01 May, 2019

விவிலியத்தேடல் : ஒத்தமை நற்செய்தி – உலர்ந்த கரம் உயிர்பெற... 3


Rajendra Singh – the Waterman of India

பூமியில் புதுமை – இந்தியாவின் தண்ணீர் மனிதர் - இராஜேந்திரசிங்

கோடைக்காலம் என்றதும், தமிழக மக்களை அச்சுறுத்தும் ஓர் அவலம், தண்ணீர் தட்டுப்பாடு. தண்ணீருக்காக, தமிழகம், யாரிடமும் கையேந்தவேண்டிய அவசியமில்லை என்பதை, ஆணித்தரமாகக் கூறுபவர், திருவாளர் இராஜேந்திரசிங் அவர்கள். இந்தியாவின் தண்ணீர் மனிதர் என்றழைக்கப்படும் இவர், இராஜஸ்தான் மாநிலத்தில் நீர்வளம் குறைவாக இருந்த 1000 கிராமங்களில் ஆண்டு முழுவதும் நீர்வசதி கிடைக்கும்படி செய்துள்ளார். அங்கு நீரின்றி காய்ந்து கிடந்த Arvari, Ruparel, Sarsa, Bhagani, Jahajwali என்ற ஐந்து நதிகளில், ஆண்டு முழுவதும், தண்ணீர் ஓடும்படி செய்துள்ளார்.
இந்தியாவின் பாரம்பரிய மழைநீர் சேகரிப்பு முறைகளைக் கடைப்பிடித்து, தண்ணீர் தட்டுப்பாட்டில் இருந்த ஆயிரம் கிராமங்களுக்கு, தண்ணீர் வசதி ஏற்படுத்தித் தந்ததை பாராட்டி, இராஜேந்திரசிங் அவர்களுக்கு, தண்ணீருக்காக வழங்கப்படும் நொபெல் விருது என்று கூறப்படும் ஸ்டாக்ஹோம் நீர் விருது (Stockholm Water Prize), 2015ம் ஆண்டு வழங்கப்பட்டுள்ளது.
இவருக்கு இவ்விருது வழங்கப்பட்ட நேரத்தில், "இன்றைய தண்ணீர் பிரச்சனையை, தொழில்நுட்பத்தையும், அறிவியலையும் கொண்டு மட்டும் தீர்க்கமுடியாது. இப்பிரச்சனை, உண்மையில், நமது அரசுகளின் கொள்கைகள், தலைமைத்துவம், மக்களின் பங்கேற்பு, பெண்களுக்கு அதிகாரம், நாட்டின் பாரம்பரிய முறைகள், ஆகியவற்றைச் சார்ந்தது. இவற்றை நன்குணர்ந்து, நமக்கு வழிகாட்டியிருப்பவர் இராஜேந்திரசிங்" என்று, ஸ்டாக்ஹோம் விருதுக் குழு அறிவித்தது.
ஆசியாவின் நொபெல் விருது என்றழைக்கப்படும், ரமோன் மகசேசே (Ramon Magsaysay) விருதையும் இவர் 2001ம் ஆண்டு பெற்றுள்ளார். தி கார்டியன் எனப்படும் பிரபல ஆங்கில நாளிதழில் வெளியான "50 people who could save the planet" அதாவது, “பூமிக்கோளத்தைக் காப்பாற்றக்கூடிய 50 மனிதர்கள் என்ற கட்டுரையில் இராஜேந்திரசிங் அவர்களின் பெயரும் இடம்பெற்றுள்ளது. 60 வயதான திருவாளர் இராஜேந்திரசிங் அவர்கள், தமிழ் நாட்டின் நீர்வளம் பற்றி பத்திரிக்கையாளர்களிடம் கூறிய சில உண்மைகள்:
எந்த மாநிலத்திடமும் தண்ணீர் கேட்டு, தமிழகம் கையேந்தத் தேவையில்லை. இங்கு கிடைக்கும் மழை நீரைச் சேமிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
தமிழகத்தில் மண் வளம் சிறப்பாக உள்ளது. தண்ணீர் இல்லாததால் மட்டுமே வறட்சி ஏற்பட்டுள்ளது. வறட்சி ஏற்படுவதற்கு, ஆறுகளில் மணல் அள்ளப்படுவதும் ஒரு முக்கியக் காரணம்.
இருபது விழுக்காடு மழை பெய்யும் இராஜஸ்தானில், ஆறுகளில் தண்ணீர் ஒடும்போது, எண்பது விழுக்காடு மழை பெய்யும் தமிழகத்தின் ஆறுகள் வறண்டு கிடப்பது, வியப்பாகவும், வேதனையாகவும், கண்ணீரை வரவழைப்பதாகவும் இருக்கிறது.
(ஆதாரம் - தி இந்து, ஆனந்தவிகடன், மற்றும், பிற இணையத்தளங்கள்)

Is It Lawful on Sabbath?

