15 November, 2017

விவிலியத்தேடல் : வேதனை வேள்வியில் யோபு – பகுதி 46


Monks at prayer

பாசமுள்ள பார்வையில் – மனிதச் சட்டமா? கடவுள் கட்டளையா?

பாலை நிலத்தில் கடினமான தவ வாழ்வை மேற்கொண்டிருந்த துறவியர், உயிர்ப்புப் பெருவிழாவுக்கு தகுந்த தயாரிப்பாக, புனித வாரம் முழுவதும் உண்ணா நோன்பை கடைபிடிப்பதென, முடிவெடுத்தனர். ஒவ்வொரு துறவியும், அவரவர் அறைக்குள் சென்று, கடும் தவத்திலும், உண்ணா நோன்பிலும் ஈடுபட்டனர்.
புனித வாரத்தின் நடுவில், வேறு ஊரிலிருந்து இரு துறவியர், அத்துறவு மடத்தின் தலைவர், மோசே அவர்களைச் சந்திக்க வந்தனர். அவர்கள், நெடுந்தூரம் பயணம் செய்து வந்ததால், பசியாலும், களைப்பாலும் சோர்ந்திருந்தனர்.  அவர்களது பரிதாப நிலையைக் கண்ட மோசே அவர்கள், அத்துறவியர் உண்பதற்கு, சிறிது உணவை தயார் செய்தார். தங்களுக்கு மட்டும் உணவு வைக்கப்பட்டுள்ளது என்பதை உணர்ந்த அவ்விரு துறவியரும், உண்பதற்குத் தயங்கினர். உடனே, மோசே அவர்களும், அவர்களோடு சேர்ந்து, சிறிது உணவை சுவைத்தார்.
மோசே அவர்களின் அறையில் சமையல் நடப்பதை அறிந்து அதிர்ச்சியுற்ற துறுவிகள், அவரது அறைக்கு முன் கூடினர். அவர்கள் முகத்தில் தெரிந்த கோபத்தையும், கண்டனத்தையும் கண்ட இல்லத்தலைவர் மோசே, அவர்களிடம், "மனிதர்களாகிய நாம் விதித்துக்கொண்ட உண்ணா நோன்பு என்ற கட்டளையைப் பின்பற்ற நான் தவறிவிட்டேன். ஆனால், பசியால் வாடியிருந்த சகோதரர் இருவருக்கு உணவளித்ததன் வழியே, இறைவன் வழங்கிய அன்புக் கட்டளைக்கு நான் கீழ்ப்படிந்தேன்" என்று கூறவே, துறவியர், அமைதியாகக் கலைந்து சென்றனர்.
புனிதத்தில் வளரும் ஒரு முயற்சியாக, துறவியர் விதித்துக்கொண்ட உண்ணாநோன்பு சட்டம் பெரிதா? அல்லது, அயலவரின் தேவை உணர்ந்து, அன்பு காட்ட வேண்டுமென்று, ஆண்டவன் வழங்கிய கட்டளை பெரிதா?

The Book of Job by Harold Kushner

வேதனை வேள்வியில் யோபு – பகுதி 46

துன்பம் ஏன்? மாசற்றவர் துன்புறுவது ஏன்? இறைவன், நீதியும், வல்லமையும் கொண்டவர் எனில், துன்பங்களைத் தடுக்காமல் இருப்பதேன்? என்று நாம் எழுப்பிவரும் கேள்விகளுக்கு விடைகள் தேடி, கல்வாரியில், சிலுவையடியில் அமர்ந்து, கடந்த சில வாரங்கள் பாடங்கள் பயின்றோம். இன்று, நம் கவனம், மீண்டும், யூத மத குரு, ஹெரால்டு குஷ்னர் அவர்கள் எழுதிய நூலின் மீது திரும்புகிறது.
'The Book of Job - When Bad Things Happened to a Good Person' அதாவது, 'யோபு நூல் - நல்லவர் ஒருவருக்கு பொல்லாதவை நிகழ்ந்தபோது' என்ற தலைப்பில் குஷ்னர் அவர்கள் எழுதிய நூலில், இறுதிப் பிரிவு, "விடைகள்" என்று தலைப்பிடப்பட்டுள்ளது. துன்பத்தைப் பற்றியும், இறைவனைப் பற்றியும், யோபு நூலிலிருந்து தான் புரிந்துகொண்ட கருத்துக்களை, இப்பிரிவில் விளக்க முயன்றுள்ளார், குஷ்னர்.

