27 December, 2016

விவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - இறுதிப்பகுதி – 53

‘Misericordia et Misera’ – Cover Page

கடந்த 52 வாரங்கள் நாம் மேற்கொண்ட ஒரு பயணம், இன்று நிறைவடைகிறது. "காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம்" என்ற பெயரில் நாம் மேற்கொண்ட இப்பயணத்தில், இரக்கமே உருவான இறைவன், நம்மை வழிநடத்தி வந்ததற்காக அவருக்கு நன்றிகூறுவோம். இந்த இறுதிப் பகுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுத்து வடிவில் வழங்கிய சில கருத்துக்களை, குறிப்பாக, இந்த யூபிலி ஆண்டின் இறுதியில் அவர் வெளியிட்ட "இரக்கமும் அவலநிலையும்" (‘Misericordia et Misera’) என்ற திருத்தூது மடலில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை இன்று அசைபோட முயல்வோம்.

இந்த யூபிலியையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட முதல் எடு, 'Misericordiae Vultus', அதாவது, 'இரக்கத்தின் முகம்' என்ற தலைப்பில் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மடல் (Bull of Indiction).  25 பகுதிகள் கொண்ட இம்மடல், கத்தோலிக்கத் திருஅவையைத் தாண்டி, பல மதத்தவரையும், மத நம்பிக்கையற்றவரையும் கவர்ந்தது என்பது உண்மை.

இரக்கத்தின் யூபிலி தன் முதல் மாதப் பயணத்தை நிறைவு செய்த வேளையில், 2016ம் ஆண்டு, சனவரி 12ம் தேதி, 'இறைவனின் பெயர் இரக்கம்' (The Name of God is Mercy) என்ற தலைப்பில் நூல் ஒன்று வெளியானது. ஆந்திரேயா தோர்னியெல்லி (Andrea Tornielli) என்ற பத்திரிகையாளர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் மேற்கொண்ட பேட்டியின் தொகுப்பாக இந்நூல் உருவாக்கப்பட்டது.
'இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு' என்ற எண்ணம், பல ஆண்டுகளுக்கு முன்னரே தன் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்த ஓர் எண்ணம் என்பதை, திருத்தந்தை, இப்பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் இறுதி நாளன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட 'இரக்கமும், அவலநிலையும்' என்ற திருத்தூது மடல், நேர்மறையான அதிர்வலைகளை கத்தோலிக்கத் திருஅவையிலும், உலகச் சமுதாயத்திலும் உருவாக்கி வருகிறது என்பது உண்மை.
விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை, மறைநூல் அறிஞரும், பரிசேயரும் இயேசுவிடம் கொணர்ந்த நிகழ்வை, இத்திருமடலின் அறிமுகமாக திருத்தந்தை கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து, உடனடியாக, மற்றொரு நிகழ்வையும் திருத்தந்தை அறிமுகம் செய்துள்ளார். லூக்கா நற்செய்தி 7ம் பிரிவில் கூறப்பட்டுள்ள அந்நிகழ்வில், பரிசேயர் ஒருவரது இல்லத்தில் இயேசு உணவருந்திய வேளையில், 'பாவியான ஒரு பெண்' இயேசுவின் காலடிகளை தன் கண்ணீரால் கழுவித் துடைத்த அந்நிகழ்வை திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

