22 November, 2017

விவிலியத்தேடல் : வேதனை வேள்வியில் யோபு – பகுதி 47


Saint Cecilia in a church in Little Wymondley

பாசமுள்ள பார்வையில் - ஒலி அலைகள் வழியே உறவுகள்

தன் தாயை இழந்த 6 மாதக் குழந்தையைப் பற்றிய ஒரு காணொளி குறும்படம், 'வாட்ஸப்' வழியே, வலம் வந்தவண்ணம் உள்ளது. அக்குழந்தையின் தாய் பாடிவந்த ஒரு பாடலை, வேறொருவர் பாடும்போது, அக்குழந்தையின் கண்கள், கண்ணீரால் நிறைகின்றன. அதே நேரம், குழந்தையின் உதடுகளில், ஓர் இனம் புரியாத புன்னகையும் தெரிகிறது. இந்தக் காணொளியைக் காண்போரின் கண்கள், கட்டாயம் ஈரமாகும்.
கருவில் வளரும் குழந்தைக்கு கேட்கும் திறன் முதலில் உருவாகிறது என்றும், குழந்தைக்கும், தாய்க்கும் இடையே, ஒலி அலைகள் வழியே உறவுகள் உருவாகின்றன என்றும் ஆய்வுகள் உறுதி செய்கின்றன. பிறந்தபின், குழந்தைக்கும், தாய்க்கும் இடையே உருவாகும் நெருக்கமானப் பிணைப்பிற்கு, இசை, குறிப்பாக, தாலாட்டுப் பாடல், ஒரு முக்கிய கருவியாக அமைகிறது என்பதும், உலகறிந்த உண்மை. அதே வண்ணம், இறைவனுக்கும், மனிதருக்கும் இடையே உறவை வளர்க்கவும், இசை, ஒரு பாலமாக அமைகிறது. "இசையால் வசமாகா இதயம் எது, இறைவனே இசை வடிவம் எனும்போது" என்ற பக்திப் பாடலின் வரிகள் நினைவுக்கு வருகின்றன.
நவம்பர் 22, இப்புதனன்று, புனித செசிலியா திருநாளைச் சிறப்பிக்கின்றோம். தெய்வீக இசையின் பாதுகாவலர் என்று கத்தோலிக்கத் திருஅவையால் போற்றப்படுபவர் புனித செசிலியா. 3ம் நூற்றாண்டில் வாழ்ந்த இளம்பெண் செசிலியா, உரோமைய உயர்குடி மகனான வலேரியன் என்பவரை மணம் புரிந்து, அவரையும் கிறிஸ்தவ மறையைத் தழுவச் செய்தார். மதம் மாறிய வலேரியன், மறை சாட்சியாக உயிர் நீத்தார். இதைத் தொடர்ந்து, இளம்பெண் செசிலியாவின் கழுத்து, மும்முறை வாளால் வெட்டப்பட்டாலும், தலை துண்டிக்கப்படவில்லை என்றும், வாளால் காயப்பட்ட நிலையில் மூன்று நாள்கள் வாழ்ந்த செசிலியா, இறைவனைப் புகழ்ந்து பாடியவண்ணம் தன் உயிரை நீத்தார் என்றும் பாரம்பரியக் கதைகள் கூறுகின்றன.