தன்னுடைய தனிப்பட்ட விளக்கங்களை வழங்குவதற்குமுன், கடந்த சில நூற்றாண்டுகளாக, விவிலிய விரிவுரையாளர்கள் சிலர், யோபு நூலைக் குறித்து கூறியுள்ள விளக்கங்களை, குஷ்னர் அவர்கள் சுருக்கமாகத் தொகுத்து வழங்கியுள்ளார். 12ம் நூற்றாண்டு முதல் 20ம் நூற்றாண்டு முடிய வாழ்ந்த Moses Maimonides, Isaac Luria, Benedict Spinoza, Martin Buber, Abraham J.Heschel என்ற விரிவுரையாளர்களின் எண்ணங்களைத் தொகுத்து வழங்கியுள்ள குஷ்னர் அவர்கள், இவ்வெண்ணெங்களில் தான் நிறைவான ஒரு விடையைப் பெறமுடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக, அவர் தன் எண்ணங்களை விளக்கியுள்ளார். துன்பங்களையும், இறைவனையும் இணைத்து யோபு நூல் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு தகுந்த விடை, அந்நூலின் இறுதியில், இறைவன் வழங்கும் உரையிலும், அவ்வுரைக்குப்பின், யோபு வழங்கும் இறுதிக் கூற்றிலும் (யோபு நூல் 42: 2-6) அடங்கியுள்ளது என்று குஷ்னர் அவர்கள் கூறியுள்ளார்.
இறைவன் வழங்கும் உரையில், அவர் குறிப்பிடும் பெகிமோத்து, லிவியத்தான் என்ற இரு புதிரானப் படைப்புக்கள், இயற்கையில் உருவாகும் துன்பங்களைப் புரிந்துகொள்ளவும், யோபு கூறும் இறுதிச் சொற்களில், துன்பங்களுக்கு நாம் அளிக்கக்கூடிய பதிலிறுப்பு என்ன என்பதைப் புரிந்துகொள்ளவும் உதவுகின்றன என்று குஷ்னர் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார். லிவியத்தான் என்ற படைப்பு, தனது நியதிகளின்படி இயங்கும் இயற்கையின் உருவகம் என்றும், பெகிமோத்து என்ற படைப்பு, மனிதருக்குள்ளும், இவ்வுலகிலும் நிலவும் பல சக்திகளின் உருவகம் என்றும் குஷ்னர் அவர்கள் குறிப்பிடுகிறார்.

