02 December, 2009

THE END IS JUST THE BEGINNING... தப்பித்துப் போவதா? தஞ்சம் அடைவதா?

Christ as Judge in the Last Judgement (Michelangelo)

Wish you a HAPPY NEW YEAR… Why am I in such a hurry? This Sunday we begin the Advent season and it is the new year for the liturgical calendar.
My childhood memories of Christmas flood my mind right now. The days preceding Christmas were very exciting. Crib to be put up, decorations to be done, new dress to be stitched (not a time of ‘readymades’ yet), sweets and savouries to be prepared… the list was endless. Everyone in the house was very busy, over-worked, perhaps. I guess this is the same story for any festive season – be it Deepavali, or Pongal in India. Awaiting a function at home or a festival makes us more excited than the festival itself. Expectation and excitement seem to be twins.
Not all expectations can excite us. Awaiting the medical report, pacing the corridor near the ICU of a hospital cannot surely be exciting. We spoke about this two weeks back. That was the last week of the Ordinary Time when the Sunday readings invited us to reflect on the last days (from the Gospel of Mark). Today, we hear of the last days again (from the Gospel of Luke). Right at the beginning of a new liturgical season, we are asked to think of the end of the world… beginning and end… end and beginning. Most religions talk of this. As Christians we are asked to look at death not as a finality but only as a door, a passage to another life…The preface during the Mass for the Dead says: For your faithful life is not ended, only changed. I can remember another quote: "Death is not extinguishing the light; it is putting out the candle because the dawn has come."
Two weeks back I spoke about the Hollywood movie 2012. The trailer shows the hero and his family trying to escape from… armageddon, parousia, apocalypse, end of the world! If this is the end of the world, then where are they trying to escape. In today’s Gospel Christ talks of the end of the world. He asks us not to panic, not to run… (like the family in 2012) but to stand firm with heads held high. Here is the Gospel for us today:

LUKE 21: 25-28; 34-36
Jesus said to his disciples: "There will be signs in the sun, moon and stars. On the earth, nations will be in anguish and perplexity at the roaring and tossing of the sea. Men will faint from terror, apprehensive of what is coming on the world, for the heavenly bodies will be shaken. At that time they will see the Son of Man coming in a cloud with power and great glory. When these things begin to take place, stand up and lift up your heads, because your redemption is drawing near."
"Be careful, or your hearts will be weighed down with dissipation, drunkenness and the anxieties of life, and that day will close on you unexpectedly like a trap. For it will come upon all those who live on the face of the whole earth. Be always on the watch, and pray that you may be able to escape all that is about to happen, and that you may be able to stand before the Son of Man."


When all the people in the world faint and are scared of what is coming to the world, we are asked to stand up and lift up our heads. How is this possible? Change your perspective. Look at that calamity not as an end of the world, but as the beginning of redemption. Not an end but a beginning. The trailer of the movie 2012 has this text at the end of the trailer – possibly of the movie too: THE END… followed by IS JUST THE BEGINNING. If the end is seen as destruction, then we need to run away from there, escape destruction… but , if the end is seen as redemption, we don’t need to run away; but rather run towards God… the end of the race!