ஒத்தமை நற்செய்தி உலர்ந்த கரம் உயிர்பெற... 3

ஓய்வுநாளன்று, தொழுகைக்கூடம் ஒன்றில், கை சூம்பிய ஒருவரை இயேசு குணமாக்கியப் புதுமையில் நம் தேடல் பயணம் தொடர்கிறது. தொழுகைக்கூடத்தில், இயேசு, மறைநூல் அறிஞர், பரிசேயர் மற்றும் மக்கள் கூடியிருந்தனர். அவர்கள் நடுவே, வலக்கை சூம்பிய ஒருவரும் இருந்தார். அவர்கள் அனைவரும் வெவ்வேறு நோக்கங்களுடன் தொழுகைக்கூடத்திற்கு வந்திருந்தனர் என்பதை, சென்ற தேடலில் சிந்தித்தோம்.
மற்றவர்களின் நோக்கங்கள் எதுவும் தெளிவாகக் கூறப்படாத நிலையில், மறைநூல் அறிஞரும் பரிசேயரும் அங்கு வந்திருந்ததன் நோக்கத்தை மட்டும், நற்செய்தியாளர்கள் மாற்கு, மற்றும், லூக்கா தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டுள்ளனர்: மறைநூல் அறிஞரும் பரிசேயரும் இயேசுவிடம் குற்றம் காணும் நோக்குடன், ஓய்வுநாளில் அவர் அவரைக் குணப்படுத்துவாரா என்று கூர்ந்து கவனித்துக் கொண்டேயிருந்தனர். (லூக்கா 6:7; காண்க. மாற்கு 3:2) என்று லூக்கா நற்செய்தியில் வாசிக்கிறோம்.

ஒரு கற்பனைக் காட்சியைக் காணமுயல்வோம். இயேசுவை மையப்படுத்திய ஒரு திரைப்படத்தில் இக்காட்சி அமைக்கப்பட்டிருப்பதாக கற்பனை செய்துகொள்வோம். தொழுகைக்கூடம் ஒன்றில், இயேசு போதித்துக் கொண்டிருக்கிறார், அவரைச் சுற்றி எளிய மக்கள் அமர்ந்திருக்கின்றனர். எல்லாருடைய முகத்திலும் அமைதியும், மகிழ்வும் காட்டப்படுகின்றன. சூம்பிய கை உள்ளவரும் அவ்வப்போது அக்காட்சியில் காட்டப்படுகிறார். மென்மையான இசை பின்னணியில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. திடீரென, இசை மாறுகிறது. தொழுகைக்கூடத்திற்குள் மறைநூல் அறிஞரும், பரிசேயரும் நுழைவதாகக் காட்டப்படுகிறது. மக்கள் முகங்களில் ஒரு வித கலக்கம் தெரிகிறது. அதுவரை அங்கு நிலவிய இயல்பானச் சூழ்நிலை மாறி, ஓர் இறுக்கமானச் சூழல் உருவாவதை, மக்களின் முகங்களும், பின்னணி இசையும் நமக்கு உணர்த்துகின்றன.

தொழுகைக்கூடத்தில் நிலவிய அந்த இறுக்கத்தைக் குறைக்க இயேசு மேற்கொண்ட முயற்சி, இன்னும் சில சங்கடங்களை நமக்குள் உருவாக்குகிறது. இயேசு அவர்களுடைய எண்ணங்களை அறிந்து, கை சூம்பியவரை நோக்கி, "எழுந்து நடுவே நில்லும்!" என்றார். அவர் எழுந்து நின்றார். (மாற்கு 3:3; லூக்கா 6:8) என்று நற்செய்தியாளர் லூக்கா குறிப்பிட்டுள்ளார்.
உடல் ஊனமுற்றவர்களை கூர்ந்து பார்ப்பதே அநாகரிகமானச் செயல் என்று இக்காலத்தில் நமக்குப் பல வழிகளில் சொல்லித்தரப்படுகிறது. அவர்களது ஊனத்தைப் பெரிதுபடுத்தாமல், அவர்களை, இயல்பான வாழ்க்கையில் ஈடுபடுத்த முயலவேண்டும் என்பது, குழந்தைகளுக்கும், இன்று பள்ளிகளில் சொல்லித்தரப்படும் ஒரு பாடம். இந்தப் பின்னணியுடன் சிந்திக்கும்போது, குறையுள்ள ஒருவரை, கூட்டத்தின் மையத்திற்கு இயேசு அழைத்தது, நமக்கு நெருடலான உணர்வுகளைத் தருகிறது.