அனைத்தும் வல்லவரான இறைவன், தன் நன்மைத்தனம், அன்பு இவற்றின் வெளிப்பாடாக, இயற்கை அனைத்தையும், அதன் சிகரமாக மனிதரையும் படைத்தார். தான் படைத்த அனைத்தையும் தன் வல்லமையால் கட்டுப்படுத்த வேண்டும் என்று இறைவன் நினைத்திருந்தால், அவ்வாறே செய்திருக்கலாம். படைப்பு அனைத்தும், பரமனின் திட்டப்படி, இம்மியும் பிசகாமல் இயங்கியிருக்கும். ஆனால், அத்தகைய படைப்பு, முடுக்கிவிடப்பட்ட கடிகாரம் போல, சாவி கொடுக்கப்பட்ட பொம்மை போல, 'சுவிட்ச்' போடப்பட்ட இயந்திரம் போல, செயற்கைத்தனமாக செயல்பட்டிருக்கும். அத்தகையப் படைப்பு, இறைவன் அனைத்தும் வல்லவர் என்பதை மட்டுமே நிரூபித்திருக்கும். இறைவனின் நன்மைத்தனம், அன்பு ஆகியவை வெளிப்பட்டிருக்காது.
தன் நன்மைத்தனத்தையும், அன்பையும் வெளிப்படுத்தும் வகையில், இறைவன் இரு முக்கிய முடிவுகளை எடுத்திருக்க வேண்டும் என்று குஷ்னர் அவர்கள் கணித்துள்ளார். இயற்கையின் செயல்பாட்டிலும், மனிதரின் சுதந்திர முடிவுகளிலும் குறுக்கிடாமல், விலகி நிற்பதற்கு இறைவன் முடிவெடுத்தார் என்று குஷ்னர் அவர்கள் கூறியுள்ளார்.

இறைவனின் வல்லமையால் படைக்கப்பட்ட இயற்கைக்கு, நல்லது, தீயது என்ற பாகுபாடுகளோ, நன்னெறி விழுமியங்களோ கிடையாது. இந்த எண்ணத்தை விளக்குவதற்கு, குஷ்னர் அவர்கள், ஓர் எடுத்துக்காட்டைப் பயன்படுத்துகிறார்.
கடையில் விற்பனை செய்யப்படும் விதைகளை ஒருவர் திருடுகிறார் என்று கற்பனை செய்துகொள்வோம். விதைகளைத் திருடியவர், அவற்றை, பூமியில் நட்டு வைக்கிறார். நீர் விட்டு வளர்க்கிறார். நன்னெறி, நீதி இவற்றின் அடைப்படையில் பார்த்தால், அவ்விதைகள் திருடப்பட்டவை என்பதால், வளராமல், பட்டுப்போயிருக்கவேண்டும். ஆனால், இயற்கையில் அவ்வாறு நடப்பதில்லை. நல்ல நிலம், நீர் என்று சூழல்கள் சரிவர அமைந்தால், நட்டு வைத்த விதைகள் நல்ல விதைகள் என்றால், அவை திருடப்பட்ட விதைகளாக இருந்தாலும், வளர்ந்து, பலன்தரும். அதுதான், இயற்கையின் நியதி. இறைவன் அங்கு குறிக்கிடுவதில்லை.

அதேபோல், நல்லவை, தீயவற்றை அறிந்து முடிவெடுக்கும் திறனை மனிதர்களுக்கு வழங்கிய இறைவன், அத்திறனை மனிதர்கள் சுதந்திரமாகப் பயன்படுத்தும்போது, குறுக்கிடுவதில்லை. இதற்கு மாறாக, மனிதர்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் இறைவன் குறுக்கிட்டு, தன்னுடைய எண்ணங்களுக்குத் தகுந்ததுபோல் மனிதர்களைச் செயலாற்ற வைத்தால், மனிதர்கள் அனைவரும் இறைவனால் இயக்கப்படும் பொம்மைகளாக, 'ரோபோ'க்களாக மாறிவிடுவர்.