God's refining fire - Reflections by Mike Gisondi

வேதனை வேள்வியில் யோபு – பகுதி 47

வேதனை வேள்வியில் புடமிடப்பட்ட யோபைக் குறித்து நாம் மேற்கொண்டுவரும் தேடல்களில், கடந்த சில வாரங்களாக, துன்பத்தையும், குறிப்பாக, மாசற்றவர் துன்புறுவதையும் புரிந்துகொள்ளும் முயற்சியை மேற்கொண்டு வருகிறோம். அந்த முயற்சியின் தொடர்ச்சியாக, இன்று நாம் மேற்கொள்ளும் தேடலை ஒரு கற்பனைக் கதையுடன் துவக்குவோம்.
இக்கதையின் நாயகன், பக்தியும், ஒழுக்கமும் நிறைந்த ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவர். குழந்தைப் பருவம் முதல், அவரது பெற்றோர், தங்களுக்குள்ளோ, தங்கள் குழந்தையிடமோ, குரலை உயர்த்தி, கடினமாகப் பேசியதேயில்லை. பொதுவாக, குழந்தைகளுக்கு வரும் சளி, காய்ச்சல், வயிற்றுவலி என்ற எந்த நோயும் இக்குழந்தைக்கு வந்ததேயில்லை. அவரது பற்கள் அனைத்தும், வரிசையாக, எவ்வித குறையுமின்றி வளர்ந்ததால், அவர் பல் மருத்துவரிடம் சென்றதேயில்லை. பள்ளிப்பருவத்தில், நம் நாயகன், எப்போதும் முதல்தர மாணவராக இருந்தார். படிப்பு, விளையாட்டு, கலைத்திறன் என்ற அனைத்துத் துறையிலும் அவருக்கே முதலிடம். பள்ளியை முடித்தபோது, தலைசிறந்த மாணவர் என்ற பதக்கத்துடன் சென்றார். கல்லூரியிலும், அவரது முதலிடம் தொடர்ந்தது. ஏனைய இளையோர் நடுவே நிலவும் தீய பழக்க, வழக்கங்கள் எதுவும் நம் நாயகனை அண்டியதில்லை.
கல்லூரியில், அவர் நாயகி ஒருவரைச் சந்தித்தார். அவரும், தலைசிறந்த கிறிஸ்தவ குடும்பத்தில், அருமையான பெற்றோருக்கு, செல்லக் குழந்தையாகப் பிறந்து வளர்ந்தவர். குழந்தைப்பருவம் முதல் அவரும், சளி, காய்ச்சல், வயிற்றுவலி, பல்வலி என்ற எந்த நோயுமின்றி வளர்ந்தவர். பள்ளியில் முதலிடம் பெற்ற இவர், கல்லூரியிலும் முதலிடம் பெற்றார். நாயகனும், நாயகியும், ஒருவரையொருவர் சந்தித்து, காதலித்து, எவ்வித பிரச்சனையும் இன்றி திருமணம் புரிந்துகொண்டனர். நல்ல வேலை, வசதியான வீடு, கார் என்று, அவர்கள் வாழ்வு அழகாகச் சென்றது.
நாம் எதிர்பார்த்தது போலவே, அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளும் அற்புத குண நலன்களோடு அழகாக வளர்ந்தனர். அவர்களும், பள்ளி, கல்லூரி படிப்புக்களை வெற்றிகரமாக முடித்து, சிறந்த வாழ்க்கைத் துணையுடன் மகிழ்வாக வாழ்ந்தனர். நாயகனும், நாயகியும், எவ்வித உடல் நலக்குறையும் இன்றி, 100 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து, ஒரு நாள் இவ்வுலகைவிட்டுப் பிரிந்தனர்.

இந்த அழகான கற்பனைக் கதையை, தன் மறையுரையில் பகிர்ந்துகொண்டவர், தென்னாப்ரிக்காவில் பணியாற்றிய Frank Reteif என்ற ஆங்கிலிக்கன் ஆயர். இந்தக் கற்பனைக் கதையைச் சொன்ன ஆயர் Reteif அவர்கள், சில முக்கியக் கேள்விகளை முன்வைத்தார். "இத்தகைய அற்புதமான வாழ்க்கை வாழ்ந்தவர்கள், கிறிஸ்தவர்கள் என்று யாருக்குத் தெரியப் போகிறது? ஒருவரது கிறிஸ்தவ வாழ்வு, கிறிஸ்தவ நம்பிக்கை எப்போது வெளிப்படும்? அவரது வாழ்வு எவ்வித குறையுமின்றி சீராகச் செல்லும்போதா? அல்லது, வாழ்க்கை தடம்புரண்டு தாறுமாறாகச் செல்லும்போதா?" என்ற கேள்விகளை எழுப்பிய ஆயர் Reteif அவர்கள், "ஒருவரது வாழ்வில் எதிர்பாராதத் திருப்பங்கள், புரிந்துகொள்ள முடியாதப் புதிர்கள், திரும்பிய இடமெல்லாம் துன்பங்கள் என்று சூழும் வேளையில், அவர் அவற்றை எவ்விதம் எதிர்கொள்கிறார் என்பதில்தான், அவரது கடவுள் நம்பிக்கை வெளிப்படுகிறது" என்று கூறினார்.