உடல் நோய் உள்ளவர்களை, குறை உள்ளவர்களை மதிக்காத யூத சமூகத்தில், இயேசு, உடல் குறை உள்ள ஒருவரை, ஏன் கூட்டத்தின் நடுவில் வந்து நிற்கச் சொல்கிறார்? குறையுள்ளவர் மனமும், உடலும் அதிகம் பாடுபட்டிருக்க வேண்டும். இருப்பினும், அவர், தன்னை அழைத்தவர் இயேசு என்பதால், அவரது சொல்லுக்குப் பணிகிறார்.
குறையுள்ள அந்த மனிதரைப் பகடைக்காயாக்கி, அவரைவிட ஓய்வுநாள் விதிமுறைகள் மிகவும் முக்கியம் என்பதை நிலைநாட்டவும், ஓய்வுநாள் விதிகளை மீறும் இயேசுவை மக்கள் முன் மடக்கிவிடலாம் என்ற எண்ணத்துடனும் வந்திருந்த மதத் தலைவர்களின் திட்டங்களை நிலைகுலையச் செய்வதற்கு, இயேசு, இந்த சங்கடமான வழியைக் கடைபிடிக்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. குறையுள்ள அம்மனிதர், நடுவில் வந்து நின்றதும், அங்கிருந்த எளிய மக்களின் மனதில் இரக்கம் அதிகம் பிறந்திருக்கும். "இயேசு, இவரைக் கட்டாயம் குணப்படுத்துவார்..." என்ற நம்பிக்கையும் மக்களிடம் உருவாகியிருக்கும்.

அச்சூழலில், இயேசு ஒரு கேள்வியை எழுப்புகிறார். இயேசு அவர்களை நோக்கி, “உங்களிடம் ஒன்று கேட்கிறேன்; ஓய்வுநாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை?” என்று கேட்டார். (லூக்கா 6:9; மாற்கு 3:4)
இயேசு யாரிடம் இந்தக் கேள்வியை எழுப்புகிறார்? மக்களிடம் அல்ல. இக்கேள்வி மதத்தலைவர்களுக்கு. இயேசுவின் கேள்விக்கு, பதில் எதையும் காணோம். ஓய்வு நாளை வைத்து, இயேசுவை மடக்கிவிடலாம் என்று கணக்கு போட்டுக்கொண்டிருந்த மதத் தலைவர்கள், தங்களிடமே இந்த கேள்வி எழுப்பப்படும் என்று, கொஞ்சமும் நினைத்திருக்க மாட்டார்கள். எனவே, அவர்கள், வாயடைத்து நின்றார்கள்.
அவர்கள் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தது, இயேசுவுக்கு கோபத்தையும், வருத்தத்தையும் உருவாக்கின என்று நற்செய்தியாளர் மாற்கு தனிப்பட்ட முறையில் குறிப்பிடுகிறார். அவர்களோ பேசாதிருந்தார்கள். அவர் சினத்துடன் அவர்களைச் சுற்றிலும் திரும்பிப் பார்த்து, அவர்களது பிடிவாத உள்ளத்தைக் கண்டு வருந்தி, கை சூம்பியவரை நோக்கி, "கையை நீட்டும்" என்றார். (மாற்கு 3:4ஆ-5)

மத்தேயு நற்செய்தியில், இச்சூழல், சற்று வேறுபட்ட முறையில் கூறப்பட்டுள்ளது. ஓய்வுநாள் குறித்த விவாதத்தை, சூழ இருந்தோர் துவக்கியதாக மத்தேயு குறிப்பிட்டுள்ளார். சிலர் இயேசுவின்மேல் குற்றம் சுமத்தும் நோக்குடன் அவரிடம், "ஓய்வுநாளில் குணமாக்குவது முறையா?" என்று கேட்டனர். (மத்தேயு 12:10) என்று அவர்கள் எழுப்பிய கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாமல், இயேசு அவர்களிடம் வேறொரு கேள்வியை எழுப்பி, பதிலையும் தருகிறார். அவர் அவர்களிடம், "உங்களுள் எவரும் தம் ஒரே ஆடு ஓய்வு நாளில் குழியில் விழுந்துவிட்டால் அதைப் பிடித்துத் தூக்கி விடாமல் இருப்பாரா? ஆட்டைவிட மனிதர் எவ்வளவோ மேலானவர். ஆகவே ஓய்வுநாளில் மனிதருக்கு நன்மை செய்வதே முறை" என்றார். (மத்தேயு 12:11-12)