புத்தாண்டு வாழ்த்துக்கள்... இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் இருக்கும் போதே நான் அவசரப்படுகிறேன் என்று நினைக்கிறீர்களா?
திருச்சபை வழிபாட்டில் இந்த ஞாயிறு ஒரு புதிய ஆண்டை ஆரம்பிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் திருவருகைக் காலம் ஒரு வழிபாட்டு ஆண்டை ஆரம்பித்து வைக்கிறது.
திருவருகைக் காலம்... எதிர்பார்ப்பை உண்டாக்கும் காலம். பெரும்பாலும் ஆனந்தமான எண்ணங்களை உள்ளத்தில் விதைக்கும் காலம். எதிர்பார்ப்பு, தயாரிப்பு, வரவேற்பு என்று பல கோணங்களில் திருவருகைக்கால ஞாயிறு சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். இன்றைய சிந்தனைக்கு... எதிர்பார்ப்பு.
சின்ன வயதில் கிறிஸ்மஸ் விழாவுக்கு ஏற்பாடு செய்வதில் மிக, மிக ஆனந்தம் அடைந்ததுண்டு. வீட்டைச் சுத்தம் செய்வது, பலகாரம் செய்வது, குடில் ஜோடிப்பது, புத்தாடைகள் தைத்துக்கொள்வது என்று பல வகையிலும் வீட்டுல எல்லாரும் பிஸியாக இருப்பார்கள். இவ்வளவு தயாரிப்பிற்கு பிறகு வரும் கிறிஸ்மஸ் தினம்?... வந்ததும் தெரியாது; போனதும் தெரியாது. தீபாவளி, பொங்கல் என்று எல்லாத் திருவிழாக்களிலும் வீட்டு வைபவங்களிலும் இது போன்ற அனுபவம் எல்லாருக்கும் இருந்திருக்கும்.
நடக்கப்போகும் நிகழ்வை விட, அதற்கான ஏற்பாடுகள், எதிர்பார்ப்புகள் எப்படி நம்மை இவ்வளவு தூரம் கவர்கின்றன? நல்லது ஒன்று நடக்கப் போகிறது, நல்லது ஒன்றில் பங்கேற்கப் போகிறோம் என்ற எண்ணம் இந்த துடிப்பை, ஆர்வத்தை உண்டாக்குகிறது. அந்த நல்லது நமக்கு நடந்தாலும் சரி, நம்மைச் சுற்றி நடந்தாலும் சரி... ஆனந்தம் ஆர்வம் ஒரே போல் இருக்கும்.
ஆனால் எல்லா எதிர்பார்ப்புகளும் ஆனந்தம், ஆர்வம் இவைகளைத் தருவதில்லையே. வாழ்க்கையில் பல எதிபார்ப்புகள் நம்மை ஆனந்தத்தில் ஆர்வத்தில் மிதக்க வைக்கின்றன. அப்படியே சில எதிர்பார்ப்புகள் நம்மை அச்சத்தில், ஆழ்ந்த துயரத்தில் மூழ்க வைத்து விடுகின்றன. எதிர்பார்ப்புகள் பறக்கவும் வைக்கும் பாதாளத்திலும் தள்ளும்.
நம் குடும்பத்தில் ஒரு குழந்தை பிறக்கப் போகும் நேரம், தேர்வின் முடிவுகளுக்காக காத்திருக்கும் நேரம், வேலைக்கான interview வை முடித்துவிட்டு appointment order கிடைக்குமா என்று காத்திருக்கும் நேரம்... இப்படி பல நேரங்களில் இந்த எதிர்பார்ப்புகளில் அச்சமும், ஆர்வமும் கலந்திருக்கும்.
இன்னும் சில எதிர்பார்ப்புகளில் வேதனைதான் அதிகம் இருக்கும். மருத்துவ பரிசோதனைகள் முடிந்து cancer என்றும் இன்னும் ஒரு சில மாதங்களே உயிருடன் இருக்க முடியும் என்றும் மருத்துவர் சொல்லும் போது, மீதம் உள்ள அந்த நாட்களில் அந்த நோயுள்ளவருக்கோ, அல்லது அவருக்கு நெருங்கியவர்களுக்கோ இருக்கும் மன நிலை? என்னவித எதிர்பார்ப்பு? மருத்துவ உலகு சொன்னதெல்லாம் பொய்த்து விடாதா என்ற ஒரு எதிர்பார்ப்பு அங்கு இருப்பதில்லையா? ஒரு சில சமயங்களில் மருத்துவ பரிசோதனைகள் ஏன் செய்தோம் என்று வருத்தப் பட்டிருகிறோம், தெரியாமலே இருந்திருக்கலாமே என்று ஏங்கியிருக்கிறோம்... ஒரு சில விஷயங்களில் எதிர்காலத்தைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் இருப்பது, ஒரு சில விஷயங்களில் முடிவுகளைத் தெரிந்து கொள்ளாமல் இருப்பது நல்லது.
