19 July, 2016

விவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பகுதி – 31

The Healing of the Centurion’s Servant

இரக்கத்தின் நற்செய்தி என்றழைக்கப்படும் லூக்கா நற்செய்தியில், இயேசுவின் இரக்கத்தை வெளிச்சமிட்டுக் காட்டும் புதுமைகளில், கடந்த சில வாரங்களாக, நம் தேடல் பயணத்தை தொடர்ந்து வந்துள்ளோம்.
கப்பர்நாகூம் தொழுகைக்கூடத்தில் ஓய்வுநாளன்று தீய ஆவி பிடித்தவரைக் குணமாக்கியது (லூக்கா-4:31-37); கை சூம்பியவர் ஒருவரை, மற்றொரு தொழுகைக்கூடத்தில் ஓய்வுநாளன்று குணமாக்கியது (லூக்கா-6:6-11); தொழுநோயாளரைக் குணமாக்கியது (லூக்கா-5:12-14); முடக்குவாதமுற்றவரைக் குணமாக்கியது (லூக்கா-5:17-26) ஆகிய புதுமைகளை நாம் இதுவரை சிந்தித்து வந்துள்ளோம்.
இயேசு, இப்புதுமைகளை ஆற்றியபோது, பிணியுற்றவரைக் குணமாக்குவதில் மட்டும் அக்கறை காட்டவில்லை, மாறாக, சூழ இருந்தோரையும் குணமாக்க முயற்சிகள் மேற்கொண்டார் என்ற கண்ணோட்டத்திலும் நாம் சிந்தித்து வந்துள்ளோம். குறிப்பாக, முடக்குவாதமுற்றவரை இயேசு குணமாக்கிய வேளையில், "உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்று இயேசு கூறியது, முடக்குவாதமுற்றவரை நலம் பெறச் செய்தது. ஆனால், அதே வேளையில், சூழ இருந்த மதத் தலைவர்களின் மனங்களை முடக்குவாதத்தில் சிறைப்படுத்தியது. இத்தருணத்தைப் பயன்படுத்தி, நாம் 'மன்னிப்பு' குறித்த ஒரு தேடலை மேற்கொண்டோம். மன்னிப்பு பெறுவதும், தருவதும் நம் வாழ்வில் இணைந்து செல்ல வேண்டிய அனுபவங்களாக இருக்கவேண்டும் என்பதை உணர்வதற்கு, 'மன்னிக்க மறுத்த பணியாளர்' உவமையில் கடந்த நான்கு வாரங்கள் தேடல் பயணம் மேற்கொண்டோம். இன்று, மீண்டும் இயேசுவின் புதுமைகள் வழியே வெளிப்படும் இரக்கத்தைச் சுவைக்க வந்துள்ளோம்.

இயேசு, புதுமைகள் ஆற்றிய வேளையில், அவரைச் சூழந்து நின்ற மதத் தலைவர்கள், இயேசு வழங்க விரும்பிய நலனைப் பெற மறுத்து, தங்கள் உள்ளங்களைப் பூட்டிவைத்தனர். ஓய்வு நாளில் குணமாக்குகிறார், பாவிகளோடு உணவருந்துகிறார் என்ற பாணியில், இயேசுவிடம் குறை காண்பதிலேயே மதத் தலைவர்களின் கவனம் முழுவதும் திரும்பியிருந்தது. எனவே, இயேசு தரவிழைந்த நலனை அவர்களால் பெற முடியாமல் போனது.
இதற்கு மாறாக, இஸ்ரயேல் குலத்தைச் சாராத ஒருசிலர், இயேசுவின் குணப்படுத்தும் ஆற்றலை உணர்ந்து, அவரிடம் நலம் வேண்டி வந்ததையும், நற்செய்தியாளர் லூக்கா பதிவு செய்துள்ளார். அவர்களில் ஒருவர், உரோமையரான நூற்றுவர் தலைவர். நோயுற்று சாகும் நிலையில் இருந்த தன் பணியாளருக்காக இயேசுவை நாடி வந்த நூற்றுவர் தலைவரைப் பற்றி நாம் லூக்கா நற்செய்தியில் இவ்வாறு வாசிக்கிறோம்.

