13 December, 2016

விவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பகுதி – 51

Pope Francis consoles a lady ‘liberated from the slavery of the prostitution racket’
August 12, 2016 - Credit: AP

"ஆப்ரிக்காவைச் சேர்ந்த ஓர் இளம்பெண், பாலியல் தொழிலில் வலுக்கட்டாயமாகத் தள்ளப்பட்டார். கருவுற்ற அப்பெண், பேறுகாலம் நெருங்கும் நாள் வரை, அத்தொழிலைச் செய்வதற்குக் கொடுமைப்படுத்தப்பட்டார். இறுதியில், குளிர்காலத்தில், சாலையோரத்தில், தன்னந்தனியாய், ஒரு பெண்குழந்தையைப் பெற்றெடுக்கும் நிலை அவருக்கு உருவானது. பிறந்த குழந்தை, குளிரின் கொடுமையைத் தாங்க இயலாமல் இறந்துபோனது" என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஓர் இளம்பெண் தன்னிடம் பகிர்ந்துகொண்ட அந்தக் கொடிய அனுபவத்தை, ஒரு தொலைக்காட்சி பேட்டியில் கூறினார். இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில் தான் சந்தித்த பலரில், இவ்விளம் பெண்ணின் கதை தன்னை மிக ஆழமாகப் பாதித்தது என்று TV2000 என்ற தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், திருத்தந்தை பகிர்ந்துகொண்டார்.
இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டை பின்னோக்கிப் பார்த்து, அசைபோடும் நம் முயற்சி, மூன்றாவது வாரமாகத் தொடரும் இவ்வேளையில், நம்மைப் போலவே, திருத்தந்தையும் இந்த யூபிலி ஆண்டினைப் பின்னோக்கிப் பார்த்து அசைபோடும் ஒரு முயற்சியாக, TV2000 தொலைக்காட்சிக்குப் பேட்டி வழங்கியுள்ளார். நவம்பர் 20, இரக்கத்தின் சிறப்பு யூபிலி நிறைவுற்ற நாளான கிறிஸ்து அரசர் பெருவிழாவன்று, மாலையில், TV2000 தொலைக்காட்சி ஒளிபரப்பிய இந்நிகழ்வில், இப்பெண்ணின் கதையை வேதனையுடன் பகிர்ந்துகொண்டார், திருத்தந்தை.

இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், ஒவ்வொரு மாதமும், ஏதாவது ஒரு சனிக்கிழமை, இரக்கத்தைப்பற்றிய சிறப்பு மறைக்கல்வி உரை வழங்கப்போவதாகவும், ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை, இரக்கச்செயல்களை மேற்கொள்ளப்போவதாகவும் திருத்தந்தை அறிவித்திருந்தார். தான் மேற்கொள்ளப்போகும் இரக்கச்செயல்கள் பற்றிய முன்னறிவிப்புகள் இருக்காது என்பதையும், இச்செயல்களை, தன் மனநிறைவுக்காக செய்யப்போவதாகவும் திருத்தந்தை விளக்கியிருந்தார். அவர் கூறியவாறே, 2015ம் ஆண்டு டிசம்பர் முதல், இவ்வாண்டு நவம்பர் முடிய, 12 மாதங்களில், 12 இரக்கச் செயல்களில் ஈடுபட்டார்.

'இரக்க வெள்ளி' என்றழைக்கப்பட்ட இந்த முயற்சி வழியே, திருத்தந்தை நிகழ்த்திய சந்திப்புக்களில், கண்ணீர், செபங்கள், ஆறுதலான அரவணைப்பு ஆகியவை அதிகம் இருந்தன என்றும், இவை அனைத்தையும் விட, மக்களின் அனுபவங்களுக்கு திருத்தந்தை செவிகொடுத்து கேட்டது, பலரை, இறைவனிடமும், மற்றவர்களிடமும் நெருங்கிவரச் செய்தது என்றும் கத்தோலிக்க ஊடங்கங்கள் கூறியுள்ளன. இரக்கத்தின் யூபிலி பல வழிகளிலும் தனித்துவம் மிக்கதாய் இருந்தாலும், அந்த அம்சங்களில், 'இரக்க வெள்ளி' இன்னும் உயர்ந்ததோர் இடத்தைப் பிடித்திருப்பதால், 'இரக்க வெள்ளி'யைக் குறித்து, இந்த விவிலியத் தேடலில் நாம் அசைபோட முயல்வோம்.