ஆயர் Reteif அவர்கள் தன் மறையுரையின் மையமாக அன்று எடுத்துக்கொண்ட பகுதி, பேதுருவின் முதல் திருமுகத்தின் முதல் பிரிவில் நாம் வாசிக்கும் வரிகள்:
1 பேதுரு 1:7
அழியக்கூடிய பொன் நெருப்பினால் புடமிடப்படுகிறது. அதைவிட விலையுயர்ந்த உங்கள் நம்பிக்கையும் மெய்ப்பிக்கப்படவே துயருறுகிறீர்கள். இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது அந்நம்பிக்கை உங்களுக்குப் புகழும் மாண்பும் பெருமையும் தருவதாய் விளங்கும்.

இந்தக் கற்பனைக் கதையில் நாம் சந்தித்த நாயகனைப் போல் யோபு வாழ்ந்துவந்தார். தலைசிறந்த குடும்பம், அழகான புதல்வர், புதல்வியர், வளமான வாழ்வு, நிறைந்த செல்வம், ஊருக்குள் பெரும் மதிப்பு என்று யோபின் வாழ்வு சீராக இயங்கிவந்தது. அவரைப்போல் மாசற்றவரும், நேர்மையானவரும் கடவுளுக்கு அஞ்சி, தீமையானதை விலக்கி நடப்பவரும் மண்ணுலகில் ஒருவரும் இல்லை (யோபு 1:8) என்று இறைவன் பெருமைப்படும் அளவு யோபு வாழ்ந்துவந்தார் என்பதை, இந்நூலின் ஆரம்பத்தில் வாசிக்கிறோம். இத்தகையதோர் அழகிய வாழ்வில், அலையலையாய் துன்பங்கள் தொடர்ந்தன. யோபு என்ற பொன், நெருப்பில் இடப்பட்டது.

பேதுருவின் முதல் திருமுகத்தில் கூறப்பட்டுள்ளதுபோல், நெருப்பில் இடப்படும் பொன்னையும், வெள்ளியையும் மனிதருக்கு ஒப்புமைப்படுத்திப் பேசும் உருவகங்கள், விவிலியத்தின் பல இடங்களில் காணப்படுகின்றன. இதோ, சில எடுத்துக்காட்டுகள்:
எசாயா 48:10
நான் உன்னைப் புடமிட்டேன்; ஆனால் வெள்ளியைப் போலல்ல; துன்பம் எனும் உலை வழியாய் உன்னைத் தேர்ந்தெடுத்தேன்.
திருப்பாடல் 12:6
ஆண்டவரின் வாக்குறுதிகள் கலப்பற்ற வாக்குறுதிகள்; மண் உலையில் தூய்மையாக்கப்பட்ட வெள்ளி போன்றவை; ஏழுமுறை புடமிடப்பட்டவை.
நீதிமொழிகள் 17:3, 27:21
வெள்ளியை உலைக்கலமும் பொன்னைப் புடக்குகையும் சோதித்துப் பார்க்கும்; உள்ளத்தைச் சோதித்துப் பார்ப்பவர் ஆண்டவர்.
வெள்ளியை உலைக்கலமும் பொன்னைப் புடக்குகையும் சோதித்துப் பார்க்கும்; ஒருவரை அவர் பெறுகின்ற புகழைக்கொண்டு சோதித்துப் பார்க்கலாம்.

நீதியின் கடவுள் இஸ்ரயேல் மக்களை புடமிட வருவார் என்பதை, இறைவாக்கினர் மலாக்கி இவ்வாறு விவரித்துள்ளார்:
மலாக்கி 3:3
அவர் புடமிடுபவர் போலும் வெள்ளியைத் தூய்மைப்படுத்துபவர்போலும் அமர்ந்திருப்பார். லேவியின் புதல்வரைத் தூய்மையாக்கிப் பொன், வெள்ளியைப்போல் அவர்களைப் புடமிடுவார்.