லூக்கா, 7: 1-10 
இயேசு இவற்றை எல்லா மக்களுக்கும் சொல்லி முடித்த பின்பு, கப்பர்நாகுமுக்குச் சென்றார். அங்கே நூற்றுவர் தலைவர் ஒருவரின் பணியாளர் ஒருவர் நோயுற்றுச் சாகும் தறுவாயிலிருந்தார். அவர்மீது தலைவர் மதிப்பு வைத்திருந்தார். அவர் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டு யூதரின் மூப்பர்களை அவரிடம் அனுப்பி, தம் பணியாளரைக் காப்பாற்ற வருமாறு வேண்டினார். அவர்கள் இயேசுவிடம் வந்து, “நீர் இவ்வுதவி செய்வதற்கு அவர் தகுதியுள்ளவரே. அவர் நம் மக்கள் மீது அன்புள்ளவர்; எங்களுக்கு ஒரு தொழுகைக்கூடமும் கட்டித் தந்திருக்கிறார்என்று சொல்லி அவரை ஆர்வமாய் அழைத்தார்கள். இயேசு அவர்களோடு சென்றார். வீட்டுக்குச் சற்றுத் தொலையில் வந்துகொண்டிருந்தபோதே நூற்றுவர் தலைவர் தம் நண்பர்கள் சிலரை அனுப்பிப் பின்வருமாறு கூறச் சொன்னார்: ஐயா, உமக்குத் தொந்தரவு வேண்டாம்; நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். உம்மிடம் வரவும் என்னைத் தகுதியுள்ளவனாக நான் கருதவில்லை. ஆனால் ஒரு வார்த்தை சொல்லும்; என் ஊழியர் நலமடைவார். நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படை வீரரும் உள்ளனர். நான் ஒருவரிடம் 'செல்க' என்றால் அவர் செல்கிறார்; வேறு ஒருவரிடம் 'வருக' என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து 'இதைச் செய்க' என்றால் அவர் செய்கிறார்.இவற்றைக் கேட்ட இயேசு அவரைக்குறித்து வியப்புற்றார். தம்மைப் பின்தொடரும் மக்கள்கூட்டத்தினரைத் திரும்பிப் பார்த்து, “இஸ்ரயேலரிடத்திலும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை என உங்களுக்குச் சொல்கிறேன்என்றார். அனுப்பப்பட்டவர்கள் வீட்டுக்குத் திரும்பி வந்தபோது அப்பணியாளர் நலமுற்றிருப்பதைக் கண்டார்கள்.

மத்தேயு நற்செய்தியில் மலைப்பொழிவுக்குப் பின்னரும், (மத். 8:5-13) லூக்கா நற்செய்தியில் சமவெளிப்பொழிவுக்குப் பின்னரும் (லூக். 7:1-10) இந்தப் புதுமை இடம்பெற்றுள்ளது. மத்தேயு நற்செய்தியில், நூற்றுவர் தலைவர், இயேசுவிடம் நேரில் வந்து விண்ணப்பித்தார் என்றும், லூக்கா நற்செய்தியில், யூதரின் மூப்பர்கள் வழியே விண்ணப்பித்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.
மலைப்பொழிவு, அல்லது சமவெளிப்பொழிவில் இயேசு சொல்லித்தந்த அற்புதமான, ஆழமான உண்மைகளுக்கு, ஒரு நடைமுறை எடுத்துக்காட்டாக, இந்தப் புதுமை அமைந்துள்ளது என்ற கோணத்திலும் நாம் சிந்தித்துப் பார்க்கலாம் என்று விவிலிய விரிவுரையாளர்கள் சிலர் கூறுகின்றனர். இந்தப் புதுமையின் நாயகன் இயேசுவே என்றாலும், இரண்டாவது நாயகனான நூற்றுவர் தலைவரைப் பற்றி சிறிது ஆழமாகச் சிந்திப்பது, பயனுள்ள பாடங்களைச் சொல்லித்தரும். நூற்றுவர் தலைவரைப் பற்றி லூக்கா நற்செய்தி சொல்லும் விவரங்களைப் பட்டியலிடுவோம்:
·          அவர் உரோமையப் படையில், நூற்றுவர் தலைவர்.
·          நோயுற்று கிடக்கும் பணியாளர் மீது மதிப்பு வைத்திருந்தவர்.
·          உரோமையராய் இருந்தாலும், யூத மக்கள் மீது அன்புள்ளவர்.
·          அவர்களுக்குத் தொழுகைக் கூடம் கட்டித் தந்தவர்.
·          தன் நிலையை நன்கு உணர்ந்ததால், இயேசுவை நேருக்கு நேர் சந்திக்கத் தயங்கியவர்.
·          இயேசுவின் மீது தனிப்பட்ட விதத்தில் விசுவாசம் கொண்டவர்.