2015ம் ஆண்டு, டிசம்பர் 8, அமல அன்னை பெருவிழாவன்று, புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தின் புனிதக் கதவைத் திறந்து, இரக்கத்தின் யூபிலியை துவக்கிவைத்தத் திருத்தந்தை, பத்து நாள்கள் சென்று, டிசம்பர் 18, வெள்ளியன்று, உரோம் நகரின் மத்திய இரயில் நிலையம் அருகே அமைந்துள்ள காரித்தாஸ் பிறரன்பு விடுதியில், புனிதக் கதவைத் திறந்துவைத்தார். இரக்கத்தின் யூபிலி ஆண்டில், உரோம் நகர் பசிலிக்கா பேராலயங்களில் மட்டுமல்லாமல், உலகெங்கும் உள்ள ஆயிரக்கணக்கான ஆலயங்களில் புனிதக் கதவுகள் திறக்கப்படும் என்று திருத்தந்தை அறிவித்தது, இந்த யூபிலி வழியே இவ்வுலகில் பாய்ந்து வந்த இறைவனின் இரக்கத்தை, மக்களுக்கு மிக நெருக்கமாகக் கொணர்ந்தது. இதைவிட இன்னும் ஒரு படி உயர்ந்து, பிறரன்பு இல்லங்கள், மருத்துவ மனைகள், சிறைச்சாலைகள் போன்ற இடங்களிலும், புனிதக் கதவுகளைத் திறக்கும்படி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பரிந்துரை செய்திருந்தார். இந்தப் பரிந்துரையை அவரே முதன்முதலாகப் பின்பற்றி, உரோம் நகர் காரித்தாஸ் விடுதியில், புனிதக் கதவைத் திறந்தார். இவ்விடுதியில், அடைக்கலம் அடைந்த வறியோரைச் சந்தித்தது, திருத்தந்தையின் 'இரக்க வெள்ளி' செயல்களில் முதலாவதாக அமைந்தது.

இதைத் தொடர்ந்து, வயது முதிர்ந்தோர் இல்லம், 'கோமா' நிலையில் இருக்கும் நோயாளிகளைப் பராமரிக்கும் இல்லம், போதைப்பொருள் பழக்கத்திலிருந்து விடுதலைப்பெறுவோரின் மறுவாழ்வு மையம் ஆகியவற்றில் தங்கியிருப்போரையும், அவர்களுக்குப் பணியாற்றுவோரையும், சனவரி, பிப்ரவரி மாதங்களின்  'இரக்க வெள்ளி'களில் சந்தித்தார் திருத்தந்தை.
மார்ச் 24, புனித வியாழனன்று, உரோம் நகருக்கருகே அமைந்துள்ள புலம்பெயர்ந்தோர் முகாம் ஒன்றில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறுதி இரவுணவு திருப்பலியை நிறைவேற்றினார். இத்திருப்பலியில், காலடிகளைக் கழுவும் சடங்கில், நைஜீரியாவைச் சேர்ந்த இளையோர், எரித்திரியா நாட்டு இளம்பெண்கள், இஸ்லாமியர் மற்றும் ஓர் இந்து ஆகியோரின் காலடிகளை, திருத்தந்தை கழுவி, முத்தமிட்டபோது, சூழ இருந்த பலரது கண்கள் கண்ணீரால் நிறைந்தன.