முடிவுகள் தெரியாமல் நாவல்களைப் படிப்பதில், முடிவுகள் தெரியாமல் திரைப்படங்களைப் பார்ப்பதில் ஒரு தனி ஈடுபாடு வரும். ஆனால், முடிவைத் தெரிந்து கொண்டு நாவல்களைப் படிப்பதில்லையா? திரைப்படங்களைப் பார்ப்பதில்லையா? புகழ் பெற்ற எழுத்தாளர்களின் நாவல்களை மீண்டும் மீண்டும் படிக்கிறோமே, ஒரு சில மிகச் சிறந்த திரைப்படங்களை மீண்டும் மீண்டும் பார்க்கிறோம்.. அப்போதெல்லாம் முடிவுகளைத் தெரிந்து கொண்டு தானே படிக்கிறோம், பார்க்கிறோம்... அந்த அனுபவமே வித்தியாசமானது தானே.
Erich Segal என்பவர் எழுதி, பின்னர் ஒரு வெற்றித் திரைப்படமாக உருவான Love Story என்ற நாவலின் முதல் காட்சி கல்லறையில் ஆரம்பமாகும். இறந்த தன் இளம் மனைவியின் கல்லறையில் பூவைக்க வரும் அந்த இளைஞனுடன் கதை ஆரம்பமாகும்.
கதையின் ஆரம்பத்திலேயே முடிவு தெரிந்ததால், எந்த வித படபடப்போ, எதிர்பார்ப்போ இல்லாமல் ஒரு கவிதை படித்த அல்லது பார்த்த திருப்தி எனக்கு ஏற்பட்டது.
இரு வாரங்களுக்கு முன், ஞாயிறு சிந்தனையின் போது, உலக முடிவு பற்றி மாற்கு நற்செய்தியிலிருந்து ஒரு பகுதியை வாசித்தோம். சிந்தித்தோம். இன்று லூக்கா நற்செய்தியிலிருந்து மீண்டும் உலக முடிவு பற்றி ஒரு வாசகம். திரு வருகைக் காலம் ஆரம்பமாகியிருக்கிறது. இன்றே முடிவைப் பற்றி நமது நற்செய்தி கூறுகிறது. ஆரம்பத்திலேயே, முடிவா? இன்று நற்செய்தியில் சொல்லப்பட்டிருப்பது நம் சொந்த வாழ்வின் முடிவல்ல. இவ்வுலகத்தின் முடிவு. இரு வாரங்களுக்கு முன்னால் நாம் பேசிய 2012 என்ற திரைப்படத்தைப் பற்றி மீண்டும் பேச விழைகிறேன். அந்த படத்தில் வரும் கதாநாயகன் தன் குடும்பத்தை உலக அழிவிலிருந்து காப்பாற்ற முயல்கிறான். வீட்டிலிருந்து காரில் கிளம்பி அவன் செல்லும் போது, அழிவு அவனைத் துரத்துகிறது. அவன் செல்லும் சாலை, கட்டடம் எல்லாம் அவனைச் சுற்றி இடிந்து விழுகின்றன. எப்படியோ முயன்று, விமான நிலையத்தை அடைகிறான், ஒரு சிறு விமானத்தில் தன் குடும்பத்துடன் ஏறுகிறான், விமான ஓடு தளம் அவன் பின்னே இடிந்து கொண்டு வரும் போது அவனது விமானம் மேலெழுந்து பறக்கிறது... படத்தின் trailer மட்டும்தான் பார்த்தேன். அந்த நேரத்தில் என் மனதில் எழுந்த எண்ணம்: ஒரு கேள்வி.... அவன் குடும்பத்தினர் இந்த அழிவிலிருந்து தப்புகிறார்கள்... தப்பி எங்கே போகிறார்கள்? உலகமே அழியும் போது அவர்களால் எங்கே போக முடியும்?
அந்த trailer இன் இறுதியில் வந்த வரிகள் என் சிந்தனையைத் தூண்டியது. THE END என்று வழக்கம்போல் போட்டுவிட்டு உடனே IS JUST THE BEGINNING... என்று காண்பிக்கப்பட்டது. முடிவுதான் ஆரம்பம் என்ற பொருள்படும் இந்த வரிகள் பல மதங்களில் பலவழிகளில் சொல்லப்பட்டுள்ளன. கிறிஸ்தவ விசுவாசம் சொல்வது: இவ்வுலக வாழ்வு முடிவல்ல, மறுவாழ்வின் ஆரம்பம் என்று. இறந்தோரை அடக்கம் செய்யும் திருப்பலியில் சொல்லப்படும் ஒரு ஜெபத்தில் இவ்வார்த்தைகள் பயன் படுத்தப்படுகின்றன. “ஆண்டவரே, உம் விசுவாசிகளுக்கு வாழ்வு மாறுபடுகிறதேயன்றி, அழிக்கப்படுவதில்லை; இம்மண்ணக வாழ்வின் உறைவிடம் அழிந்ததும் விண்ணகத்தின் கதவுகள் அவர்களுக்குத் திறந்துவிடப்படுகின்றன.” இதே எண்ணங்களை அழகிய ஒரு ஆங்கில வாக்கியத்தில் வாசித்திருக்கிறேன். Christian death is like putting out the candle, since daylight has come.