ஒய்வு நாளன்று, ஆடு ஒன்று, குழுயில் விழுந்தால், அதற்கு இருவகையில் உதவிகள் செய்யலாம் என்று யூத மரபு கூறுகிறது. ஒய்வு நாள் முடியும்வரை, அந்த ஆட்டிற்குத் தேவையான உணவை, அந்தக் குழியிலேயே வழங்கலாம். அல்லது, அந்தக் குழிக்குள் ஆடைகள், தலையணை போன்ற பொருள்களை அடுக்கிவைத்து, அவற்றின் உதவியுடன் ஆடு குழியிலிருந்து வெளியே வர உதவிசெய்யலாம் என்ற இரு வழிகள் கூறப்பட்டுள்ளன. ஆனால், இந்த வழிகளையெல்லாம் பின்பற்றாமல், ஆட்டைக் காப்பாற்றுவதற்காக, ஓய்வுநாளென்றும் பாராமல், அதை, குழியிலிருந்து வெளியே எடுத்தவர்களையும் இயேசு அறிந்திருக்க வேண்டும். இவற்றையெல்லாம் மனதில் கொண்டு, இயேசு, ஆட்டைவிட மனிதர் எவ்வளவோ மேலானவர். ஆகவே ஓய்வுநாளில் மனிதருக்கு நன்மை செய்வதே முறை என்பதை திட்டவட்டமாகக் கூறுகிறார்.

"ஆட்டைவிட மனிதர் எவ்வளவோ மேலானவர்" என்று இயேசு கூறும் சொற்கள், நம் உள்ளங்களில் அம்புகளாகப் பாய்கின்றன. வளர்ச்சியடைந்துள்ளதாக தங்களையே விளம்பரப்படுத்தும் பல நாடுகளில், மனிதர்களைவிட, செல்ல விலங்குகள் உயர்ந்ததொரு நிலையில் பராமரிக்கப்படுவது, வெளிப்படையான உண்மை.
மருத்துவ உதவிகள் செய்யும் ஒரு நிறுவனம், 2017ம் ஆண்டு மேற்கொண்ட ஓர் ஆய்வில், சங்கடமான சில உண்மைகள் வெளிவந்தன. "வேதனை மிகுந்த, மெதுவான மரணத்தை எதிர்நோக்கியிருக்கும் ஹாரிசனுக்கு உதவி செய்ய 5 டாலர்கள் கொடுப்பீர்களா?" என்ற கேள்வியுடன் ஒரு விளம்பரம் வெளியானது. ஆய்வுக்காக வெயிடப்பட்ட இந்த விளம்பரம், இரு வேறு படங்களுடன் வெளியானது. ஒரு விளம்பரத்தில், மேற்கண்ட சொற்களுடன், ஒரு நாய்குட்டியின் படமும், மற்றொரு விளம்பரத்தில், இதேச் சொற்களுடன், ஒரு சிறுவனின் படமும் வெளியிடப்பட்டிருந்தன. நாய்க்குட்டி ஹாரிசனுக்கு உதவிகள் குவிந்த அளவு, சிறுவன் ஹாரிசனுக்கு வரவில்லை.
மற்றோர் ஆய்வு, கல்லூரி மாணவரிடையே நடத்தப்பட்டது. அவர்கள் நடுவே, மூன்று கற்பனைச் செய்திகள் பரிமாறப்பட்டன. 30 வயது நிறைந்த மனிதர், 3 வயதான குழந்தை, ஒரு நாய்க்குட்டி, ஆகியவை, 'பேஸ்பால்' (Baseball) விளையாட்டில் பயன்படுத்தப்படும் மட்டையால் அடிபட்டிருந்ததாக அச்செய்திகள் உருவாக்கப்பட்டன. அவற்றைக் கண்ட மாணவர்கள் நடுவே, அடிபட்ட நாய்க்குட்டி, குழந்தை ஆகிய இரண்டுக்கும் கிடைத்த அனுதாபம், அடிபட்ட மனிதருக்குக் கிடைக்கவில்லை. இன்றைய உலகில், மனிதர்களைவிட, விலங்குகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படுவது, நம் உள்ளங்களில் முள்ளாக தைக்கின்றது.

நாய்க்குட்டி, பூனைக்குட்டி, ஆட்டுக்குட்டி ஆகிய விலங்குகளுக்கு பரிவு காட்டப்பட வேண்டும் என்பது ஏற்புடையதுதான். ஆனால், அவற்றிற்கு காட்டப்படும் அக்கறை, மனிதர்களுக்கு இல்லாமல் போவது, நம் கடின மனதைக் காட்டுகிறது. ஆட்டைவிட மனிதர் எவ்வளவோ மேலானவர். ஆகவே ஓய்வுநாளில் மனிதருக்கு நன்மை செய்வதே முறை என்ற முடிவை இயேசு வெளியிட்டபின், கை சூம்பியவரைக் குணமாக்கினார் என்று மத்தேயு நற்செய்தியில் கூறப்பட்டுள்ளது. கை சூம்பியவரை, இயேசு குணமாக்கிய வேளையிலும், அதைத் தொடர்ந்தும், தொழுகைக்கூடத்தில் நிகழ்ந்தனவற்றை, நாம் அடுத்தத் தேடலில் சிந்திப்போம்.

No comments:

Post a Comment