 18 - அரசரின் வெற்றிப் பாடல் 1

 
Psalm 18 - Commentary

"என்னுடன் பணியாற்றும் சிலர், விரும்பி கேட்டுக்கொண்டதால், என் சுயசரிதையை (தன் வரலாற்றை) எழுத சம்மதித்தேன். இந்த வரலாற்றின் முதல் பக்கத்தை எழுதி முடித்தபோது, பாம்பேயில் கலவரம் வெடித்தது. எனவே, என் பணி தடைப்பட்டது. இதற்குப்பின் தொடர்ந்த பல நிகழ்வுகளின் இறுதியில், நான் எரவாடா சிறையில் அடைக்கப்பட்டேன்."
இந்திய விடுதலையின் சிற்பியாக, இந்திய தேசத் தந்தையாக போற்றப்படும் மோகன்தாஸ் கே. காந்தி அவர்கள், இச்சொற்களுடன், தன் சுயசரிதையை ஆரம்பித்துள்ளார். "Autobiography: The Story of My Experiments with Truth", அதாவது, "சுயசரிதை: உண்மையுடன் நான் மேற்கொண்ட சோதனைகளின் கதை" என்ற தலைப்பில், காந்தியடிகள் எழுதிய சுயசரிதை, 1925ம் ஆண்டு வெளியானது. இது தமிழில், 'சத்திய சோதனை' என்ற பெயரில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
தான் எதற்காக இந்நூலை உருவாக்கினார் என்பதை, காந்தியடிகள், தன் சுயசரிதையில், இவ்வாறு கூறியுள்ளார்: "சத்தியாகிரகம், அதாவது, அறவழிப் போராட்டத்தின் சோதனைகளை விளக்கிக் கூறுவதே என் நோக்கம். நான் எவ்வளவு நல்லவன் என்பதைக் கூறுவதற்கல்ல" என்று, காந்தியடிகள் தன் நூலில் தெளிவுபடுத்தியுள்ளார்.

அண்மையில், அதாவது, கடந்த சனிக்கிழமை, காந்தியடிகளின் பிறந்தநாளை சிறப்பித்தோம். ஒவ்வோர் ஆண்டும், காந்தியடிகளின் பிறந்தநாள், அக்டோபர் 2ம் தேதி சிறப்பிக்கப்படும் வேளையில், ஐக்கிய நாடுகள் நிறுவனம், அதை, "வன்முறையற்ற உலக நாள்" (International Day of Non violence) என்று சிறப்பிக்கிறது. வன்முறையற்ற 'அகிம்சை' முறையையும், 'சத்தியாகிரகம்', என்ற அறவழி போராட்டத்தையும் உலகறியச் செய்த பெருமை, காந்தியடிகளைச் சேரும்.

காந்தியடிகளின் 'அகிம்சை', 'சத்தியாகிரகம்' ஆகிய உன்னத வழிகளை தன் வாழ்வில் கடைபிடித்து, அமெரிக்க ஐக்கிய நாட்டில், கறுப்பின மக்களின் சம உரிமைகளுக்காகப் போராடியவர், மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர். காந்தியடிகள், தென் ஆப்ரிக்காவில், தன் அறவழி போராட்டத்தைத் துவக்கினார். அவரது வழியைப் பின்பற்றி, தென் ஆப்ரிக்காவில், இனவெறியை ஒழிக்க, வன்முறையற்ற போராட்டத்தை தலைமையேற்று நடத்தியவர், நெல்சன் மண்டேலா.
இவ்விருவரைப்போல், அறவழியைக் கடைபிடித்து, அதிகக் கொடுமைகளைத் தாங்கி, தீமைகளுக்கு எதிராகப் போராடிய பலர், வரலாற்றில் தடம் பதித்துள்ளனர். அவர்களில் ஒரு சிலர், மகாத்மா காந்தியைப்போல், நெல்சன் மண்டேலாவைப்போல், தங்கள் வாழ்வை, சுயசரிதையாக அடுத்த தலைமுறைகளுக்கு வழங்கிச் சென்றுள்ளனர்.