இவ்விரு நிகழ்வுகளிலும், நிலவிய இருவேறு கண்ணோட்டங்களை அடிப்படையாக வைத்து, இரக்கத்தின் பணி திருஅவையில் எவ்விதம் தொடரவேண்டும் என்பதை திருத்தந்தை தெளிவுபடுத்தியுள்ளார். பரிசேயர்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரின் பார்வையில் அவ்விரு பெண்களும் ஏற்கனவே தீர்ப்பிடப்பட்டவர்கள். அவ்விருவரையும் மனிதப்பிறவிகள் என்று பார்க்காமல், பாவிகள், குற்றவாளிகள் என்று கண்டனம் செய்தது, மதத்தலைவர்களின் கண்ணோட்டம். அவ்விருவரும் மனிதப்பிறவிகள் என்ற கண்ணோட்டமே, இயேசுவின் மனதை நிறைத்திருந்தது. தண்டனை வழங்குவதையே தங்கள் முதல் குறிக்கோளாகக் கொண்டிருந்த மதத்தலைவர்களுக்கு எதிர் துருவமாக, இயேசு, அவ்விருவருக்கும் மன்னிப்பு வழங்குவதையும், இரக்கம் காட்டுவதையும் தன் குறிக்கோளாகக் கொண்டிருந்தார். மன்னிப்படைந்த இவ்விரு பெண்கள் அடைந்த மகிழ்வைப்பற்றிக் கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மன்னிப்பு பெறுவதாலும், தருவதாலும், நாம் பெறும் நலன்களைப் பற்றி விவரித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, மன்னிக்கும் இறைவன் எப்படிப்பட்டவர் என்பதை மிக அழகாக சித்திரித்துள்ளார், திருத்தந்தை. 'இரக்கமும், அவலநிலையும்' என்ற திருத்தூது மடலின் இதயமாக இப்பகுதி அமைந்துள்ளது என்று சொன்னால், அது மிகையல்ல. "என் பாவங்கள் அனைத்தையும் உம் முதுகுக்குப் பின்னால் எறிந்து விட்டீர்" (எசாயா 38:17) என்று, அரசர் எசேக்கியா கூறிய வார்த்தைகளையும், "அவர் நம்மீது இரக்கம் காட்டுவார்; நம் தீச்செயல்களை மிதித்துப்போடுவார்; நம் பாவங்கள் அனைத்தையும் ஆழ்கடலில் எறிந்து விடுவார்" (மீக்கா 7:19) என்று இறைவாக்கினர் மீக்கா கூறும் சொற்களையும், தன் மடலில் எடுத்துக்காட்டுகளாகக் கூறியுள்ளார் திருத்தந்தை.

"இறைவனின் இரக்கம் அனைத்துப் பாவங்களையும்விட பெரியது; இறைவனின் இரக்கத்தை எதுவும் தடைசெய்ய முடியாது" என்ற கருத்துக்களை பல தருணங்களில், பகிர்ந்து வந்துள்ளார், திருத்தந்தை. இரக்கத்தின் சிறப்பு யூபிலியையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 'அவ்வெனீரே' (Avvenire) என்ற இத்தாலிய நாளிதழுக்கு வழங்கிய ஒரு பேட்டியில், இறைவன், நம் பாவங்களை மன்னிப்பது மட்டுமல்ல, மறந்தும்விடுகிறார் என்பதை அழுத்தந்திருத்தமாகக் கூறியுள்ளார்:
"இறைவனின் பெயர், இரக்கம். அதுவே அவரது வலுவற்ற அம்சமாகவும் விளங்குகிறது. அவரது இரக்கம், மன்னிக்கவும், மறக்கவும் செய்துவிடுகிறது. இறைவனுக்கு மோசமான ஞாபகசக்தி உள்ளதென்று நான் நினைக்கிறேன். அவர் ஒருமுறை மன்னித்துவிட்டால், அதை முற்றிலும் மறந்துவிடுகிறார். மன்னிப்பதில் அவர் மகிழ்வடைகிறார்."
திருத்தந்தை கூறும் இந்த எண்ணங்கள், எபிரேயருக்கு எழுதப்பட்ட மடலில் இவ்வாறு கூறப்பட்டுள்ளன: "அவர்களது தீச்செயலை நான் இரக்கத்தோடு மன்னித்துவிடுவேன். அவர்களுடைய பாவங்களை இனிமேல் நினைவுகூர மாட்டேன்." (எபிரேயர் 8:12)

மன்னிப்பது இறைவனின் பண்பு என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், மன்னிப்பது மட்டுமல்ல, நம் பாவங்களை மறப்பதும் இறைவனின் பண்பு என்பதை அறியும்போது, உள்ளத்திலிருந்து பெரும் சுமைகள் இறக்கப்படுவதுபோல் உணர்கிறோம். இத்தகைய உணர்வை, தன் திருத்தூது மடல் வழியே தந்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதே பண்பினை கத்தோலிக்கத் திருஅவையும் பெற்றிருக்கவேண்டும் என்பதை "இரக்கமும், அவலநிலையும்" என்ற தன் திருத்தூது மடலிலும் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

