26 December, 2018

விவிலியத்தேடல் : யோவான் நற்செய்தி புதுமைகள், மீள்பார்வை – 4


Thenmukilan and his NASA-selected painting

இமயமாகும் இளமை - நாசா நாள்காட்டியில் பழநி மாணவர் ஓவியம்

திண்டுக்கல் மாவட்டம், பழநியைச் சேர்ந்த நடராஜன் - சந்திராமணியின் மகன் தேன்முகிலன். இவர், பழநி அருகே உள்ள வித்யாமந்திர் பள்ளியில், 8-ம் வகுப்பு படிக்கிறார்.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா (NASA), ஒவ்வோர் ஆண்டும், நாள்காட்டியை வெளியிட்டு வருகிறது. இந்த நாள்காட்டியை உருவாக்க, ஒவ்வொரு மாதத்துக்கும் ஒரு தலைப்பைக் கொடுத்து, பன்னாட்டளவில் ஓவியப் போட்டிகளை நடத்தி வருகிறது. இப்போட்டியில் தேர்வு செய்யப்படும் ஓவியங்கள், நாள்காட்டியில் இடம்பெறும்.
2019-ம் ஆண்டு நாள்காட்டிக்குத் தேவையான ஓவியங்களைத் தேர்வு செய்ய நாசா நிறுவனம் நடத்தியப் போட்டியில், 4 வயது முதல் 12 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள், 194 நாடுகளிலிருந்து கலந்துகொண்டனர். இதில், இறுதியாக, 12 மாணவர்களின் ஓவியங்கள் தேர்வு செய்யப்பட்டன. இப்போட்டியில் பங்கேற்ற தேன்முகிலன் அவர்கள், விண்வெளியில் உணவு என்ற தலைப்பில் வரைந்திருந்த ஓவியம் தேர்வு செய்யப்பட்டு, 2019ம் ஆண்டு, நாள்காட்டியில், நவம்பர் மாத பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. விண்வெளியில் காய், கனி வகைகளைப் பயிர் செய்வதே, விண்வெளி உணவுக்கு சிறந்த வழி என்ற கருத்துடன், இளையவர் தேன்முகிலன் அவர்கள், இந்த ஓவியத்தை வரைந்துள்ளார். (தி இந்து)

Jesus cried with a loud voice, Lazarus, come out.

யோவான் நற்செய்தி புதுமைகள், மீள்பார்வை 4

1888ம் ஆண்டு, ஏப்ரல் 13ம் தேதி, பிரெஞ்சு நாளிதழ் ஒன்றில், "மரண வியாபாரி இறந்தான்" (“The Merchant of Death is Dead") என்ற தலைப்புச் செய்தி வெளியானது. அச்செய்தி யாரைக்குறித்து எழுதப்பட்டிருந்ததோ, அந்த 'வியாபாரி' அந்த நாளிதழை அன்று வாசித்தார். நம்முடைய மரணச் செய்தியை, நாமே வாசிக்கும் வாய்ப்பு, நம்மில் யாருக்கும் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். இந்த அனுபவத்தைப் பெற்றவர், ஆல்ஃபிரட் நொபெல் (Alfred Nobel).
அவரது அண்ணன், லுட்விக் நொபெல் (Ludvig Nobel) அவர்கள், 1888ம் ஆண்டு, ஏப்ரல் 12ம் தேதி இறந்தார் என்பதைக் குறிப்பிடுவதற்குப் பதில், ஆல்ஃபிரட் இறந்துவிட்டதாக, அந்த நாளிதழ் தவறானச் செய்தியை வெளியிட்டிருந்தது. ஆல்ஃபிரட் அவர்கள், அச்செய்தியை, தொடர்ந்து வாசித்தார். முன்னெப்போதும் இல்லாத வேகத்தில், அதிக மக்களைக் கொல்லும் வழிகளைக் கண்டுபிடித்து பணக்காரராக மாறிய ஆல்ஃபிரட் நொபெல், நேற்று இறந்தார் ("Dr. Alfred Nobel, who became rich by finding ways to kill more people faster than ever before, died yesterday.") என்று, அச்செய்தியின் துவக்கத்தில் கூறப்பட்டிருந்தது.

ஆல்ஃபிரட் நொபெல் அவர்கள், வெடிமருந்தைக் கண்டுபிடித்தவர் என்பதை நாம் அறிவோம். அதேபோல், பீரங்கி போன்ற இராணுவக் கருவிகளை உருவாக்கும் போபர்ஸ் (Bofors) நிறுவனத்தின் உரிமையாளராகவும் இருந்தார் ஆல்ஃபிரட். எனவே அவரைப் பற்றி வெளிவந்த செய்தி, கண்டனத் தொனியுடன் வெளியாகியிருந்தது. பல்லாயிரம் உயிர்களை கொல்லும் கருவிகளை உருவாக்கி, பணம் திரட்டும் பயங்கர மனிதர் அவர் என்பதைக் கூற, அவரை, மரண வியாபாரி என்று செய்திகள் விவரித்தன.