உலக முடிவு பற்றி இன்றைய நற்செய்தி சொல்வதைக் கேட்போம்:
லூக்கா நற்செய்தி 21: 25-28; 34-36
அக்காலத்தில் மானிட மகன் வருகையைப் பற்றி இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “கதிரவனிலும் நிலாவிலும் விண்மீன்களிலும் அடையாளங்கள் தென்படும். மண்ணுலகில் மக்களினங்கள் கடலின் கொந்தளிப்பின் முழக்கத்தினால் கலங்கி, என்ன செய்வதென்று தெரியாது குழப்பம் அடைவார்கள். உலகிற்கு என்ன நேருமோ என எண்ணி மனிதர் அச்சத்தினால் மயக்கமுறுவர். ஏனெனில், வான்வெளிக் கோள்கள் அதிரும். அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதை அவர்கள் காண்பார்கள். இவை நிகழத் தொடங்கும்போது, நீங்கள் தலைநிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது.” மேலும் இயேசு, “உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தாலும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறும் அந்நாள் திடீரென வந்து ஒரு கண்ணியைப்போல் உங்களைச் சிக்க வைக்காதவாறும் எச்சரிக்கையாய் இருங்கள். மண்ணுலகு எங்கும் குடியிருக்கும் எல்லார்மீதும் அந்நாள் வந்தே தீரும். ஆகையால் நிகழப்போகும் அனைத்திலிருந்தும் தப்புவதற்கும் மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கும் எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்” என்றார்.