உரோமைய படையில், நூற்றுவர் தலைவர் என்பது முதல் குறிப்பு. உரோமைய அரசில் சாதரணப் படைவீரராக இருக்கும் ஒருவர், பல்வேறு திறமைகளின் அடிப்படையிலும், முக்கியமாக, உரோமையப் பேரரசின் மீது அவருக்கு உள்ள விசுவாசத்தின் அடிப்படையிலும், படிப்படியாக பதவிகளில் உயர்ந்து, நூற்றுவர் தலைவர் ஆகிறார். போர்க் காலங்களில் எதிரிகளைத் தாக்குவதிலும், எதிரிகளின் கோட்டைகளில் ஏறிச் செல்வதிலும் முதல் வரிசையில் இருப்பவர், இவர். இக்காரணங்களால், ஒவ்வொரு போரிலும், நூற்றுவர் தலைவர்கள் பலர் கொல்லப்படுவர். சுருக்கமாகச் சொன்னால், இவர்கள் உயிருக்குப் பயந்தவர்கள் அல்ல. நமது நாயகன், உயிருக்கு மட்டுமல்ல, தன் பதவிக்கும் பயந்தவரல்ல என்பதை நற்செய்தியாளர் லூக்கா மறைமுகமாகக் கூறியுள்ளார். பதவிக்குப் பயந்தவராக இருந்தால், உரோமையராகிய அவர், இவ்வளவு வெளிப்படையாக இயேசுவிடம் விண்ணப்பம் கோரி வந்திருக்க மாட்டார். ஒருவேளை இரகசியமாக ஆள் அனுப்பி, விண்ணப்பித்திருப்பார்.

