27 July, 2016

விவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பகுதி – 32

The Centurion’s Prayer lessons

Wounded Soldiers

ஒரு நாட்டின் இராணுவத்தில் வீரர்கள் சேரும்போது, தனித்தனி மனிதர்களாகத் தான் சேருகின்றனர். ஆனால், அவர்களுக்கு அளிக்கும் பயிற்சியின் முடிவில், இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால், போரில் ஈடுபடும்போது, அவர்கள், ஒருவர் மீது ஒருவர் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட நண்பர்களாகி விடுவார்கள். வீரர்களிடையே உருவாகும் நட்புதான், போர்க்களங்களில் நிலவும் ஆபத்துக்களில், அவர்களுக்குப் பெரும் பலமாக, துணையாக அமைகிறது. தன் உயிரே போனாலும் பரவாயில்லை, அடிபட்ட தன் நண்பனை எப்படியாவது காப்பாற்றவேண்டும் என்று அவர்களிடையே நிலவும் ஆவல்... அதை, வெறி என்றும் சொல்லலாம், பல அற்புதக் கதைகளாக நம்மை அடைந்துள்ளது.

அத்தகைய நிகழ்வுகளில் இதுவும் ஒன்று:
போர்வீரர்கள் இருவர் நெருங்கிய நண்பர்கள். தங்கள் இராணுவப் பணியில் உயிர் நிலையற்றது என்பதை ஒவ்வொரு நாளும் பார்த்து வந்ததால், அவர்கள் நட்பு ஆழப்பட்டது. ஒருமுறை நடைபெற்ற போரில், தங்கள் முகாமிலும், எதிரி முகாமிலும் ஏகப்பட்ட உயிர் இழப்புகள். ஒரு நாள் மாலை, அன்றைய போர் முடிந்து முகாம் திரும்பிய வீரர், தன் நண்பன் திரும்பாததை உணர்ந்தார். தளபதியிடம் சென்று: "சார், என் நண்பன் திரும்பவில்லை. நான் மீண்டும் போர்க்களம் செல்கிறேன்" என்றார். அன்றையப் போரில் பலரை இழந்த வேதனையிலும், வெறுப்பிலும் இருந்தார் தளபதி. "ஏற்கனவே, பலரை நான் இன்று இழந்துவிட்டேன். உன் நண்பன் இந்நேரம் இறந்திருப்பான். நீ போவது வீண்" என்றார்.
தளபதி சொன்னதைக் கேளாமல், வீரர் மீண்டும் போர்க்களம் சென்றார். இரண்டு மணி நேரம் கழித்து, தன் நண்பனின் இறந்த உடலைச் சுமந்தபடி, இவரும் இன்னும் பல இடங்களில் அடிபட்டு, முகாமுக்குத் திரும்பினார். அவரைக் கண்டதும், தளபதிக்குக் கோபம் தலைக்கேறியது. "முட்டாளே, நான் ஏற்கனவே சொன்னேனே... கேட்டாயா? உன் நண்பனின் சடலத்தைப் பார்க்கப் போய் நீயும் சாக வேண்டுமா? அங்கு போனதால் என்ன சாதித்தாய்?" என்று தளபதி கத்தினார்.
"நான் போனபோது என் நண்பன் உயிரோடுதான் இருந்தான். என்னைப் பார்த்ததும் அவன் கண்களைத் திறந்து 'நீ எப்படியும் என்னைத் தேடி வருவேன்னு எனக்குத் தெரியும்.' என்று சொன்னான். இதைச் சொன்னபிறகு அவன் உயிர் பிரிந்தது" என்று சொன்னார், அந்த வீரர்.
வாழும்போது அவர்களிடையே மலர்ந்த நட்பு, நண்பனின் இறப்பில் மீண்டும் ஆழமாய் உயிர் பெற்றது. போர்க்களத்தில் உண்டாகும் நட்பு, விசுவாசம் ஆகியவற்றைக் கூறும் இது போன்ற பல சம்பவங்களை நாம் கேட்டிருப்போம்.