நாம் இறந்தபின் நம்மைப்பற்றி சொல்லப்படும் கருத்துக்கள் நமது உண்மை நிலையைத் தோலுரித்துக் காட்டும். ஆல்ஃபிரட் அவர்கள், தன்னைப்பற்றிய மரணச் செய்தியைப் படித்ததால், அறிவொளி பெற்றார் என்றே சொல்லவேண்டும். அழிவுக் கருவிகளையும், வெடிமருந்தையும் கொண்டு தான் சம்பாதித்த செல்வத்தையெல்லாம், நொபெல் விருதுகள் வழங்கும் அறக்கட்டளையை நிறுவுவதற்கு அவர் அளித்தார். இந்த ஒரு செயலால், அவர் வரலாற்றில் இன்றும் வாழ்கிறார்.

வரலாற்றில் புகழ்பெற்ற பலர் தங்கள் கல்லறையில் எழுதக்கூடிய வாக்கியங்களைத் தாங்களே சொல்லிச் சென்றுள்ளனர். 1931ம் ஆண்டு, ஏப்ரல் 10ம் தேதி இவ்வுலகிலிருந்து விடைபெற்ற புகழ்பெற்ற கவிஞர் கலீல் கிப்ரான் அவர்களின் கல்லறையில் எழுதப்பட்டுள்ள வரிகள் இவை: என் கல்லறையில் இந்த வார்த்தைகளை எழுதி வையுங்கள். நானும் உங்களைப் போல் உயிரோடுதான் இருக்கிறேன். உங்கள் அருகிலேயே நிற்கிறேன். கண்களை மூடி, சுற்றிலும் பாருங்கள்... உங்களுக்கு முன் நான் நிற்பதைக் காண்பீர்கள்.

கல்லறை நமது முடிவல்ல, நமது வாழ்வு இன்னும் தொடர்கிறது என்பதை நமக்கு நினைவுறுத்தும் நிகழ்வு, இயேசு இலாசரைக் கல்லறையில் இருந்து உயிருடன் எழுப்பும் புதுமை (யோவான் நற்செய்தி 11: 1-45). இயேசு ஆற்றிய புதுமைகளிலேயே மிகப் புகழ்பெற்ற புதுமையாகக் கருதப்படுவது, இயேசு, இலாசரை உயிர் பெற்றெழச் செய்த புதுமை. இறந்தோரை இயேசு உயிர் பெற்றெழச் செய்தார் என்பது நமக்குத் தெரியும். நயீன் நகர கைம்பெண்ணின் மகன், தொழுகைக் கூடத்தலைவரான யாயீர் என்பவரின் மகள் ஆகியோரை இயேசு உயிர் பெற்றெழச் செய்தார். ஆனால், இலாசரை உயிர் பெற்றெழச் செய்ததில் ஒரு தனி சிறப்பு உண்டு. மற்றவர்கள் இறந்த உடனேயே இயேசு அங்கு பிரசன்னமாகி, அவர்களை உயிர் பெற்றெழச் செய்தார். இலாசரையோ, அவர் புதைக்கப்பட்டபின், நான்காம் நாள் உயிர் பெற்றெழச் செய்தார்.

இறந்த ஒருவரின் ஆன்மா அவருடன் கல்லறையில் மூன்று நாட்கள் இருக்கும், மூன்றாம் நாள் அந்த ஆன்மா உடலிலிருந்து நிரந்தரமாக பிரிந்துவிடும், அதன் பின்னர் அந்த உடல் அழுகிப்போக, அழிந்துபோக ஆரம்பிக்கும்... இதுவே யூதர்கள் மத்தியில் நிலவி வந்த நம்பிக்கை. இலாசர் இறந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டன. எனவே அவரது உடல் அழிய ஆரம்பித்திருக்கும். அந்நேரத்தில் இயேசு அங்கு வந்து சேர்ந்தார். தாமதமாக வந்த இயேசுவைக் கண்டு, இலாசரின் சகோதரிகளான மார்த்தாவும், மரியாவும், ஒருவகையில் ஆறுதல் அடைந்தாலும், "ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால், என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்" (யோவான் 11: 21,32) என்ற தங்கள் ஆதங்கத்தையும், ஏக்கத்தையும் வெளிப்படுத்தினர்.

