Tuesday, December 6, 2016

விவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பகுதி – 50

Extraordinary Jubilee of Mercy

"உலகிலேயே அதிகப் பணக்காரர் என்ற பெயருடன், கல்லறையில் கிடப்பது எனக்கு முக்கியமில்லை. இரவு படுக்கைக்குச் செல்லும்போது, அன்று, நான் உன்னதமானதைச் செய்தேன் என்ற உணர்வுடன் உறங்கச் செல்வதே எனக்கு முக்கியம்."
இவ்வாறு சொன்னவர், உலகின் செல்வந்தர்களில் ஒருவராக விளங்கிய, Steve Jobs. ஆப்பிள் கணனி நிறுவனத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான Steve Jobs அவர்கள், 2011ம் ஆண்டு, தன் 56வது வயதில், இவ்வுலகைவிட்டு மறைந்தார். "உன்னதமானதைச் செய்தோம் என்ற உணர்வுடன்" நாம் உறங்க விரும்பினால், ஒவ்வொரு நாளையும் பின்னோக்கிப் பார்த்து, அசைபோடும் பழக்கம் நமக்குத் தேவை. இயேசு சபையை நிறுவிய புனித லொயோலா இஞ்ஞாசியார், இந்தப் பழக்கத்தை, ஆன்ம ஆய்வு என்று கூறினார்.

தனிப்பட்ட வாழ்விலும், சமுதாயத்திலும், வரலாற்றிலும் ஏற்படும் பல நிகழ்வுகள், நினைவில் ஆழமாகப் பதிகின்றன. நினைவில் பதிந்த இந்நிகழ்வுகளை அவ்வப்போது திருப்பிப் பார்த்து, அசைபோடுவது, எதிர்காலத்தில், நாம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு, நல்லதொரு அடித்தளமாக அமையும்.
எந்த ஒரு வரலாற்றிலும், 25, 50 அல்லது, 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் யூபிலி ஆண்டுகள், அரிதான அனுபவம். ஏறத்தாழ கடந்த ஓராண்டளவாய் கத்தோலிக்கத் திருஅவை கடந்து வந்த இரக்கத்தின் சிறப்பு யூபிலி, நாம் பெற்ற தனித்துவமிக்கதொரு அனுபவம் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வோம். இந்த யூபிலி ஆண்டினைப் பின்னோக்கிப் பார்த்து, அவற்றின் உன்னத அனுபவங்களை அசைபோடுவது, நமக்குப் பயனளிக்கும். யூபிலி ஆண்டினை அசைபோடும் நம் முயற்சிக்கு, சிறந்ததொரு வழிகாட்டியாக, அன்னை மரியாவை எண்ணிப்பார்க்கலாம்.

டிசம்பர் 8, வியாழனன்று, அமல அன்னை மரியாவின் திருநாளைக் கொண்டாடுகிறோம். கருவில் தோன்றியதுமுதல், பாவக்கறை படியாமல் வாழ்ந்தவர், அன்னை மரியா என்ற உண்மையை, 1854ம் ஆண்டு, டிசம்பர் 8ம் தேதி, திருத்தந்தை 9ம் பயஸ் அவர்கள், திருஅவையின் தவறாதக் கொள்கைகளில் ஒன்றாக வெளியிட்டார். ஒவ்வோர் ஆண்டும், டிசம்பர் 8ம் தேதியன்று இந்த உண்மை கொண்டாடப்படுகிறது.
பாவக்கறை ஏதுமின்றி வாழந்த அன்னை மரியா, தான் பெற்ற தனிப்பட்ட வரத்திற்கு இறைவனே காரணம் என்பதை தன் வாழ்நாள் முழுவதும் உணர்ந்து வாழ்ந்தவர். தலைமுறைகள் எல்லாம் தன்னை வாழ்த்தும் என்பதை, தயக்கமின்றி கூறிய அன்னை மரியா, அந்நிலைக்கு தன்னை உயர்த்தியவர் இறைவனே என்பதை, அவர் அறிக்கையிட்ட புகழ் பாடலில் கூறியுள்ளார். லூக்கா நற்செய்தி முதல் பிரிவில் (லூக்கா 1:47-55) நாம் காணும் புகழ்பாடலில், இறைவன்  ஆற்றிவரும் அற்புதங்களைப் பட்டியலிடுகிறார் மரியா.
"வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்வார்" என்று எதிர்காலத்தில் நிகழும் ஒரு செயலாக மரியா குறிப்பிடவில்லை. மாறாக, இறைவன் "அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்; இரக்கம் காட்டி வருகிறார்; செருக்குற்றவர்களைச் சிதறடித்து வருகிறார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்" என்று, இறைவனின் செயல்கள் அனைத்தையும், நிகழ்காலத்தில் நடப்பதாகக் கூறியுள்ளார் மரியா.