ஏப்ரல் மாதமும், திருத்தந்தையின் இரக்கச்செயல், புலம்பெயர்ந்தோரை மையப்படுத்தியதாகவே அமைந்தது. ஏப்ரல் மாதம் 16ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிரேக்க நாட்டின் லெஸ்போஸ் தீவுக்குச் சென்று, அங்கு, தடுப்பு முகாம்களில் தங்கியிருந்த புலம்பெயர்ந்தோரைச் சந்தித்தார். கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும்தந்தை, முதலாம் பார்த்தலோமேயு, மற்றும், ஏதென்ஸ் நகர கிரேக்க ஆர்த்தடாக்ஸ் பேராயர், 2ம் எரோணிமுஸ் ஆகியோர், இச்சந்திப்பில் திருத்தந்தையுடன் இணைந்து சென்றனர் இம்மூவரும் புலம்பெயர்ந்தோர் முகாமைச் சுற்றிவந்தபோது, ஒரு சிறுமி, திருத்தந்தையின் பாதங்களில் வீழ்ந்து அழுதது, திருத்தந்தையை மட்டுமல்ல, சூழ இருந்தோரையும் கண்கலங்கச் செய்தது. இப்பயணத்தை முடித்து, திருத்தந்தை உரோம் நகருக்குத் திரும்பியபோது, லெஸ்போஸ் தீவிலிருந்த மூன்று சிரியா நாட்டு குடும்பங்களை தன்னுடன் விமானத்தில் அழைத்துச் சென்றார். ஆறு குழந்தைகள் உட்பட, உரோம் சென்றடைந்த இந்த 12 பேரும், இஸ்லாமியர்கள்.

மேமாதம் 13ம் தேதி, வெள்ளியன்று, உரோம் நகருக்கு தெற்கே அமைந்துள்ள L'Arche என்ற மையத்திற்கு திருத்தந்தை சென்றார். இந்த மையம், அறிவுத்திறன் குன்றியவர்களையும், மாற்றுத் திறன் கொண்டவர்களையும் பராமரித்து வருகிறது.
வயது முதிர்ச்சியால் பணிஓய்வு பெற்ற அருள்பணியாளர்கள் வாழும் இல்லத்தையும், வேறு காரணங்களால் மருத்துவ, மற்றும் மனநல உதவிகள் பெற்றுவரும் அருள்பணியாளர்கள் மையத்தையும், ஜூன் மாதம் 17ம் தேதி, 'இரக்க வெள்ளி' திட்டத்தில் இணைத்தார், திருத்தந்தை.

ஜூலை மாதம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்ட இரக்கச்செயல், உலகினர் கவனத்தை ஈர்த்தது. போலந்து நாட்டின் கிரக்கோவ் நகரில் இடம்பெற்ற உலக இளையோர் நாள் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளச் சென்றிருந்தத் திருத்தந்தை, ஜூலை 29ம் தேதி, வெள்ளிக்கிழமை, போலந்து நாட்டின் Auschwitz நாத்சி வதை முகாமுக்கு, தனியேச் சென்று, அமைதியாக நேரம் செலவிட்டார்.
Auschwitz முகாமுக்கு தான் செல்லவிருப்பதைக் குறிப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை, "அவ்விடத்தில் நான் தனியேச் சென்று செபிக்க விழைகிறேன். கண்ணீர் விடும் அருளை, இறைவன் எனக்கு வழங்கட்டும்" என்று கூறியிருந்தார். அதேபோல், அங்கு தனியே நடந்துசென்று, அமைதியில், செபத்தில், அந்த முகாமின் பல பகுதிகளைப் பார்வையிட்டத் திருத்தந்தை, குறிப்பாக, புனித மாக்சிமில்லியன் கோல்பே தங்கியிருந்த அறையில், சில மணித்துளிகளைச் செலவிட்டார். இறுதியில், அங்கிருந்த பார்வையாளர்கள் பதிவேட்டில், "இறைவா, உம் மக்கள் மீது இரக்கம் வையும். இந்த அளவு கொடுமை புரிந்தோரை மன்னித்தருளும்" என்ற வார்த்தைகளை, இஸ்பானிய மொழியில் எழுதி கையெழுத்திட்டார். Auschwitz முகாமிலிருந்து கிளம்பியத் திருத்தந்தை, குழந்தைகள் மருத்துவமனைக்குச் சென்று, அங்கிருந்த குழந்தைகளைச் சந்தித்து, ஆசீரும், ஆறுதலும் வழங்கியது, அவரது ஜூலை மாத 'இரக்க வெள்ளி' செயலாக அமைந்தது.

