18 December, 2018

விவிலியத்தேடல் : யோவான் நற்செய்தி புதுமைகள், மீள்பார்வை – 3


Basanti Kumari writing on the blackboard

இமயமாகும் இளமை கால் கொண்டு அறிவொளி ஏற்றி...

தன் இரு கரங்களும் வளர்ச்சியடையாத நிலையில், 30 வயதான இளம்பெண் பசந்தி குமாரி (Basanti Kumari) அவர்கள், தன் கால்களைக் கொண்டு, கரும்பலகையில் எழுதி, பல குழந்தைகளுக்கு அறிவொளி ஏற்றி வருகிறார். ஜார்க்கண்ட் மாநிலத்தில், ஓர் எளியக் குடும்பத்தில், இரு கரங்களின்றி பிறந்த பசந்தியை, அவரது பெற்றோர், பள்ளிக்கு அனுப்பவில்லை.
இருப்பினும், தன் சொந்த முயற்சியால் பள்ளியில் சேர்ந்து, 1993ம் ஆண்டு பள்ளிப்படிப்பையும், 1999ம் ஆண்டு, பட்டப்படிப்பையும் நிறைவு செய்த பசந்தி அவர்கள், பின்னர், ஆசிரியர் பயிற்சியில் இணைந்தார். இந்தப் பயிற்சியை நிறைவு செய்தபின்னர், பல்வேறு பள்ளிகளில் வேலைக்கு மனு அளித்தும், அவரது நிலையைக் கண்டு, ஒருவரும் அவருக்கு வேலை தரவில்லை. அவரது விடா முயற்சியால், 2005ம் ஆண்டு, ரோராபந்த் கார்மிக் (Rorabandh Karmik) நடுநிலைப் பள்ளியில் வேலைக்குச் சேர்ந்தார்.
தன் கால்களைக் கொண்டு கரும்பலகையில் எழுதி, அவர் பாடம் சொல்லித்தருகிறார். தனது அங்கக்குறைபாட்டை தன் வெற்றிக்கு உந்து சக்தியாகப் பயன்படுத்துகிறார், பசந்தி குமாரி.

Feeding the Five Thousand by James Tissot

யோவான் நற்செய்தி புதுமைகள், மீள்பார்வை 3

இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த நேரத்தில், அப்போரினால் அனாதைகளாக்கப்பட்ட குழந்தைகளை, கூட்டணி நாடுகளின் இராணுவ வீரர்கள், முகாம்களில் தங்கவைத்தனர். பட்டினியால் மிகவும் மெலிந்திருந்த அக்குழந்தைகளுக்கு, வீரர்கள், தேவையான அளவு உணவளித்தனர். இரவில், அக்குழந்தைகளில் பலர், உறங்குவதற்குப் பயந்து, விழித்திருந்ததைக்கண்ட வீரர்கள், செய்வதறியாது திகைத்தனர். அவர்களில் ஒரு வீரர், குழந்தைகள் தூங்கப்போவதற்குமுன், அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு ரொட்டியைக் கொடுத்தார். அக்குழந்தைகள், அந்த ரொட்டியை, தங்கள் தலையணைக்கு அடியில் வைத்தவாறு, அமைதியாக உறங்கினர்.
இந்நிகழ்வு, உண்மையில் நிகழ்ந்ததா என்பதை உறுதியாகக் கூற இயலாது. ஆனால், இத்தகைய ஒரு நிகழ்வு நடந்திருக்க வாய்ப்புக்கள் அதிகம் உண்டு. பெற்றோரையும், இல்லங்களையும் இழந்து, பாதுகாப்பின்றி வாழ்ந்த குழந்தைகளுக்கு, அடுத்தநாள் உண்பதற்கு ஒரு ரொட்டி கிடைத்துவிட்டது என்ற எண்ணம், ஏதோ ஒருவகையில் பாதுகாப்பைத் தந்திருக்க வேண்டும்.

நம்மில் பலர், நம் தலையணைகளுக்கடியில் கடவுள், அல்லது, புனிதரின் உருவப்படங்களை வைக்கும் பழக்கத்தைப் பின்பற்றுகிறோம். அப்படி செய்யும்போது, கடவுளோ, அப்புனிதரோ நம்மைக் காப்பார் என்ற உணர்வில் இவ்வாறு செய்கிறோம். இக்குழந்தைகளுக்கோ, அத்தகைய பாதுகாப்பு உணர்வு, ஒரு ரொட்டித்துண்டின் வழியே கிடைத்திருக்கவேண்டும். மகாத்மா காந்தி ஒருமுறை கூறிய சொற்கள் நம் நினைவுக்கு வருகின்றன. மக்களில் பலர், எவ்வளவு தூரம் பசியால் வாடுகின்றனர் என்றால், அவர்களுக்கு, ரொட்டியின் வடிவில் தவிர வேறெந்த வடிவிலும் கடவுள் தோன்ற இயலாது. (“There are people in the world so hungry, that God cannot appear to them except in the form of bread.”)