மனிதர்களாகிய நமக்கு, கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம், என்ற வேறுபாடுகள் உண்டு. இறைவன் இருப்பதும், செயலாற்றுவதும் நிகழ்காலத்தில். அவருக்கு நித்தியமும் நிகழ்காலமே. இதனை நன்கு உணர்ந்த அன்னை மரியா, தன் புகழ்ப்பாடலில், இறைவன் செயல்களை நிகழ்காலத்தில் நடப்பதாகக் கூறியுள்ளார். மேலும், அன்னை மரியா தன் புகழ்பாடலில் வரிசைப்படுத்தும் செயல்கள் அனைத்தும், இறைவனது இரக்கத்தின் வெளிப்பாடுகள்.
அன்னை மரியா காட்டும் இவ்வழியை, நாம் இன்றைய விவிலியத் தேடலில் பின்பற்ற வந்துள்ளோம். சென்ற ஆண்டு, டிசம்பர் 8ம் தேதி, அமல அன்னை மரியாவின் திருநாளன்று அதிகாரப்பூர்வமாகத் துவக்கப்பட்ட இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், இறைவன் ஆற்றிய நன்மைகளை அசைபோடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

Interview of Pope Francis on TV2000

கடந்த மாதம் 20ம் தேதி, கிறிஸ்து அரசர் திருவிழாவன்று, இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு அதிகாரப்பூர்வமாக நிறைவு பெற்றது. அதற்கடுத்த நாள், நவம்பர் 21, திங்களன்று, இத்தாலியின் TV2000 என்ற தொலைகாட்சி நிறுவனம், நாம் கடந்துவந்த யூபிலி ஆண்டின் சிகர நிகழ்வுகளைத் தொகுத்து, 60 நிமிட நிகழ்ச்சியொன்றை ஒளிபரப்புச் செய்தது. இரக்கத்தின் யூபிலியை பின்னோக்கிப் பார்த்து, அங்கு உருவான அருள் மிகுந்த தருணங்களை அசைபோட, இந்தக் காணொளித் தொகுப்பு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.
"Misericordia! Un anno con Francesco... e non finisce qui" அதாவது, "இரக்கம்! பிரான்சிஸ் அவர்களுடன் ஓராண்டு... இத்துடன் முடியவில்லை" என்ற தலைப்பில், Marco Burini மற்றும், Simone D'Ascenzi என்ற இருவர் உருவாக்கியுள்ள இந்தக் காணொளியின் உதவியுடன் நம் பின்னோக்கியப் பயணத்தை மேற்கொள்வோம்.