மக்களெல்லாம் குழம்பிப் போவார்கள், கலக்கம் அடைவார்கள். இந்த நற்செய்தியைக் கேட்கும் நம்மை இயேசு அந்த நேரத்தில் என்ன செய்யச் சொல்கிறார்? தப்பித்து ஓடச் சொல்லவில்லை, தலைதெறிக்க பறந்து செல்லச் சொல்லவில்லை... மாறாக, தலை நிமிர்ந்து நிற்கச் சொல்கிறார்.
மலைபோல் எழும் கடல் அலைகளைக் கண்டும், நிலை குலையாமல் நிற்கச் சொல்கிறார். காரணம்? இதன் பெயர் அழிவல்ல, இதுதான் மீட்பு என்பதால். நாம் பார்க்கும் கண்ணோட்டம் நம் செயல்பாடுகளை மாற்றும்.
அழிவு என்று பார்த்தால், அலறி அடித்து ஓடத்தான் வேண்டும் அந்த திரைப்படத்தில் காட்டப்பட்ட ஹீரோ குடும்பத்தைப் போல... மீட்பு என்று பார்த்தால், தலை நிமிர்ந்து நிற்போம் நம் கடவுளைச் சந்திக்க. தப்பிப்பதற்கு பதில், தஞ்சம் அடைவோம் அந்த இறைவனில். கண்ணோட்டம் செயல்பாடுகளை மாற்றும்.
உலக வரலாற்றில் மனித நம்பிக்கையை முற்றிலும் அழிக்கும் வண்ணம் எழுதப்பட்ட பக்கங்களில் ஹிட்லரின் அராஜகம், அவன் உண்டாக்கிய நாசி வதை முகாம்கள் காணப்படும். இரண்டாம் உலகப் போர் நடந்தபோது, மனித குலத்தின் மீது பலருக்கு அவநம்பிக்கை, வெறுப்பு ஏற்பட்டது. இந்த அவநம்பிக்கையின் உச்சி ஹிட்லர் உருவாக்கிய நாசி வதை முகாம்கள். ஆனால், அந்த முகாம்களில் எத்தனையோ பேர் தலை நிமிர்ந்து நின்றனர். அவர்கள் அம்முகாம்களை நரகங்களாகப் பார்க்க மறுத்து, மீட்பின் நுழைவாயிலாகப் பார்த்தனர். நாசி வதை முகாம்களைப் பற்றி ஆயிரமாயிரம் கதைகள், திரைப்படங்கள் உள்ளன. "வாழ்க்கை அழகானது" (Life is Beautiful) என்ற தலைப்பில் வெளியான படம் நாசி வதை முகாமிற்கு இழுத்து செல்லப்படும் ஒரு சிறு குடும்பத்தைப் பற்றியது. தந்தை, தாய் ஒரு நான்கு வயது சிறுவன். நடப்பது என்ன என்று அறியாமல் இருக்கும் அந்தச் சிறுவனிடம் தந்தை அந்த வதை முகாமில் நடக்கும் ஒவ்வொரு பயங்கரச் செயலுக்கும் வித்தியாசமாக விளக்கம் தருகிறார். அவர்கள் வந்திருப்பது ஒரு விளையாட்டிற்காக, அங்கு திரும்பவும் வீட்டுக்கு போக வேண்டுமென அடம் பிடிக்காமல் இருந்தால் 20 புள்ளிகள் பெறலாம், பசிக்கிறதென்று அழாமல் இருந்தால், 10 புள்ளிகள் பெறலாம்... என்று தந்தை தன் நான்கு வயது சிறுவனிடம் பொய் சொல்லி அவனை அந்த முகாமில் தங்க வைப்பது மிக அழகாகச் சொல்லப்பட்டுள்ளது. இந்தப் புள்ளிகளெல்லாம் பெற்றால்...? ஒரு டாங்க் (Tank) பரிசாகக் கிடைக்கும். திரைப்படத்தின் இறுதியில், தந்தை வீரர்களால் பிடிபடுகிறார். ஆனால் அதைப் பார்க்கும் மகனுக்கு முன்னால் வீர நடை போட்டு செல்கிறார். ஒரு தெரு முனையில் சுட்டுக் கொல்லப்படுகிறார். தந்தை இறந்ததைக் கூட அறிந்து கொள்ளாமல் அந்தச் சிறுவன் அடுத்த நாள் ஜெர்மனி வீழ்ந்ததால், அமெரிக்கப் படையினரின் டாங்க் அந்த முகாமுக்கு வருவதைப் பார்த்து, உண்மையிலேயே அப்பா சொன்னது போல டாங்க்கை வென்று விட்டதாகக் கதை முடிகிறது. நாசி வதை முகாம்களின் பயங்கரங்கள் அந்தச் சிறுவனின் மனதையோ, வாழ்வையோ கொஞ்சமும் பாதிக்கவில்லை. அந்த முகாமிலிருந்து அச்சிறுவன் வெளியேறும்போது, தலை நிமிர்ந்து செல்கிறான். அவனைப் பொறுத்தவரை அவனுடைய அப்பா சொல்லித் தந்த வாழ்க்கை உண்மையிலேயே அழகானது!அன்பர்களே, இந்த திருவருகைக் காலம் முழுவதும் நம்பிக்கைத் தரும் செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முயற்சி செய்கிறேன். நீங்களும், வத்திக்கான் வானொலி மூலம் உங்கள் உள்ளத்தில் நம்பிக்கையை விதைத்த நல்ல பல சம்பவங்களை, மேற்கோள்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். நம்பிக்கை தரும் நல்ல செய்திகளை இன்னும் அதிகமாகப் பரப்ப முயல்வோம்.

No comments:

Post a Comment