மன்னிப்பதும், மறப்பதும், திருஅவையின் பண்பாக மாறவேண்டும் என்பதை தெளிவுபடுத்த, ஒரு சில பொருள் நிறைந்த முடிவுகளை இத்திருத்தூது மடலில் வெளிப்படுத்தியுள்ளார் திருத்தந்தை.
இரக்கத்தின் சிறப்பு யூபிலியின் தனித்துவம் மிக்க ஒரு கொடையாக, இவ்வாண்டு, திருநீற்றுப் புதனன்று, இரக்கத்தின் மறைப்பணியாளர்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனுப்பிவைத்தார். திருத்தந்தையும், திருப்பீடமும் மட்டுமே மன்னிப்பு வழங்கக்கூடிய ஐந்து பெரும் குற்றங்களை மன்னிக்கும் அதிகாரத்தை 1000த்திற்கும் அதிகமான அருள்பணியாளர்களுக்கு வழங்கி, அவர்களை உலகெங்கும் அனுப்பிவைத்தார் திருத்தந்தை.
இரக்கத்தின் மறைப்பணியாளர்கள் ஆற்றிய பணிகளால் பல நன்மைகள் விளைந்துள்ளன என்பதை தான் கேட்டறிந்ததாகக் கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மறைப்பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரம் இனியும் தொடர்கிறது என்ற முடிவை, இம்மடலில் அறிவித்துள்ளார்.

அதேவண்ணம், 'கருக்கலைப்பு' என்ற பாவத்தில் ஈடுபட்டவர்கள், மனம் வருந்தி மன்னிப்பு வேண்டும்போது, அந்தப் பாவத்தை மன்னிக்கும் அதிகாரம், ஆயர்களுக்கும், குறிப்பிட்ட சில அருள்பணியாளர்களுக்கும் மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. இந்த யூபிலி ஆண்டையொட்டி, இந்தப் பாவத்தை மன்னிக்கும் அதிகாரம், அனைத்து அருள்பணியாளர்களுக்கும் வழங்கப்பட்டிருந்தது. இரக்கத்தின் யூபிலி நிறைவடைந்த பின்னரும், 'கருக்கலைப்பு' பாவத்தை மன்னிக்கும் அதிகாரம், அனைத்து அருள்பணியாளர்களுக்கும் தொடரும் என்று திருத்தந்தை, தன் திருத்தூது மடலில் அனுமதி வழங்கியுள்ளார். இதைத் தொடர்ந்து, "கருக்கலைப்பு என்பது ஒரு பெரிய பாவம் என்பதை நான் மீண்டும் வலியுறுத்த விழைகிறேன். அதேவேளையில், இறைவனின் இரக்கத்தால் போக்கமுடியாத பாவம் எதுவும் இல்லை என்பதையும் நான் கூற கடமைப்பட்டுள்ளேன்" என்று திருத்தந்தை கூறும் சொற்கள், இறைவனின் இரக்கம், அனைத்து பாவங்களையும் அழிக்கும் சக்தி மிக்கது என்பதை ஆணித்தரமாக உணர்த்துகின்றன.

மன்னிப்பின் வழியே இறைவனின் இரக்கத்தைச் சுவைத்தவர்கள், அந்த இரக்கத்தை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வதற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஓர் உலக நாளை உருவாக்கித் தந்துள்ளார். திருஅவையின் வழிபாட்டு ஆண்டில், கிறிஸ்து அரசர் பெருவிழாவுக்கு முன்னதாக இடம்பெறும் பொதுக்காலம் 33வது ஞாயிறை, வறியோரின் உலக நாளெனச் சிறப்பிக்குமாறு திருத்தந்தை, இம்மடல் வழியே அழைப்பு விடுத்துள்ளார்.
உலக முடிவில் நம்மைச் சந்திக்கவரும் கிறிஸ்து அரசர், தேவையில் இருப்போருக்கு நாம் என்ன செய்தோம் என்ற அளவுகோல் கொண்டு தீர்ப்பிடுவார் என்பதை, (மத்தேயு 25:31-46) இம்மடலில் குறிப்பிட்டுள்ளத் திருத்தந்தை, தேவையில் இருப்போரை மையப்படுத்தி, வறியோர் உலக நாளை உருவாக்கியுள்ளார். "நற்செய்தியின் இதயத்துடிப்பாக வறுமை உள்ளது என்பதையும், நம் வாசல்களில் லாசர்கள் கிடக்கும்வரை (லூக்கா 16:19-21), நீதியும், சமுதாய அமைதியும் இருக்காது என்பதையும் சிந்தித்துப் பார்க்க இந்த உலகநாள் உதவும்" என்று, திருத்தந்தை இம்மடலின் இறுதிப் பகுதியில் கூறியுள்ளார்.