இறைவனின் தலையீடு இன்றி, தன் நியதிகளின்படி இயங்கும் இயற்கை, தன் சுதந்திரத்தைப் பயன்படுத்தும் சக்தி கொண்ட மனிதர்கள் என்ற இரண்டையும், அமெரிக்க ஐக்கிய நாட்டில் நிகழ்ந்த இயற்கை பேரிடருடன் இணைத்து, குஷ்னர் அவர்கள் கூறியிருப்பது, நம் கவனத்தை ஈர்க்கிறது.
2005ம் ஆண்டு, அமெரிக்க ஐக்கிய நாட்டின் தென் பகுதியில் பெருமளவு அழிவைக் கொணர்ந்த கத்ரீனா என்ற புயலின் முதல் ஆண்டு நிறைவுற்றபோது, நியூ ஆர்லீன்ஸ் (New Orleans) என்ற நகரில் நடந்த நினைவு வழிபாட்டில் பேசிய குஷ்னர் அவர்கள், அந்த வழிபாட்டிற்கு பின்வரும் விவிலியப் பகுதியைப் பயன்படுத்தினார்:
அரசர்கள் முதல் நூல் 19: 11-12
அப்போது ஆண்டவர், எலியாவிடம், "வெளியே வா; மலைமேல் என் திருமுன் வந்து நில். இதோ! ஆண்டவராகிய நான் கடந்து செல்லவிருக்கிறேன்" என்றார். உடனே ஆண்டவர் திருமுன் பெரும் சுழற்காற்று எழுந்து மலைகளைப் பிளந்து பாறைகளைச் சிதறடித்தது. ஆனால் ஆண்டவர் அந்தக் காற்றில் இல்லை. காற்றுக்குப் பின் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்திலும் ஆண்டவர் இருக்கவில்லை. நிலநடுக்கத்திற்குப் பின் தீ கிளம்பிற்று. தீயிலும் ஆண்டவர் இருக்கவில்லை. தீக்குப்பின் அடக்கமான மெல்லிய ஒலி கேட்டது.

இந்த வாசகத்தைத் தொடர்ந்து, குஷ்னர் அவர்கள் பகிர்ந்துகொண்ட கருத்துக்கள் இதோ:
"சுழற்காற்று இறைவன் அல்ல; அது, அக்கறை ஏதுமற்ற, குருட்டுத்தனமான இயற்கை. உங்கள் நகரைச் சூழ்ந்த பெரு வெள்ளம் இறைவன் அல்ல, இயற்கை. புயலும், பெரு வெள்ளமும் உங்கள் நகரைத் தாக்கியபோது, இறைவன் எங்கே இருந்தார்? அவர் மெல்லிய ஒலியில் இருந்தார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரைக் காப்பதற்காக செயலில் இறங்கிய மக்களின் உள்ளங்களில், இறைவன் மெல்லிய ஒலியாக இருந்தார். தங்கள் கல்லூரிகளை, விடுமுறைகளை மறந்து, மக்களுக்குப் பணியாற்ற விரைந்துவந்த இளையோரின் உள்ளங்களில், மெல்லிய ஒலியாக, இறைவன் இருந்தார்."

யோபு நூல் இறைவனின் அளவற்ற வல்லமையைப் பறைசாற்றுகிறது. ஆனால், அந்த வல்லமை, இறைவனின் நன்மைத்தனத்தை விஞ்சும் அளவு வெளிப்படுவதில்லை. தன் அளவற்ற வல்லமையோடும், நன்மைத்தனத்தோடும் இயற்கையைப் படைத்த இறைவன், அதன் செயல்பாடுகளில் தலையிடுவதில்லை. எனவே, தன் நியதிகளின்படி இயங்கும் இயற்கையில் பேரிடர்களும், பிரச்சனைகளும் எழுகின்றன. அதேவண்ணம், தங்கள் சுதந்திரத்தைப் பயன்படுத்தும் மனிதர்களின் செயல்பாடுகளிலும் இறைவன் தலையிடுவதில்லை என்பதால், மனிதர்களிடையிலும் பிரச்சனைகள், துன்பங்கள் உருவாகின்றன. இத்தனைப் பிரச்சனைகள் குவிந்தாலும், அவற்றைக்கண்டு துவண்டுவிடாமல், அவற்றைத் தீர்ப்பதற்கு முன்வரும் மனிதர்கள் வழியே, இறைவனின் பிரசன்னம் இவ்வுலகில் தொடர்ந்து வருகிறது.