விவிலியத்திலும், தீமைகளை எதிர்த்துப் போராடிய பலரின் கதைகள் பதிவாகியுள்ளன. அவர்களில் யாரும் தங்கள் சுயசரிதையை விவிலியத்தின் ஒரு நூலாக வெளியிடவில்லை. ஆயினும், விவிலியத்தின் ஒரு சில பகுதிகள், சுயசரிதையைப்போல் எழுதப்பட்டுள்ளன. அத்தகைய ஒரு பகுதியில் நம் விவிலியத்தேடல் இன்று ஆரம்பமாகிறது.
'அரசரின் வெற்றிப் பாடல்' என்ற தலைப்புடன் பதிவாகியுள்ள 18வது திருப்பாடல், தாவீதின் சுயசரிதைபோல, குறிப்பாக, அவரது போராட்டங்களில், ஆண்டவர் வழங்கிய வெற்றியைப் பறைசாற்றும் ஒரு பாடலாக அமைந்துள்ளது.

இத்திருப்பாடலின் ஒரு சில தனித்துவமான அம்சங்கள் மீது, முதலில் நம் கவனத்தைத் திருப்புவோம்.
திருப்பாடல்கள் நூலில் பதிவாகியுள்ள 150 திருப்பாடல்களில், அதிகமான இறைவாக்கியங்கள் கொண்ட திருப்பாடல்கள் என்ற வரிசையில், 18வது திருப்பாடல் நான்காவது இடத்தைப் பெறுகிறது. 176 இறைவாக்கியங்களுடன் காணப்படும் 119வது திருப்பாடல், 72 இறைவாக்கியங்களுடன் காணப்படும் 78வது திருப்பாடல், 52 இறைவாக்கியங்களுடன் காணப்படும் 89வது திருப்பாடல் ஆகிய மூன்றையும் அடுத்து, 50 இறைவாக்கியங்களுடன் பதிவாகியுள்ள 18வது திருப்பாடல், நான்காவது நீளமான திருப்பாடலாக அமைந்துள்ளது. இது, இத்திருப்பாடலின் முதல் தனித்துவம்.

அடுத்ததாக, இத்திருப்பாடலின் முன்குறிப்பு. பொதுவாக, திருப்பாடல்கள் பலவற்றில் காணப்படும் முன்குறிப்புகள், அப்பாடல், எந்தச் சூழலில் உருவானது என்பதை, ஒரு சில சொற்களில் பதிவு செய்துள்ளன. 18, மற்றும் 60 ஆகிய இரு திருப்பாடல்கள் மட்டுமே, நீண்ட முன்குறிப்புகளைக் கொண்டுள்ளன.
"பாடகர் தலைவர்க்கு: ஆண்டவரின் அடியாராகிய தாவீது, தம் எதிரிகள் கையினின்றும் சவுலின் கையினின்றும் அவர் தம்மை விடுவித்த நாளில் அவரை நோக்கிப் பாடியது" என்ற சொற்களை, 18வது திருப்பாடலின் முன்குறிப்பாகக் காண்கிறோம்.