வாழ்வின் இக்கட்டான சூழ்நிலைகளில் இறைவன் தாமதிப்பதாக எத்தனை முறை நாம் உணர்ந்திருக்கிறோம். எதிர்பார்க்கும் நேரத்தில், எதிர்பார்க்கும் இடத்தில் எதிர்பார்க்கும் வகையில், கடவுள் வருவதில்லை. எதிர்பாராத வகையில் நம் வாழ்வில் நுழைவதுதான் கடவுளின் அழகு. தாமதமாய் வந்த இயேசுவிடம் தன் ஆதங்கத்தைக் கூறிய மார்த்தா, உடனேயே இயேசுவின் மீது தான் கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையையும் எடுத்துரைத்தார்.
யோவான் நற்செய்தி 11: 21-22
மார்த்தா இயேசுவை நோக்கி, “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான். இப்போது கூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குக் தெரியும் என்றார்.
மார்த்தாவின் இந்த நம்பிக்கை அவருக்குப் பின் வந்த பலருக்கு வழி காட்டியது.

உயிரற்ற பிணமும், கடவுள் கைபட்டால், புதுமைகளாய் மாறும். ஆனால், இந்தப் புதுமை நிகழ்வதற்கு கடவுள் இருந்தால் மட்டும் போதாது. நாமும் அவரோடு ஒத்துழைக்க வேண்டும் என இறைவன் விரும்புகிறார். இப்போதுகூட (அதாவது, நம்பிக்கையற்ற இச்சூழலிலும் கூட) நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குக் தெரியும் என்று மார்த்தா கூறிய அந்த நம்பிக்கை வரிகளில் இந்த ஒத்துழைப்பு ஆரம்பமானது. இயேசு இதே நம்பிக்கையை, ஒத்துழைப்பை இலாசர் கல்லறையைச் சுற்றி நின்றவர்களிடமும் உருவாக்க நினைத்தார். எனவே, மூன்று கட்டளைகள் இடுகிறார். முதல் கட்டளை அங்கிருந்த யூதர்களுக்கு.

"கல்லறை வாயிலை மூடியிருக்கும் கல்லை அகற்றுங்கள்." இது இயேசு வழங்கிய முதல் கட்டளை. "கல்லே அகன்று போ" என்று இயேசு சொல்லியிருந்தால், ஏன், நினைத்திருந்தாலே போதும், அந்தக் கல்லறைக் கல் அகன்று போயிருக்கும். இயேசு தனது இறை வல்லமையால் கல்லறையின் கல்லை அகற்றியிருந்தால், சூழ நின்றவர்கள் அவரை இன்னும் அதிகம் நம்பியிருப்பார்கள். இந்தப் புதுமைக்கு இன்னும் அதிக மெருகு கூடியிருக்கும்... இப்படி எண்ணத் தோன்றுகிறது நமக்கு.

ஆனால், இயேசுவின் எண்ணங்கள் வேறுபட்டிருந்தன. இயேசு புதுமைகள் செய்தது, தன் வலிமையை, கடவுள் தன்மையைக் காட்சிப்பொருளாக்க அல்ல. புதுமைகளின் வழியே மக்களின் மனங்களில், வாழ்வில் மாற்றங்கள் உண்டாக்கவேண்டும் என்பதே, அவரது எண்ணம். அந்தக் கல்லறையைச் சுற்றி நின்றவர்கள், நான்காம் நாளில் ஒன்றும் நடக்காது என்ற அவநம்பிக்கையுடன் அங்கு வந்தவர்கள். அவர்கள் கொண்டிருந்த அவநம்பிக்கையை உடைக்க விரும்பினார் இயேசு. நான்கு நாட்கள் என்ன, நாலாயிரம் ஆண்டுகள் ஆனாலும், கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை என்பதை அவர்களுக்கு உணர்த்த விரும்பினார்.

கல்லறையிலிருந்து இலாசரை உயிரோடு எழுப்ப அந்த மக்களுக்கு சக்தி இல்லாமல் இருக்கலாம். ஆனால், அந்தக் கல்லறைக் கல்லை அகற்றும் சக்தி அவர்களுக்கு உண்டு என்று இயேசுவுக்குத் தெரியும். எனவே, மனிதர்களால் முடிந்தவற்றை மனிதர்களே செய்யட்டும் என்று இயேசு இந்தக் கட்டளையைத் தருகிறார்.