மனிதரின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான உணவை, இயேசு, மக்களுக்கு வழங்கியப் புதுமையை யோவான் நற்செய்தி 6ம் பிரிவில் வாசிக்கிறோம். இயேசு, தன் பணி வாழ்வில் ஆற்றிய புதுமைகளில், ஒரே ஒரு புதுமை மட்டுமே, நான்கு நற்செய்திகளிலும் பதிவாகியுள்ளது. அதுதான், இயேசு, 5000த்திற்கும் அதிகமானோருக்கு உணவளித்தப் புதுமை - (மத். 14:13-21; மாற். 6:30-44; லூக். 9:10-19; யோவா. 6:1-14).
இப்புதுமை, சீடர்களின் நினைவுகளில் எவ்வளவு ஆழமாகப் பதிந்திருந்தது என்றால், இப்புதுமையில் கூறப்பட்டுள்ள எண்ணிக்கைகள் அனைத்தும், நான்கு நற்செய்திகளிலும் மாற்றம் ஏதுமின்றி, ஒரே அளவு எண்ணிக்கைகளாக உள்ளன. பெண்களும், சிறுவர், சிறுமியரும் நீங்கலாக, இப்புதுமையால் பயனடைந்த ஆண்களின் எண்ணிக்கை 5000; இப்புதுமையைத் துவக்கிவைக்கப் பயன்படுத்தப்பட்டவை, ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும்; அனைவரும் வயிறார உண்டபின், மீதமிருந்த துண்டுகள், பன்னிரண்டு கூடைகளில் சேகரிக்கப்பட்டன என்று, நான்கு நற்செய்திகளும் ஒரே எண்ணிக்கைகளைக் குறிப்பிட்டுள்ளன என்பது, வியப்பைத் தருகிறது. சீடர்களிடையே அவ்வளவு ஆழமானத் தாக்கத்தை உருவாக்கிய புதுமை இது!

இந்தப் புதுமையை இருவேறு கண்ணோட்டங்களில் சிந்திக்கலாம். இயேசு, தனி ஒருவராய் உணவைப் பலுகச்செய்தார் என்று சிந்திப்பது, நாம் வழக்கமாக எண்ணிப் பார்க்கும் பாரம்பரியக் கண்ணோட்டம். 'பகிர்தல்' என்ற புதுமையை, இயேசு துவக்கிவைத்தார் என்ற இரண்டாவது கண்ணோட்டம், ஒரு சில விவிலிய ஆய்வாளர்கள் சொல்லும் கருத்து. இந்தப் புதுமையைத் துவக்கிவைக்க, சிறுவன் ஒருவன் அப்பமும், மீனும் தந்தான் என்ற உண்மை, மாறுபட்ட இந்த இரண்டாவது கண்ணோட்டத்தில் சிந்திப்பதற்கு நம்மைத் தூண்டுகிறது. சிறுவன் ஏன் உணவைக் கொணர்ந்தான் என்ற கேள்வியுடன், நம் இரண்டாவது கண்ணோட்டத்தைத் துவக்கலாம்.

பொதுவாக, வெளியூர் செல்லும்போது, முன்னேற்பாடாக, உணவு எடுத்துச் செல்லவேண்டும் என்று, குழந்தைகளோ, சிறுவர்களோ எண்ணிப் பார்ப்பதில்லை. அவர்களுக்குத் தேவையான உணவை தயாரித்து, எடுத்துச்செல்வது, அல்லது, கொடுத்தனுப்புவது, பெற்றோரே. இஸ்ரயேல் மக்கள் மத்தியில் இதுபோன்ற முன்னேற்பாடுகள் கூடுதலாகவே இருந்தன. காரணம் என்ன?
பல தலைமுறைகளாய், இஸ்ரயேல் மக்கள், அடிமை வாழ்வு வாழ்ந்ததால், உணவின்றி தவித்தவர்கள். எனவே, அவர்கள் வீட்டைவிட்டு வெளியேறும்போதெல்லாம், மறவாமல், மடியில் கொஞ்சம் உணவு எடுத்துச்செல்வது, அவர்கள் வழக்கம். அன்றும், இயேசுவைத் தேடிச்சென்ற அந்தக் கூட்டத்தில், ஒரு குடும்பம் இருந்தது. குடும்பமாய்ச் சென்ற அவர்களுக்குத் தேவையான ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும், குடும்பத்தலைவி முன்மதியோடு தயாரித்திருந்தார். அந்த உணவு பொட்டலத்தை சிறுவன் சுமந்து வந்திருந்தான்.