"போருக்குச் செல்லும் ஒவ்வொரு நூறு பேரிலும், பத்து பேர் போர்க்களத்திற்கு சென்றிருக்கவே கூடாது, எண்பது பேர், எதிரிகளின் தாக்குதலுக்கு இலக்காக மாறுவர், மீதி பத்துபேரில், ஒன்பது பேர் உண்மையாகவே போரிடுபவர்கள். மீதமுள்ள அந்த ஒருவர், அந்த நூறுபேரில் ஒருவர் மட்டுமே, உண்மையான வீரர், அவர் மற்றவர்களை போர்க்களத்திலிருந்து உயிரோடு திரும்பக் கொணர்வார்" என்று சொன்னவர், கி.மு. 5ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹெராக்கிளீட்டஸ் (Heraclitus) என்ற கிரேக்க மேதை. நூறுபேரில் ஒருவரானஅந்த வீரரைப்பற்றி, ஹெராக்கிளீட்டஸ் அவர்கள் கூறிய சொற்கள், நாம் சிந்தித்துவரும் நூற்றுவர் தலைவரைப் புரிந்துகொள்ள உதவுகின்றன. உரோமையரான நூற்றுவர் தலைவர், தன் பணியாளர் மீது அன்பும், மதிப்பும் கொண்டிருந்தார், யூதர்கள் மீது மதிப்பு கொண்டு, அவர்களுக்கு ஒரு தொழுகைக்கூடம் கட்டித்தந்தார் என்ற அம்சங்களை, சென்ற தேடலில் நாம் சிந்தித்தோம். இன்று, அந்த நூற்றுவர் தலைவர், நோயுற்றிருந்த தன் பணியாளர் சார்பில், இயேசுவுக்கு விடுத்த அழைப்பை நம் தேடலின் மையமாக்குவோம்.

அன்பும், பண்பும் கொண்ட நூற்றுவர் தலைவர், இயேசுவை, தன் வீட்டுக்கு வரவழைக்கப் பயன்படுத்திய முறை சிந்திக்கத் தகுந்தது. தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஒரு சிறு படை, தேர் இவற்றை அனுப்பி, இயேசுவை தன் வீட்டுக்கு கொண்டு வர அவர் முயற்சித்திருக்கலாம். அவர் அப்படி செய்திருந்தால், இயேசு சென்றிருப்பாரா? அதிகாரத்தை விளம்பரம் செய்வோரிடமிருந்து எப்போதுமே விலகி நின்ற இயேசு, நூற்றுவர் தலைவர், தன்னை அதிகாரத் தோரணையில் அழைத்திருந்தால், போயிருக்க மாட்டார்.
கவிஞர் தாகூர் எழுதிய, ஒரு கவிதையின் வரிகள் நினைவுக்கு வருகின்றன. "இறைவா, உமக்கு என் செபம் இதுவே" ("This is my prayer to Thee") என்று ஆரம்பிக்கும் தாகூரின் வேண்டுதல்களில் ஒன்று: "தலைகனம் மிகுந்தோரின் அதிகாரத்திற்கு முன், நான் ஒரு போதும் முழந்தாள் படியிட்டு பணியாத சக்தியைத் தாரும்." (“Give me the strength never to... bend my knees before insolent might”) இத்தகைய மனநிலையைக் கொண்ட இயேசுவைப் பற்றி கேள்விப்பட்டிருந்த நூற்றுவர் தலைவர், தனது யூத நண்பர்கள் வழியே தன் அழைப்பை அனுப்புகிறார். விண்ணப்பம் யார் வழியாகச் சென்றாலும் பரவாயில்லை. தன் பணியாளர் நலம் பெற வேண்டும்... அதுதான் முக்கியம்.
இயேசு அவர் வீட்டுக்கு போகும் வழியில், நூற்றுவர் தலைவர் இன்னும் சில நண்பர்கள் வழியே அனுப்பிய செய்தி, அர்த்தமுள்ள பாடங்களைச் சொல்லித் தருகின்றன. அந்த வார்த்தைகளை மீண்டும் அசை போடலாம்: ஐயா, உமக்குத் தொந்தரவு வேண்டாம்; நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். உம்மிடம் வரவும் என்னைத் தகுதியுள்ளவனாக நான் கருதவில்லை. ஆனால் ஒரு வார்த்தை சொல்லும்; என் ஊழியர் நலமடைவார்.