இக்கருத்துக்களை தன் நூலின் இறுதிப்பிரிவில் பகிர்ந்துகொள்ளும் ஹெரால்டு குஷ்னர் அவர்கள், இறுதியில், சொந்த வாழ்விலும், யூத மத குரு என்ற முறையிலும் தான் சந்தித்த வேதனை நிறை அனுபவங்களையும், அவற்றின் வழியே தான் யோபு நூலை இன்னும் ஆழமாகப் புரிந்துகொண்டதையும், இவ்வாறு விவரிக்கிறார்:
"மிகச் சீராக, கச்சிதமாக இயங்கும் உலகில் நான் இறைவனை உணரவில்லை, மாறாக, பல்வேறு பிரச்சனைகள், குழப்பங்கள், துயரங்கள், அழிவுகள் நடுவிலும், தளராத உள்ளத்துடன் அவற்றைத் தாங்கிக்கொள்ளவும், பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ளவும் விழையும் மனிதர்கள் வாழும் உலகில் இறைவனை உணர்ந்தேன். இல்லையெனில், இயற்கைப் பேரிடர்களுக்குப்பின், நாத்சி வதை முகாம் போன்ற கொடூரங்களுக்குப்பின், மனிதர்கள், வாழ்க்கையில் நம்பிக்கை இழந்து, அழிந்துபோயிருப்பர். எத்தனை துயரங்கள் மலிந்தாலும், மீண்டும், மீண்டும் வாழ விழையும் மனிதர்களே, இறைவன் வாழ்கிறார் என்பதற்குச் சான்று."

தங்கள் வாழ்வைத் தொடர விழையும் மனிதர்களைப் பற்றி குஷ்னர் அவர்கள் குறிப்பிடும்போது, தன் மகனைப் பற்றி கூறும் ஒரு பகுதி நம் மனதை கலக்கமடையச் செய்கிறது. குணமாக்க முடியாத ஒரு நோயால் இறந்துகொண்டிருந்த அவரது மகன் ஆரோன், மூச்சுவிட முடியாமல் துன்புற்ற இரவுகளில், படுக்கையில் படுக்கமுடியாமல், நின்றபடியே தூங்கியதை குஷ்னர் அவர்கள் நினைவுகூர்கின்றார். நின்றபடியே உறங்கிய அந்த இரவுகளுக்குப் பின்னரும், அடுத்த நாள், தன் மகன், நண்பர்களைச் சந்தித்து, தன் இயல்பான மகிழ்வை வெளிக்காட்டியது, இறைவன் தன் மகனுடன் இருக்கிறார் என்பதை, இறைவன் தங்கள் வாழ்வில் இருக்கிறார் என்பதை, தனக்கு உணர்த்தியது என்று கூறுகிறார், குஷ்னர்.

தன் நூலின் இறுதியில் அவர் கூறும் வரிகளில் ஒரு சில இதோ: "இறைவனை நேருக்கு நேர் சந்தித்த யோபைப்போல, நானும் இறைவனைச் சந்தித்துள்ளேன். ஒளிமிகுந்த பகலவனில் மட்டுமல்ல, இருளிலும், நிழலிலும் இறைவனைச் சந்தித்துள்ளேன். அழகாக இயங்கும் உலகில் அல்ல, அலங்கோலமான உலகிலும், பிறருக்கென வாழும் மனிதர்களில் இறைவனைச் சந்தித்துள்ளேன். யோபுடன் இணைந்து நானும் கூற விழைவது இதுதான்: அருள்கூர்ந்து கேளும் அடியேன் பேசுவேன்; வினவுவேன் உம்மை; விளங்க வைப்பீர் எனக்கு. உம்மைப்பற்றிக் காதால் மட்டுமே கேள்விப்பட்டேன்; ஆனால் இப்பொழுது, என் கண்களே உம்மைக் காண்கின்றன. (யோபு நூல் 42: 4-6)


No comments:

Post a Comment