மாலையானதும், பசி, வயிற்றைக் கிள்ள ஆரம்பித்தது. அங்கு அமர்ந்திருந்த பலரும் உணவுப் பொட்டலங்களைக் கொண்டு வந்திருந்தாலும் யார் முதலில் பிரிப்பது? பிரித்தால், பகிர வேண்டுமே என்ற எண்ணங்கள் அந்த பாலை நிலத்தில் வலம் வந்தன! இயேசுவின் போதனைகளில் பகிர்வைப் பற்றி பேசியது பலருக்கு நினைவிலிருந்தது. ஆனால், எப்படி இத்தனை பேருக்குப் பகிரமுடியும்? நமக்கெனக் கொண்டுவந்திருப்பதைக் கொடுத்துவிட்டால், நாம் என்ன செய்வது? இத்தகையக் கேள்விகளில் பெரியவர்கள் முழ்கி இருந்தபோது, அங்கிருந்த சிறுவனின் எண்ண ஓட்டம் வேறுபட்டிருந்தது. அதுவே, அந்தப் புதுமைக்கு வழிவகுத்தது.
தன்னைத் தேடிவந்த மக்களுக்கு எப்படி உணவளிப்பது என்று, இயேசு சீடர்களிடம் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்ட அச்சிறுவன், அம்மா தன்னிடம் கொடுத்திருந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் இயேசுவிடம் கொண்டுவந்தான். பின்விளைவுகளைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், கள்ளம் கபடமற்ற ஒரு புன்னகையுடன், அச்சிறுவன், தன்னிடம் இருந்ததையெல்லாம் இயேசுவிடம் தந்தான். அச்சிறுவனின் செயலால் தூண்டப்பட்ட மற்றவர்களும், தாங்கள் கொண்டுவந்திருந்த உணவைப் பகிர்ந்துகொள்ள முன்வந்தனர். ஆரம்பமானது, ஓர் அற்புத விருந்து.

அங்கு நடந்த பகிர்வு, புதுமையான, அதே நேரம், மனநிறைவைத் தந்த அனுபவமாக அமைந்தது. அந்த மனநிறைவிலேயே, அங்கிருந்தவர்களுக்கு, பாதிவயிறு நிறைந்திருக்க வேண்டும். எனவேதான், அவர்கள் உண்டதுபோக, மீதியான உணவை, 12 கூடைகளில் சீடர்கள் நிறைத்ததாக யோவான் நற்செய்தி கூறுகிறது.

தனியொருவராய் இயேசு அப்பங்களைப் பலுகச்செய்தார் என்பது, புதுமைதான். ஆனால், அதைவிட, இயேசு, மக்களைப் பகிரச்செய்தார் என்பதை, நாம் மாபெரும் ஒரு புதுமையாகக் கருதலாம். பகிர்வதன் அழகைக் குறித்து குழந்தைகளுக்கு பாடங்கள் பல சொல்லித்தரும் நாம், வளர, வளர, பகிர்வதற்குப் பதில், சேர்ப்பதைக் குறித்து, சேர்த்ததைப் பாதுகாப்பது குறித்து, அதிகப் பாடங்களைக் கற்றுக்கொள்கிறோம், கற்றும் தருகிறோம்.

வானிலிருந்து இறைவன் இறங்கி வந்து புதுமை செய்தால்தான், இவ்வுலகின் பசியைப் போக்க முடியும்; சக்திவாய்ந்த அரசுகள் மனது வைத்தால்தான், வறுமை நீங்கும்; இருப்பவர்கள் பகிர்ந்து கொண்டால்தான், இல்லாதவர் நிலை உயரும் என்றெல்லாம் எதிர்பார்த்து காத்திருப்பதை விட்டுவிட்டு, பகிர்வு என்ற புதுமையை, அச்சிறுவனைப் போல் நம்மில் யாரும் ஆரம்பித்து வைக்கலாம். அச்சிறுவன் வழியாக, இயேசு சொல்லித்தரும் பகிர்வுப் பாடங்களைக் கற்றுக்கொள்ள, நமக்கு இறைவன் பணிவான மனதைத் தரவேண்டுமென்று மன்றாடுவோம். நாம் துவங்கவிருக்கும் புத்தாண்டில், பகிர்வுப் புதுமை இவ்வுலகில் பெருகவேண்டும் என்றும் மன்றாடுவோம்.
Jesus walks on water