பதவி பறிபோனாலும் பரவாயில்லை, தன் பணியாளர் குணம் பெறவேண்டும் என்று விரும்பியவர், இத்தலைவர். அவ்வளவு தூரம், இவர் தன் பணியாளர் மீது மதிப்பு வைத்திருந்தார். இது அவரைப்பற்றிய இரண்டாவது குறிப்பு. உயர் பதவியில் இருப்பவர்கள் மத்தியில் மிக அரிதான குணம் இது. பணியாளர் மீது இரக்கம், கொண்டவர்களைப் பார்ப்பது எளிது. ஆனால், பணியாளர் மீது மதிப்பும், அன்பும் கொண்டவர்களைப் பார்ப்பது அரிது. மற்றவர்களை மதிக்கக்கூடிய பக்குவம், அதுவும் தன்னை விடத் தாழ்நிலையில் இருப்பவரை மதிக்கக்கூடிய பக்குவம் யாருக்கு வரும்? தன்னைப்பற்றி நன்கு அறிந்தவர்கள், தங்களது பலத்தையும், பலவீனத்தையும் அறிந்து ஏற்றுக்கொண்டவர்கள், தன்னைப்பற்றிய ஒரு நிறைவான, திருப்தியான எண்ணம் கொண்டவர்கள்... இவர்களே, மற்றவரை உண்மையில் மதிப்பார்கள்.
தன்னைப்பற்றி தெளிவான, உண்மையான புரிதல் இல்லாதவர்கள், பெரும்பாலும், மற்றவர்களை, தங்கள் போட்டியாகக் கருதுவர். அடுத்தவர்களைப் போட்டியாக நினைக்கும்போது, அவர்கள் மீது மதிப்பு குறையும், அவர்களைப் பற்றிய பயம் எழும். உயர் நிலையில் இருப்பவர்கள், இந்த பயத்தை வெளிக்காட்டாமல், தங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களிடம் குறை காணவும், அவர்களை மட்டம் தட்டும் திட்டங்களில் ஈடுபடவும் ஆரம்பிப்பார்கள். இத்தகையோர், தங்களையும் மதிக்காமல், மற்றவரையும் மதிக்காமல், மனிதத்தை மிதிப்பவர்கள்.
நூற்றுவர் தலைவர் தன்னைச் சரியாக உணர்ந்திருந்ததால், தன்னைச் சரியாக மதித்ததனால், மற்றவர்களையும் மதித்தார். அதிலும் சிறப்பாக, அவருடைய பணியாளரை அவர் மதித்தார் என்பதை அறியும்போது, அவருக்கு கோவில் கட்டி கும்பிடலாமோ என்று தோன்றுகிறது. அவர் கோவில் கட்டினார். தனக்காக அல்ல. யூதர்களுக்குத் தொழுகைக் கூடம் கட்டினார். லூக்கா நற்செய்தியில், நூற்றுவர் தலைவரைப் பற்றி காணக் கிடக்கும் மூன்றாவது குறிப்பு இது.

தன்னைப் பற்றி நன்கு அறிந்தவர், உணர்ந்தவர் என்பதன் வெளிப்பாடுதான் இந்தச் செயலும். ஏனைய உரோமையர்களைப் போல், யூதர்களையோ, அவர்களது கடவுளையோ தனக்குப் பகையாக, போட்டியாக நினைக்காமல், அவர்களை மதித்தார். அவர்களுக்குக் கோவில் கட்டித் தந்தார்.
ஒரு சிலர் கோவில் கட்டுவர். இதை அவர்கள் செய்வதற்கு ஒரே காரணம்... அதன் வழியாக, தங்கள் பெருமைக்கு ஒரு கோவிலைக் கட்டிக் கொள்வதுதான். மக்கள் மனதில், நினைவில் இடம் பிடிக்க மன்னர்களும், தலைவர்களும் மேற்கொண்ட பல பரிதாபமான முயற்சிகள் நமக்கெல்லாம் தெரிந்ததுதானே. வீதிக்கு, வீதி சிலைகளை வைப்பதும், கட்டடங்கள் அனைத்திலும் பெயர்களைப் பதிப்பதும் நம் தலைவர்கள் மேற்கொள்ளும் பரிதாப முயற்சிகளின் வெளிப்பாடுகள்.
நூற்றுவர் தலைவர் யூதர்களுக்குக் கட்டிக்கொடுத்த தொழுகைக் கூடத்தில் அவரது பெயரைப் பொறித்திருப்பாரா? சந்தேகம் தான். அவரது மற்ற குணநலன்களைப் பார்க்கும் போது, இப்படி செய்திருக்க மாட்டார் என்று உறுதியாகச் சொல்லலாம்.
இத்தகைய நற்பண்புகளைக் கொண்ட நூற்றுவர் தலைவர், தன் பணியாளரைக் குணமாக்க இயேசுவுக்கு விடுத்த அழைப்பு, ஒரு செபத்தின் வடிவில், கத்தோலிக்க வழிபாட்டில் இடம் பெற்றுள்ளது. ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை சொல்லும்; என் ஊழியர் நலமடைவார். பொருள் நிறைந்த அவ்வழைப்பும், அந்த அழைப்புக்கு இயேசு கூறிய பதிலும் நம் அடுத்தத் தேடலின் மையமாக அமையும்.



No comments:

Post a Comment