பாலியல் தொழிலில் அடிமைப்பட்டிருந்த இளம் பெண்களுக்கு மறுவாழ்வு வழங்கும் ஒரு மையத்திற்கு, ஆகஸ்ட் 12ம் தேதி, வெள்ளிக்கிழமை, சென்ற திருத்தந்தை, அவ்விளம் பெண்கள் தன்னிடம் பகிர்ந்துகொண்ட அனுபவங்கள், தன்னை அதிகம் பாதித்தன என்று TV2000 பேட்டியில் கூறியுள்ளார்.

Pope Francis in the neonatal ward of San Giovanni in Rome,
September 16, 2016 - Credit: L'Osservatore Romano

மனித வாழ்வின் துவக்கத்திலும், முடிவிலும், உயிர்வாழப் போராடுவோரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 16, வெள்ளியன்று சந்தித்தார். உரோம் நகரின் புனித யோவான் மருத்துவமனையில், குறைகளுடன் பிறந்துள்ள பச்சிளம் குழந்தைகளைப் பராமரிக்கும் சிறப்பு பகுதிக்கு திருத்தந்தை சென்றார். அப்பகுதியில் நுழைவதற்குக் குறிக்கப்பட்ட சிறப்பு பாதுகாப்பு கவசங்களையும், உடையையும் அணிந்து சென்ற திருத்தந்தை, அங்கிருந்த ஒவ்வொரு குழந்தையையும் தொட்டு ஆசீர்வதித்தார்.
அதேநாளில், மற்றுமோர் இல்லத்தில், குணமாக்க முடியாத நோய்களால், மரணத்தை நெருங்கிக்கொண்டிருந்த 30 பேரைச் சந்தித்து, அவர்களையும் ஆசீர்வதித்தார். கருவிலிருந்து கல்லறை வரை, மனித உயிர்கள் போற்றப்படவேண்டும் என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்ட செப்டம்பர் மாத 'இரக்க வெள்ளி' செயல் வலியுறுத்தியது.

12 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியரைப் பராமரிக்கும் சிறார் கிராமம் ஒன்றை, அக்டோபர் 14ம் தேதி சென்று பார்வையிட்டார், திருத்தந்தை. 'இரக்க வெள்ளி' என்ற இச்செயல்களின் இறுதி நிகழ்வாக, நவம்பர் 11, வெள்ளியன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நகரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள Ponte di Nona என்ற சிற்றூருக்குச் சென்றார். அங்கு ஒரு வீட்டில், ஏழு குடும்பங்களைச் சேர்ந்தவர்களைச் சந்தித்தார். இக்குடும்பங்களின் தலைவர்கள் எழுவரும், அருள்பணியாளர்கள் பயிற்சியிலிருந்து வெளியேறி, திருமணம் செய்துகொண்டவர்கள். தீர்ப்பிடும் கண்ணோட்டம் எள்ளளவும் இன்றி, இந்த ஏழு குடும்பங்களை திருத்தந்தை சந்தித்தது, ஆடுகள் அனைத்தையும் அரவணைத்துச் செல்லும் நல்லாயனை நினைவுறுத்தியது என்று ஒரு சில ஊடகங்கள் கூறியுள்ளன.
Francis visits seven former priests, now married, and their families
November 11, 2016 - Credit: La Stampa

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் 
சொல்லிய வண்ணம் செயல்.
திருவள்ளுவரின் இந்த அறிவுரைக்கேற்ப, இரக்கத்தின் யூபிலி என்ற அனுபவம், வெறும் ஏட்டளவு கருத்தாக அமைந்துவிடாமல், செயல்வடிவில், நம் வாழ்வாகவேண்டும் என்பதை வலியுறுத்த, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெள்ளிக்கிழமைகளில் இரக்கச் செயல்களில் தன்னையே ஈடுபடுத்தியது, நமக்கு தெளிவான பாடங்களைப் புகட்டுகிறது. திருத்தந்தையைப் பொருத்தவரை, இரக்கச் செயல்கள், இந்த யூபிலி ஆண்டில்  மட்டுமல்லாமல், எல்லா நாட்களிலும் தொடரும் என்பதை நன்கு அறிவோம். நம் வாழ்விலும் இரக்கச் செயல்கள் பெருகட்டும்.


No comments:

Post a Comment