அருள் பணியாளர் என்ற முறையில், பல்வேறு இல்லங்களிலிருந்து எனக்கு வரும் அழைப்புக்களை எண்ணிப் பார்க்கிறேன். இந்த அழைப்புக்களில் பல்வேறு உணர்வுகள் வெளிப்படுவதை உணர்ந்திருக்கிறேன். "எங்க வீட்டுக்கெல்லாம் நீங்க வருவீங்களா?" என்று ஒரு சிலர் என்னிடம் சொல்லும்போது, அதை, உண்மையான ஏக்கம் நிறைந்த கேள்வி என்பதா, அல்லது, மறைமுகமான கேலி என்பதா, என்று புரியாமல் தடுமாறியிருக்கிறேன்.
நூற்றுவர் தலைவர் அனுப்பிய செய்தியில் மறைமுகமான, போலியான தாழ்ச்சி கிடையாது. அவர் தலைவராக இருந்ததால், பிறரது நேரத்தின் அருமை அவருக்குத் தெரிந்திருந்தது. எனவே, தான் கூப்பிட்ட குரலுக்கு இயேசு ஓடி வந்து, பணிவிடை செய்ய வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. அதையும் தன் கூற்றில் சொல்லிக் காட்டுகிறார்.
நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படை வீரரும் உள்ளனர். நான் ஒருவரிடம் 'செல்க' என்றால் அவர் செல்கிறார்; வேறு ஒருவரிடம் 'வருக' என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து 'இதைச் செய்க' என்றால் அவர் செய்கிறார்.

நூற்றுவர் தலைவர் தம் நண்பர்கள் வழியே அனுப்பிய செய்தியைக் கேட்ட இயேசு அவரைக் குறித்து வியப்புற்றார் என்று நற்செய்தியாளர் லூக்கா குறிப்பிடுகிறார். (லூக்கா 7:9) நூற்றுவர் தலைவர் நிகழ்வைப் பதிவுசெய்துள்ள நற்செய்தியாளர்கள் மத்தேயு, லூக்கா இருவருமே, இயேசு வியப்புற்றார் என்பதைக் குறிப்பிட, "Thaumazo" என்ற கிரேக்கச் சொல்லைப் பயன்படுத்தியுள்ளனர். இச்சொல், நான்கு நற்செய்திகளிலும், இன்னும் ஒரே ஒரு முறை மட்டுமே, அதாவது, மாற்கு நற்செய்தி 6ம் பிரிவில் மட்டுமே, பயன்படுத்தப்பட்டுள்ளது என்று, விவிலிய ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மாற்கு நற்செய்தி 6ம் பிரிவில், இயேசு தன் சொந்த ஊருக்குச் சென்ற நிகழ்வு விவரிக்கப்பட்டுள்ளது. தன் சொந்த ஊரின் தொழுகைக்கூடத்தில் இயேசு கற்பிக்கத் துவங்கியதும், அங்கிருந்தோரில் பலர் அவரை வியந்து பாராட்டினர். வேறு சிலரோ, "’இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா?’ என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள்" (மாற்கு 6:3) என்று கூறும் நற்செய்தியாளர் மாற்கு, "அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு இயேசு வியப்புற்றார்" (மாற்கு 6:6) என்று இப்பகுதியின் இறுதியில் குறிப்பிடும்போது, "Thaumazo" என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்.

தன் சொந்த ஊரில், தன் சொந்த இனத்தவரின் நம்பிக்கையின்மையைக் கண்டு 'வியப்புற்ற' இயேசு, வேற்றினத்தவரான நூற்றுவர் தலைவரின் நம்பிக்கையைக் கண்டு வியப்புற்றார். அதேவண்ணம், வேற்றினத்தைச் சேர்ந்த கானானியப் பெண்ணின் நம்பிக்கையைக் கண்டு இயேசு பாராட்டினார் என்பதை, நற்செய்தியாளர்கள் மத்தேயு (15:21-28), மாற்கு (7:24-30) இருவரும் குறிப்பிட்டுள்ளனர். இயேசுவால் நலமடைந்த பத்து தொழுநோயாளர்கள் பற்றி லூக்கா நற்செய்தி 17ம் பிரிவில், (லூக்கா 17:11-19) நாம் வாசிக்கிறோம். நலமடைந்த பத்துபேரில், ஒரே ஒருவர் மட்டுமே திரும்பி வந்து இயேசுவுக்கு நன்றி சொன்னார். அவர் ஒரு சமாரியர். இஸ்ரயேல் மக்களால் வெறுத்து இகழப்பட்ட சமாரிய இனத்தைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே திரும்பி வந்ததைக் கண்ட இயேசு, அவரைப் பார்த்து, "பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே!" என்றார். (லூக்கா 17:17-18)