விவிலிய வகுப்புக்களில் பங்கேற்ற ஒரு பெண்மணி, இறைவாக்கினர் மலாக்கி கூறும் சொற்களைப் புரிந்துகொள்ள முயற்சிகள் மேற்கொண்டார். எனவே, பொன், அல்லது, வெள்ளியைப் புடமிடுவது எப்படி என்பதை, நேரில் பார்த்து, புரிந்துகொள்ள, வெள்ளிக் கொல்லர் (Silversmith) ஒருவர் பணியாற்றும் இடத்திற்குச் சென்றார்.
வெள்ளியைப் புடமிடும் வழிமுறை என்ன என்று கேட்ட பெண்ணிடம், "எரியும் நெருப்பின் நடுப்பகுதியில், மிக அதிக வெப்பமான இடத்தில் வெள்ளியை வைத்தால், வெள்ளி உருகி, அதிலிருக்கும் மாசுகள் அனைத்தும் நீங்கிவிடும்" என்று கொல்லர் விளக்கமளிக்க ஆரம்பித்தார். நீதியின் கடவுள் "வெள்ளியைப் புடமிடுபவர்போல் அமர்ந்திருப்பார்" (மலாக்கி 3:3) என்று இறைவாக்கினர் மலாக்கி கூறிய சொற்கள், அப்பெண்ணின் நினைவுக்கு வரவே, அவர் கொல்லரிடம், "வெள்ளியை நெருப்பில் வைத்தபின், நீங்களும் நெருப்புக்கு முன் அமர்ந்திருக்க வேண்டுமா?" என்று கேட்டார்.
"வெள்ளியை நெருப்பில் வைப்பவர், அதனைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும். தேவைப்படும் நேரத்திற்குமேல் வெள்ளி நெருப்பில் இருந்தால், அது பயனற்று பாழாகிவிடும்" என்று கொல்லர் விளக்கமளித்தார். இதைக் கேட்ட அந்தப் பெண்மணி, "வெள்ளி தூய்மையாகிவிட்டது என்பது எப்படி தெரியும்?" என்று அடுத்த கேள்வியைக் கேட்டார். அதற்கு அந்த கொல்லர், "உருகி நிற்கும் வெள்ளியில், எப்போது என் உருவம் தெளிவாகத் தெரிகிறதோ, அப்போது, அது தூய்மையாகிவிட்டது என்பதைப் புரிந்துகொள்வேன்" என்று பதிலளித்தார்.

பொன்னாக, வெள்ளியாக இருக்கும் நம்மை, துன்பம் என்ற நெருப்பில் இடும் இறைவன், அவ்வாறு நம்மை நெருப்பில் எறிந்துவிட்டு அகல்வதில்லை. அவரும் அந்த நெருப்புக்கு முன் தவமிருக்கிறார். நமது அழுக்கெல்லாம் நீங்கி, ஒளிர்விடும் வேளையில், இறைவனின் உருவம் நம்மில் தெரிவதே, நாம் தூய்மையாகிவிட்டோம் என்பதன் அடையாளம்.
துன்பம் என்ற நெருப்பில் யோபு புடமிடப்பட்டபின், அவரில் இறைவனின் உருவம் வெளிப்பட்டது என்பதைக் கூறவே, அவருக்கு முன் இறைவன் நேரடியாகத் தோன்றினார் என்று யோபு நூலின் ஆசிரியர் அழகாகக் கூறியுள்ளார்.
துன்பம் என்ற நெருப்பு, நம்மைச்சுற்றி கொழுந்துவிட்டு எரியும் வேளையில், நம்மைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்தவண்ணம் இறைவனும் அங்கு அமர்ந்துள்ளார் என்பதையும், அவரது உருவம் நம்மில் இன்னும் ஆழமாகப் பதியவே நாம் துன்ப நெருப்பில் வைக்கப்பட்டுள்ளோம் என்பதையும், உணர்வதற்கு, இறைவன் நம் ஒவ்வொருவருக்கும் வரம் தருவாராக!


No comments:

Post a Comment