இந்த முன்குறிப்பில், எதிரிகள் கையினின்றும் சவுலின் கையினின்றும் என்று, எதிரிகள் குழுவிலிருந்து சவுலை தனியே பிரித்துச் சொல்லியிருப்பது, நம் கவனத்தை ஈர்க்கிறது. தாவீதின் வாழ்வில், மிகப்பெரும் எதிரியாக இருந்தவர் மன்னன் சவுல். அவரை, ஏனைய எதிரிகளோடு இணைக்காமல் பிரித்துக் காட்டியிருப்பதை, இரு வழிகளில் பொருள் கொள்ளலாம். ஒன்று, தன் எதிரிகள் அனைவரிலும் முதன்மையான எதிரியாக சவுல் இருந்ததால், அவரது பெயர் தனியே சொல்லப்பட்டிருக்கிறது என்ற கோணத்தில் நாம் எண்ணிப்பார்க்கலாம். அல்லது, தாவீதைப் பொருத்தமட்டில், சவுல், இறைவனால் தெரிவு செய்யப்பட்டவர் என்பதால், அவரை தாவீது ஓர் எதிரியாகக் கருதமுடியவில்லை. எனவே, அவர், எதிர்கள் என்ற குழுவிலிருந்து பிரித்து சொல்லப்பட்டுள்ளார் என்ற கோணத்திலும் சிந்திக்கலாம். இந்த எண்ணத்தை, நாம், ஏற்கனவே, 17வது திருப்பாடலில் சிந்தித்தோம்.

சாமுவேல் முதல் நூல், 24, மற்றும் 26 ஆகிய இரு பிரிவுகளில், (காண்க. 1 சாமுவேல் 24:1-15; 26:1-25) தாவீது எவ்வாறு, சவுலின் உயிரைப் பறிக்காமல் நடந்துகொண்டார் என்பதை, இரு நிகழ்வுகளில் நாம் காண்கிறோம். தாவீதைப் பொருத்தவரை, சவுல், இறைவனால் தெரிவு செய்யப்பட்டவர் என்பதால், அவருக்கு தாவீது தன் உள்ளத்தில் தனியொரு இடத்தை வழங்கியிருந்தார். அந்த உணர்வு, 18வது திருப்பாடலின் முன் குறிப்பிலும் வெளிப்படுகிறது.

18வது திருப்பாடலுக்கு, மற்றுமொரு தனித்துவமான அம்சம் உள்ளது. விவிலியத்தின் ஒரு சில நூல்களில் கூறப்பட்டுள்ள நிகழ்வுகள், வேறு சில நூல்களில் கூறப்பட்டுள்ளன. ஆனால், இவை வெவ்வேறு சொற்களுடன் பதிவாகியுள்ளன. இயேசு நிகழ்த்திய அனைத்து புதுமைகளிலும், ஒரே ஒரு புதுமை மட்டும், நான்கு நற்செய்திகளிலும் பதிவாகியுள்ளன என்பதை நாம் அறிவோம் - (மத். 14:13-21; மாற். 6:30-44; லூக். 9:10-19; யோவா. 6:1-14).

இயேசு 5000த்திற்கும் அதிகமான மக்களுக்கு உணவளித்த இப்புதுமை, சீடர்களின் நினைவுகளில் எவ்வளவு ஆழமாகப் பதிந்திருந்தது என்றால், இப்புதுமையில் கூறப்பட்டுள்ள எண்ணிக்கைகள் அனைத்தும் நான்கு நற்செய்திகளிலும் மாற்றம் ஏதுமின்றி, ஒரே அளவு எண்ணிக்கைகளாக உள்ளன. பெண்களும் சிறுவர், சிறுமியரும் நீங்கலாக இப்புதுமையால் பயனடைந்த ஆண்களின் எண்ணிக்கை 5000; இப்புதுமையைத் துவக்கிவைக்கப் பயன்படுத்தப்பட்டவை, ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும்; அனைவரும் வயிறார உண்டபின், மீதமிருந்த துண்டுகள், சேகரிக்கப்பட்டது, பன்னிரண்டு கூடைகளில்... என்று, நான்கு நற்செய்திகளும் ஒரே எண்ணிக்கைகளைக் குறிப்பிட்டுள்ளன. ஆனால், புதுமை நிகழ்ந்த இடம், அந்த அப்பங்களையும் மீன்களையும் கொண்டு வந்த சிறுவன் என்று ஏனைய அம்சங்களில் வேறுபாடுகள் உள்ளன. ஒரே புதுமை, நான்கு நற்செய்திகளிலும், வெவ்வேறு சொற்களுடன் பதிவாகியுள்ளது.