"இரக்கமும், நம்பிக்கையும் வாழும் ஓர் இடமாக, வரவேற்பையும், மன்னிப்பையும் வழங்கும் ஓர் இல்லமாக, திருஅவை, என்றென்றும் விளங்கவேண்டும்" (Let the Church always be a place of Mercy and Hope, where everyone is welcomed, loved and forgiven) என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருஅவையைக் குறித்து காணும் கனவு, இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டையும் கடந்து, இனிவரும் காலத்திலும் நனவாக வேண்டும். இறைவனின் இரக்கத்தை இவ்வுலகிற்குக் கொணரும் தூதர்களாக நாம் வாழ்வதற்குரிய வரத்தை இறைவன் நம் அனைவருக்கும் வழங்க வேண்டுவோம்.

இரக்கத்தின் சிறப்பு யூபிலியையொட்டி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒரு செபத்தை உருவாக்கியிருந்தார்.  கடந்த 52 வாரங்களாக நாம் மேற்கொண்ட இரக்கம் என்ற பயணத்தை, திருத்தந்தை வழங்கிய இச்செபத்துடன் நிறைவு செய்வோம்: 

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, விண்ணகத் தந்தை கருணையுள்ளவராக இருப்பதுபோல, நாங்களும் இருக்கவேண்டும் என்றும், உம்மைக் காண்பவர், அவரைக் காண்பர் என்றும் எங்களுக்குக் கற்பித்துள்ளீர். உமது முகத்தை எங்களுக்குக் காட்டும், நாங்கள் மீட்படைவோம்...
காண இயலாத தந்தையின் காணக்கூடிய முகம் நீரே; இந்தக் கடவுளின் வல்லமை, மன்னிப்பிலும், கருணையிலும் வெளிப்படுகின்றது. உயிர்த்து, மாட்சிமை பெற்றுள்ள ஆண்டவராகிய உமது காணக்கூடிய முகமாக திருஅவை விளங்குவதாக!
அறியாமையிலும், தவறுகளிலும் இருப்போர் மீது பரிவு காட்டுவதற்கென, உமது பணியாளர்களையும் வலிமையற்ற நிலையை அணிந்துகொள்ளச் செய்தீர். உமது பணியாளர்களை அணுகிவரும் அனைவரும், இறைவன் அவர்களைத் தேடி, அன்பு செய்து, மன்னிக்கிறார் என்பதை உணரட்டும்.
கருணையின் யூபிலி ஆண்டு, அருள் நிறைந்த காலமாக அமைய, உமது ஆவியானவரை அனுப்பி, எங்கள் ஒவ்வொருவரையும் அருள்பொழிவு செய்தருளும். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும், சிறைப்பட்டோர் மற்றும் ஒடுக்கப்பட்டோருக்கு விடுதலையை அறிவிக்கவும், பார்வை இழந்தோருக்கு பார்வை தரவும், புதுப்பிக்கப்பட்ட ஆர்வத்துடன் திருஅவை பணியாற்றுவதற்கு இந்த யூபிலி ஆண்டு உதவட்டும்.
கருணையின் அன்னையான மரியாவின் பரிந்துரை வழியாக, இதை நாங்கள் மன்றாடுகிறோம். தந்தையோடும், தூய ஆவியாரோடும் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கிறவரே, ஆமென்.


No comments:

Post a Comment