இவ்வாறு இஸ்ரயேல் இனத்தைச் சேராத பலரின் உண்மையான நம்பிக்கையைக் கண்டு வியக்கும் இயேசு, இந்த நிகழ்வில், நூற்றுவர் தலைவரின் நம்பிக்கையைக் கண்டு வியக்கிறார்.
நூற்றுவர் தலைவர், தன் நண்பர்கள் வழியே அனுப்பியிருந்த செய்தியில், போலியான தாழ்ச்சி வெளிப்படவில்லை. தன்னைப் பற்றி, தனது சக்தியைப் பற்றி நன்கு அறிந்த ஒருவரே, அடுத்தவரின் சக்தியைப் பற்றி தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். தன்னைக் குறித்தும், தன் சக்தியைக் குறித்தும் தெளிவு இல்லாதவர்கள், அடுத்தவரின் சக்தியை போட்டியாக, ஆபத்தாக எண்ணுவர். தன்னைக் குறித்தும், இயேசுவைக் குறித்தும் தெளிவான எண்ணங்கள் கொண்ட நூற்றுவர் தலைவர், தன் நண்பர்கள் வழியே அனுப்பிய செய்தியை, நாம் இவ்வாறு பொருள் காண முடியும்:
"ஐயா, நீங்க என் வீட்டுக்கு வந்துதான் என் ஊழியரைக் குணமாக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. உங்க சக்திய நான் மனசார நம்புறேன். நீங்க இருந்த இடத்திலேயே ஒரு வார்த்தை சொன்னாப் போதும். அந்த வார்த்தையின் சக்தியை, பலனை நாங்க உணர முடியும். ஏனெனில், வார்த்தைகளின் சக்தியை உணர்ந்தவன் நான். நான் சொல்லும் ஒவ்வொரு சொல்லையும் கேட்டு நிறைவேற்றும் பணியாளர்கள் உள்ளனர்."

நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை சொல்லும்; என் ஊழியர் நலமடைவார்.
என்று நூற்றுவர் தலைவர் சொன்ன வார்த்தைகள், பல நூற்றாண்டுகளாக, நாம் கொண்டாடிவரும் திருப்பலியின் ஒரு முக்கிய வேண்டுதலாக அமைந்துவிட்டது.
ஒரு வார்த்தை சொல்லும்; என் ஊழியர் நலமடைவார்.
நம்பிக்கையை வெளிப்படுத்தும் இச்சொற்கள், பொதுவாக நாம் பயன்படுத்தும் வார்த்தைகளைப் பற்றி சிந்திக்க ஒரு வாய்ப்பை அளிக்கின்றன. நாம் பேசும் ஒவ்வொரு சொல்லும், பொருள் உள்ளதாக, அதுவும் பிறருக்கு உதவும் சொல்லாக, நலம் வழங்கும் சொல்லாக இருந்தால், இவ்வுலகம் முழுமையான நலம் பெறும்.

உணர்ச்சிகளின் கொந்தளிப்பில், நாம் வார்த்தைகளை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதைப் பற்றி சிந்திக்கலாம். கோபத்தில் வார்த்தைகளைக் கொட்டிவிட்டு, பின்னர் வருந்துவதில் பயனில்லை.
இயேசுவின் ஒவ்வொரு சொல்லுக்கும் வலிமை இருந்தது. நாம் பேசும் சொற்களுக்கு ஓரளவாகிலும் வலிமை உள்ளதா? அல்லது, நாம் பேசுவதில் பெரும்பாலானவை போலியான, வெறுமையான வார்த்தை விளையாட்டுக்கள்தாமா?
ஒரு வார்த்தை சொல்லும்; என் ஊழியர் நலமடைவார்.
ஒரு வார்த்தை சொல்லும்; நான் நலமடைவேன்.
இயேசுவின் குணமளிக்கும் வார்த்தைகளைப் போல, நமது சொற்களும் நலமளிக்கும், மற்றவரைக் கட்டி எழுப்பும் சொற்களாக இருக்க இறைவனை வேண்டுவோம்.

இறுதியாக ஓர் எண்ணம் – போலந்து நாட்டின் கிரக்கோவ் நகரில் நடைபெறும் 31வது உலக இளையோர் நாள் நிகழ்வுகளில் கலந்துகொள்ள, ஜூலை 27, இப்புதனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செல்கிறார். திருத்தந்தையின் பயணமும், உலக இளையோர் நாள் நிகழ்வுகளும் எவ்வித இடையூறும் இன்றி, நலமாக நிறைவுபெற இறைவனை மன்றாடுவோம்.


No comments:

Post a Comment