திருத்தூதர் பணிகள் நூலில், பவுலின் மனமாற்ற நிகழ்வு, மூன்று இடங்களில் பதிவாகியுள்ளது. தமஸ்கு நகர் செல்லும் வழியில் சவுல் இயேசுவைச் சந்தித்த நிகழ்வு, இந்நூலின் 9ம் பிரிவில், 19 இறைவாக்கியங்களில் (தி.பணிகள் 9:1-19) கூறப்பட்டுள்ளது. இந்நிகழ்வை, மீண்டும் பவுல், இந்நூலின் 22ம் பிரிவில் (தி.பணிகள் 22:4-16) யூதர்களுக்கு முன், கூறுகிறார். அதன் பின், 26ம் பிரிவில், (தி.பணிகள் 26:12-18) அரசன் அகிரிப்பாவுக்கு முன் மீண்டும் இந்நிகழ்வைக் கூறுகிறார். ஒரே நிகழ்வு, மூன்று இடங்களில் வெவ்வேறு சொற்களில் பதிவாகியுள்ளது.

இவ்விரு எடுத்துக்காட்டுகளைப்போல், விவிலியத்தில், ஒரு சில நிகழ்வுகள், வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு சொற்களில் கூறப்பட்டுள்ளன. ஆனால், விவிலியத்தில் ஓரிரு பகுதிகள் மட்டுமே, ஏறத்தாழ அதே சொற்களில், இரு இடங்களில் பதிவாகியுள்ளன.
எடுத்துக்காட்டாக, அரசர் எசேக்கியா, இறைவாக்கினர் எசாயாவிடம் திருவுளம் கேட்ட நிகழ்வு, அரசர்கள் 2ம் நூல், 19ம் பிரிவிலும், இறைவாக்கினர் எசாயா நூல் 37ம் பிரிவிலும் ஏறத்தாழ, ஒரே சொற்களில் கூறப்பட்டுள்ளது. அதேபோல், நாம் ஏற்கனவே தேடலை மேற்கொண்ட 14வது திருப்பாடல், மீண்டும் 53வது திருப்பாடலாகப் பதிவாகியுள்ளது. நாம் தற்போது தேடலை மேற்கொண்டுள்ள 18வது திருப்பாடல், சாமுவேல் 2ம் நூல், 22ம் பிரிவில் வெகு குறைவான மாற்றங்களுடன் அப்படியே பதிவாகியுள்ளது.

சவுலின் மரணத்தைத் தொடர்ந்து, தாவீது அரசராக பொறுப்பேற்றபின், அவர் இப்பாடலை உருவாக்கியிருக்கலாம் என்று கூறும் விவிலிய விரிவுரையாளர்கள், தாவீது மீண்டும் தன் முதிர்ந்த வயதில், இப்பாடலை நினைவுகூர்ந்து பாடியது, சாமுவேல் 2ம் நூல், 22ம் பிரிவில் இடம்பெற்றுள்ளது என்று கூறுகின்றனர்.
இனிவரும் தேடல்களில், 18வது திருப்பாடலை, ஆறு பகுதிகளாகப் பிரித்து, நாம் பொருள்தேட முயல்வோம்:
1. ஆண்டவரை கற்பாறையாக உருவகித்து பேசுதல் 1-3
2- ஆண்டவரிடம் உதவி வேண்டுதல் 4-6
3. ஆண்டவர் தாவீதுக்கு பதிலிறுத்தல் 7-19
4. ஆண்டவர் மக்களுக்கு வழங்கும் உதவி 20-27
5. தாவீதுக்குரிய அனைத்தும் ஆண்டவரிடமிருந்து வருதல் 28-42
6. ஆண்டவர் தாவீதை அரசராக உருவாக்குதல் 43-50
என்ற இப்பகுதிகளில் நம் தேடல் பயணம் தொடரும்.


No comments:

Post a Comment