இக்காணொளித் தொகுப்பு, 2015ம் ஆண்டு, மார்ச் 13ம் தேதிக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. அன்று, "இறைவனுக்கு 24 மணி நேரங்கள்" என்ற ஒப்புரவு அருளடையாள வழிபாட்டை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் நிகழ்த்தியபோது, வழங்கிய தன் மறையுரையின் இறுதியில் இவ்வாறு கூறினார்:
"அன்பு சகோதர, சகோதரிகளே, 'இரக்கத்தின் சாட்சி என்ற மறைப்பணியை, திருஅவை இவ்வுலகில் எவ்விதம் முழுமையாக நிறைவேற்றமுடியும் என்று நான் அடிக்கடி சிந்தித்துள்ளேன். எனவே, இறைவனின் இரக்கத்தை மையப்படுத்தி, சிறப்பு யூபிலி ஒன்றை அறிவிக்க முடிவு செய்துள்ளேன். இது இரக்கத்தின்  ஆண்டாக இருக்கும்."
அற்புதமான இந்த வார்த்தைகளோடு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டினை அறிவித்த இக்காட்சியுடன் இக்காணொளித் தொகுப்பு ஆரம்பமாகிறது.
இதைத் தொடர்ந்து, திருத்தந்தை, கர்தினால்கள், ஆயர்கள், குருக்கள், என்று பலரும், உலகெங்கிலும் உள்ள புனிதக் கதவுகளைத் திறக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. ஒரு சில இடங்களில் ஆயர்களுடன் இணைந்து, பொது நிலையினர், வறியோர், மாற்றுத்திறனாளிகள், சிறுவர், சிறுமியர், புனிதக் கதவுகளைத் திறப்பதைக் காணும்போது, இறைவனைத் தொடுவதற்கு நம் அனைவருக்கும் சம உரிமை உண்டு என்ற உணர்வு மேலோங்குகிறது.
திருத்தந்தை புனித பேதுரு பசிலிக்காவின் புனிதக் கதவுகளைத் திறந்ததற்கு அடுத்த நாள், டிசம்பர் 9ம் தேதி, பிலிப்பீன்ஸ் நாட்டு மணிலாவில், அமல அன்னை பசிலிக்காவின் புனிதக் கதவுகளை, கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள் திறந்து வைத்தார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பிலிப்பைன்ஸ் நாட்டிற்குச் சென்றபோது, அவருடன் மனம்திறந்து உரையாடிய தெருவோரக் குழந்தைகள், மற்றும், சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த மாற்றுத் திறனாளிகள் ஆகியோர், கர்தினால் தாக்லே அவர்களுடன் இணைந்து, மணிலா பேராலயத்தின் புனிதக் கதவைத் திறந்தது, பொருள்செறிந்த நிகழ்வாக அமைந்தது.
உஸ்பெகிஸ்தான் (Uzbekistan) நாட்டின் தலைநகரான டாஷ்கென்ட்டில் (Tashkent), திரு இருதயப் பேராலயத்தின் புனிதக் கதவை, டிசம்பர் 13ம் தேதி ஞாயிறன்று, குழந்தைகள் திறந்து வைத்தனர் என்று, அந்நாட்டின் அப்போஸ்தலிக்க நிர்வாகியான ஆயர் Jerzy Maculewicz அவர்கள், தெரிவித்தார். தூய உள்ளம் கொண்டோர் குழந்தைகள் என்பதால், அவர்களைக் கொண்டு தான் புனிதக் கதவைத் திறந்ததாக ஆயர் Maculewicz அவர்கள் கூறினார்.

2015ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி அமல அன்னை திருநாளன்று, இரக்கத்தின் யூபிலி, அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகும் என்று திருத்தந்தை அறிவித்திருந்தார். அதற்குமுன், நவம்பர் மாதத்தில், மத்திய ஆப்ரிக்க குடியரசில் திருத்தந்தையின் திருத்தூதுப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இத்திருத்தூதுப் பயணம் குறித்து திருத்தந்தை பேசியபோது, அந்நாட்டில், நவம்பர் மாத இறுதியில் புனிதக் கதவுகளைத் திறந்துவைக்கப்போவதாக அறிவித்தார். இந்த யூபிலி, ஏனைய யூபிலிகளிலிருந்து, பல வழிகளில் வேறுபட்டிருக்கும் என்பதையும், பல ஆனந்த அதிர்ச்சிகள் நமக்காகக் காத்திருக்கின்றன என்பதையும் சொல்லாமல் சொன்னது.
2015ம் ஆண்டு, நவம்பர் 21ம் தேதி, மத்திய ஆப்ரிக்கக் குடியரசின் தலைநகர் பாங்கியில், திருத்தந்தை புனிதக் கதவைத் திறக்கும் காட்சி, இக்காணொளித் தொகுப்பின் ஆரம்பத்திலேயே இடம்பெற்றுள்ளது. கத்தோலிக்கத் திருஅவையின் அதிகாரப்பூர்வமான தலைநகர், உரோம் என்றாலும், அன்று, பாங்கியில் யூபிலியின் முதல் புனிதக் கதவு திறக்கப்பட்டதால், கத்தோலிக்கத் திருஅவையின் ஆன்மீகத் தலைநகராக பாங்கி மாறியுள்ளது என்று, திருத்தந்தை பேராலயத்திற்கு முன் கூறினார். Notre-Dame என்றழைக்கப்படும் அமல அன்னை பேராலயத்தின் புனிதக் கதவை, திருத்தந்தை அவர்கள் திறந்தபோது, வழக்கமாக எழும் கரவொலியுடன், அந்நாட்டுப் பெண்கள் குலவையிட்ட ஓசையும் எழுந்தது. பல்வேறு கலாச்சாரங்களை உள்ளடக்கிய திருஅவையில், இரக்கத்தின் யூபிலி கொண்டாடப்படுகிறது என்ற உலகளாவிய உணர்வு அவ்வேளையில் ஏற்பட்டது.