இந்தப் பகிர்வுப் புதுமையைத் தொடர்ந்து, இயேசு கடல் மீது நடந்து சென்ற புதுமை, மத்தேயு, மாற்கு, யோவான் ஆகிய மூன்று நற்செய்திகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இயேசு 5000 பேருக்கு உணவளித்த பிறகு, அன்று மாலை, அல்லது, இரவே, இந்தப் புதுமை நடந்ததாகச் சொல்லப்பட்டுள்ளது. இந்தப் புதுமையின் பின்னணியை, யோவான் நற்செய்தியில் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்:
யோவான் நற்செய்தி 6:14-15
இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள், “உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரேஎன்றார்கள். அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக் கொண்டுபோய் அரசராக்கப் போகிறார்கள் என்பதை உணர்ந்த இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார். என்று நற்சேய்தியாளர் யோவான் கூறியுள்ளார்.
வயிறார உண்டவர்கள் இயேசுவை வாயாரப் புகழ்ந்திருக்கவேண்டும். அந்தக் கூட்டத்தில் ஒருவர் திடீரென, "இவர்தாம் நாம் இத்தனை ஆண்டுகளாய் காத்து கிடந்த அரசர்" என்று உரக்கச் சொல்லியிருக்கலாம்.
கூட்டத்தில் உருவாகும் நிதானமற்ற உணர்வுகள் ஒருவருக்குக் கோவில் கட்ட கற்களைத் திரட்டும். அல்லது அதே கற்களை எறிந்து அவரைக் கொன்று சமாதியும் கட்டும். இதை நன்கு அறிந்திருந்த இயேசு, மக்களிடமிருந்து அகன்று சென்றார். எதற்காக? தன் தந்தையோடு தனித்திருக்க. செபிக்க.

தந்தையோடு தனியே உறவாடச் சென்ற இயேசு, அங்கேயேத் தங்கி விடவில்லை. காற்றோடு, கடலோடு போராடிய தன் சீடர்களைத் தேடிச் சென்றார். நடுக்கடலில் போராடிக்கொண்டிருந்த சீடர்களைச் சந்திக்க, கடல்மீது நடந்துசென்றார்.
அவர் நினைத்திருந்தால், காற்றையும், கடலையும், அமைதிப்படுத்தியபின், கடல்மீது நடந்து சென்றிருக்கலாம். ஆனால், இயேசு, அதைவிட சிறந்ததொரு வழியைத் தெரிவுசெய்தார். புயலோடும், அலைகளோடும் போராடிக்கொண்டிருந்த சீடர்களுடன் தன்னையே இணைத்துக்கொள்ளும் வண்ணம், அவர் கடல் மீது நடந்து சென்றார்.

காற்றும், கடலும் சீடர்களின் கவனத்தை ஆக்ரமித்திருந்ததால், அவர்களைத் தேடிச் சென்ற இறைவனை, இயேசுவை அடையாளம் கண்டுகொள்ள இயலவில்லை. அச்சம் அவர்களை ஆட்கொண்டிருந்தது. இயேசு அவர்களிடம், "அஞ்சாதீர்" என்றார்.
நற்செய்தியில் இயேசு பலமுறை பயன்படுத்தியுள்ள ஆறுதலான ஒரு சொல்: அஞ்சாதீர்கள், அல்லது கலங்காதீர்கள். அடுத்த வாரம், கிறிஸ்து பிறப்புப் பெருவிழா நள்ளிரவுத் திருப்பலியில் நாம் வாசிக்கும் நற்செய்தியிலும், "அஞ்சாதீர்கள்" என்ற ஊக்கமூட்டும் சொல் இடம்பெற்றுள்ளது. இயேசுவைப்பற்றி முதல் நற்செய்தியை இடையர்களுக்கு அறிவித்த வானதூதர்கள், இதே சொல்லுடன், தங்கள் நற்செய்தியை ஆரம்பித்தனர். "அஞ்சாதீர்கள். இதோ மக்களுக்கெல்லாம் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்." - லூக்கா. 2: 10

"நான்தான். அஞ்சாதீர்கள்" என்று இயேசு கூறியதும், சீடர்களைச் சூழ்ந்திருந்த புயல் நீங்கியது அவர்கள் கரை சேர்ந்தனர் என்று யோவான் இந்தப் புதுமையை நிறைவு செய்கிறார். வாழ்க்கைப் படகை, பல புயல்களும் அலைகளும் சூழ்ந்தாலும், இயேசு நம்முடன் இருக்கிறார் என்பதை உணரும்போது, புயல்கள் அடங்கும், கரையும் வந்து சேரும்.
வாழ்க்கை என்ற கடலில் பல்வேறு புயல்களால் சூழப்பட்டுள்ள மக்கள், குறிப்பாக, தங்கள் சொந்த நாடுகளைவிட்டு, வேற்று நாடுகளுக்கு புலம்பெயர்ந்து செல்லும் கொடுமையைச் சந்தித்துக்கொண்டிருக்கும் மக்கள், குழந்தை இயேசுவின் பெயரால், வானதூதர்கள் வழங்கிய "அஞ்சாதீர்கள்" என்ற சொல்லைக் கேட்டு, ஆறுதல் பெறவேண்டுமென்று நாம் இந்நாள்களில் செபிப்போம்.


No comments:

Post a Comment