கல்லறையைச் சுற்றி நின்றவர்களிடம், மூடியிருந்த கல்லை அகற்றச் சொன்னார். கல்லை நகர்த்துவதில் மற்றொரு பிரச்சனை இருந்தது. அதை மார்த்தா நேரடியாகவே இயேசுவிடம் கூறுகிறார். நான்கு நாட்கள் ஆகிவிட்டன. நாற்றம் எடுக்குமே என்பதே அப்பிரச்சனை.
மார்த்தா, இறந்த காலத்தில் வாழ்ந்தார். இயேசு, அவரை, நிகழ் காலத்திற்கும், எதிர் காலத்திற்கும் அழைத்தார். இறந்த காலம், அழிந்து, அழுகி, நாற்றம் எடுக்கும். அங்கேயே இருப்பது நல்லதல்ல. அந்த இறந்த காலத்தை மூடியிருப்பது பெரும் கல்லானாலும், மலையே ஆனாலும், அதை அகற்றி, அடுத்த அடி எடுத்துவைக்க இயேசு அழைக்கிறார்.

இயேசு கொடுத்த இரண்டாவது கட்டளை இலாசருக்கு: "இலாசரே, வெளியே வா" என்பது, அக்கட்டளை. இறந்த பிணமாய், கட்டுண்டு கிடந்த இலாசர், இயேசுவின் குரல் கேட்டு, கட்டுகளோடு வெளியே வந்தார். எல்லாம் முடிந்துவிட்டது, அழிந்துவிட்டது என்று புதைக்கப்பட்டுள்ள நம் கனவுகளும், கடவுளின் குரல் கேட்டால், மீண்டும் உயிர்பெறும். இறைவனின் குரல் கேட்டும் கல்லறைகளில் தங்களையே மூடிக்கொள்ளும் பலரை இந்நேரத்தில் நினைத்துப் பார்க்கலாம்.

வெளியே வரும் இலாசரைக் கண்டதும், இயேசு மீண்டும் மக்களுக்குத் தரும் மூன்றாவது கட்டளை: "கட்டுகளை அவிழ்த்து அவனைப் போக விடுங்கள்" என்பது. உயிர் பெற்று வந்துள்ள இலாசரால் தன் கட்டுகளைத் தானே அவிழ்த்துக் கொள்ளமுடியாது. அந்த நல்ல காரியத்தை அவரைச் சுற்றி இருப்பவர்களே செய்யமுடியும். நடைப் பிணங்களாக வாழும் பலரை நாம் பார்த்திருக்கிறோம். ஒருவேளை, அந்நிலையில் நாமும் அவ்வப்போது இருந்திருக்கிறோம். இந்த நடைப் பிணங்களைக் கட்டியிருக்கும் கட்டுகளை அவிழ்க்க, இறைவன், நமக்கு கட்டளைகள் இடுகிறார்.

இலாசரின் கல்லறைக்கு முன் நின்று, இயேசு வழங்கிய மூன்று கட்டளைகளும், ஆண்டின் இறுதி வாரத்தில் இருக்கும் நம்மை விழித்தெழச் செய்வதற்கு விடுக்கப்பட்டுள்ள கட்டளைகளாக ஒலிக்கின்றன. ஆண்டின் இறுதி வாரத்தில், நாம் கடந்துவந்த ஆண்டை திரும்பிப் பார்க்கும் முயற்சியில், ஊடகங்கள் ஈடுபட்டுள்ளன. இயற்கைப் பேரிடர்கள், அரசியல் அநீதிகள் என்று, நம் ஊடகங்கள், பெரும்பாலும், அழிவுகளையே வெளிச்சமிட்டு காட்டுவதால், உலகம், ஒரு கல்லறை போல, நம்மில் பலருக்குத் தோன்றலாம்.
நம்பிக்கைகள் புதைந்துபோனதுபோல் ஊடகங்கள் காட்டும் இந்தக் கல்லறைக்கு முன் இயேசு நின்று, கல்லை அகற்றுங்கள், வெளியே வாருங்கள், கட்டுகளை அவிழ்த்து விடுங்கள் என்று கூறும் கட்டளைகள் நாம் நம்பிக்கையுடன் விழித்தெழுவதற்கு உதவட்டும். புலரும் புதிய ஆண்டு, புது வாழ்வையும், கூடுதல் சக்தியையும் நம் அனைவருக்கும் அளிக்கும் என்ற நம்பிக்கையுடன், புதிய ஆண்டினை வரவேற்போம்.

யோவான் நற்செய்தியில், இயேசு செய்ததாக பதிவு செய்யப்பட்டுள்ள ஏழு அரும் அடையாளங்களில், கடந்த ஓராண்டளவாக,  நம் தேடல் பயணத்தைத் தொடர, வழிகாட்டி வந்த இறைவனுக்கு நன்றி கூறுவோம். இனி வரும் வாரங்களில், மத்தேயு, மாற்கு, லூக்கா என்ற மூன்று ஒத்தமை நற்செய்திகளில் கூறப்பட்டுள்ள புதுமைகளில் நம் தேடல்களை மேற்கொள்வோம்.


No comments:

Post a Comment