இந்த யூபிலி ஆண்டில், பல்வேறு குழுவினர் வத்திக்கானில் தங்கள் யூபிலி கொண்டாட்டங்களை மேற்கொண்டனர். இக்குழுக்களில் முதலாவதாக, திருப்பயணங்களை ஏற்பாடு செய்வோர் மற்றும் வழிநடத்துவோர் ஆகியோருக்கு 2016ம் ஆண்டு, சனவரியில் யூபிலி கொண்டாட்டங்கள் நிகழ்ந்தன. இதைத் தொடர்ந்து, பிப்ரவரி மாதம், திருநீற்றுப் புதனன்று, 'இரக்கத்தின் மறைப் பணியாளர்களை' உலகெங்கும் அனுப்பினார், திருத்தந்தை. ஒப்புரவு அருளடையாளம் வழியே உலகெங்கும் பரவியுள்ள கத்தோலிக்கர் அனைவரும், பாவ மன்னிப்பின் முழுமையான அனுபவத்தைப் பெற, 1000த்திற்கும் அதிகமான மறைப் பணியாளர்கள், அனைத்துப் பாவங்களையும் மன்னிக்கும் சிறப்பான அதிகாரங்களுடன், உலகெங்கும் அனுப்பப்பட்டனர். இந்த யூபிலி நிகழ்வுக்கு பொருள் சேர்க்கும் வகையில், ஒப்புரவு அருளடையாளத்தின் ஒப்பற்ற இரு புனிதர்களான, பாத்ரே பியோ, மற்றும், லியோபோல்தோ மாந்திச் ஆகிய இருவரின் அழியாத உடல்கள், புனித பேதுரு பசிலிக்காவில் ஏழு நாட்கள் வைக்கப்பட்டிருந்தன.
"இரக்கமும், நம்பிக்கையும் வாழும் ஓர் இடமாக, வரவேற்பையும், மன்னிப்பையும் வழங்கும் ஓர் இல்லமாக, திருஅவை, என்றென்றும் விளங்கவேண்டும்" என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருஅவையைக் குறித்து காணும் கனவு, இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், 'இரக்கத்தின் மறைப் பணியாளர்கள்' வழியே ஒருவகையில் நனவானது.

ஏப்ரல் முதல், ஜூன் மாதம் முடிய, வளர் இளம் பருவத்தினர், தியாக்கோன்கள், அருள்பணியாளர்கள், நோயுற்றோர், என்று பல பிரிவினர், தங்கள் யூபிலியைக் கொண்டாட, வத்திக்கானுக்கு வருகை தந்தனர். ஜூலை மாதம், போலந்து நாட்டின் கிரக்கோவ் நகரில், உலக இளையோரின் யூபிலி கொண்டாட்டங்கள் நிகழ்ந்தன. "இரக்கமுடையோர் பேறுபெற்றோர், ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்" (மத்தேயு 5:7) என்ற மையக்கருத்துடன் உலக இளையோர் நாள் நிகழ்வுகள் நடைபெற்றன.
இரக்கப் பணியாளர்களுக்கு செப்டம்பர் மாதம், வத்திக்கானில் நடைபெற்ற யூபிலி கொண்டாட்டங்களின்போது, இரக்கத்தின் தூதரென உலகெங்கும் அறியப்படும் அன்னை தெரேசாவை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனிதராக உயர்த்தினார்.
கிறிஸ்து அரசர் திருநாளுக்கு முந்தைய இரு ஞாயிறுகளில், இரு சிறப்பான குழுவினர், தங்கள் யூபிலியைக் கொண்டாட வத்திக்கானுக்கு சிறப்பாக அழைப்பு பெற்றனர். நவம்பர் 6ம் தேதி, சிறைக்கைதிகளோடும், நவம்பர் 13ம் தேதி, வீடற்ற வறியோருடனும் திருத்தந்தை யூபிலி கொண்டாட்டங்களை மேற்கொண்டார்.

இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் எதிர்பாராத நிகழ்வாக, ஒவ்வொரு மாதத்திலும் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஓர் இரக்கச் செயலில் ஈடுபட்டார். இரக்கத்தின் வெள்ளி என்றழைக்கப்பட்ட தனித்துவம் மிக்க இந்நிகழ்வுகளின் தொகுப்பை நாம் அடுத்த வாரம் அசைபோடுவோம்.


No comments:

Post a Comment