28 May, 2019

விவிலியத்தேடல் : ஒத்தமை நற்செய்தி - கடலும், காற்றும், அடிபணிய 1


Biodiversity Loss

பூமியில் புதுமை – மனித இனத்தால் அழியும் பன்முக உயிரினங்கள்

பூமிக்கோளத்தில், உயிர்கள் தோன்றிய காலம் முதல் நிகழ்ந்த, காலநிலை மாற்றம், எரிமலை வெடிப்பு, வேற்றுக் கோளங்கள் மற்றும், விண்மீன் கற்களின் மோதல், போன்ற காரணங்களால், டைனசோர் உட்பட, பல்வேறு உயிரினங்கள், பெருமளவு அழிவைச் சந்தித்துள்ளன. பரிணாம வளர்ச்சியாலும், பல உயிரினங்கள் மறைந்துள்ளன.
கடந்த 6 கோடியே 50 இலட்சம் ஆண்டுகளாக, உலகில் உள்ள தாவர, மற்றும் விலங்கினங்கள், பெருமளவு அழிவுகளிலிருந்து தப்பித்து வந்துள்ளன. ஆனால், 1970ம் ஆண்டு முதல், மனித இனத்தின் பல்வேறு செயல்பாடுகளால், தாவர, மற்றும் விலங்கினங்கள் பெருமளவு அழிவைச் சந்தித்து வருவதாக, WWF (World Wildlife Fund) எனப்படும், உலக வனவாழ்வு நிதி அமைப்பு அறிவித்துள்ளது.
உயிர்களின் பன்முகத்தன்மை மற்றும் சுற்றுச்சூழலியல் பன்னாட்டு அரசுகளின் அமைப்பு, 2019ம் ஆண்டு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், உலகிலுள்ள 10 இலட்சம் உயிரினங்கள் அழிவை நோக்கிச் செல்லும் ஆபத்தில் உள்ளன என்று கூறப்பட்டுள்ளது. உயிர்களின் பன்முகத்தன்மை அழிந்து வருவதற்கு, கூறப்பட்டுள்ள காரணங்களில் ஒரு சில:
Habitat Loss - அரியவகை உயிரினங்களின் உறைவிடங்கள் அழிக்கப்பட்டு, அங்கு மனிதரின் குடியேற்றமும், அவர்களது தொழில் முயற்சிகளும் துவக்கப்படுதல்.
Over Exploitation - தேவைக்கும் அதிகமாக ஏனைய உயிரினங்களையும், அவற்றின் உறைவிடங்களையும் சுரண்டுதல்.
Agricultural Intensification - உணவைப் பெருக்கும் முயற்சியாக, வேளாண்துறையில், வேதியியல் பொருள்களின் அதிகமான பயன்பாடு.
Pollution - மனிதர்கள் பயன்படுத்தி, தூக்கியெறியும் ஞெகிழிப் பொருள்களின் தாக்கம். Ellen MacArthur  அறக்கட்டளை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், ஞெகிழிப் பொருள்களின் பயன்பாட்டிலும், தூக்கியெறிதலிலும் தற்போதையப் போக்கினை மக்கள் தொடர்ந்தால், 2050ம் ஆண்டிற்குள், கடல்களில் வாழும் மீன்களின் எண்ணிக்கையைவிட, கடல்களில் கலக்கும் ஞெகிழிப் பொருள்களின் குப்பை கூடுதலாக இருக்கும் என்ற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. (ஆதாரம் - https://populationmatters.org/the-facts/biodiversity)

Sleeping Jesus

ஒத்தமை நற்செய்தி - கடலும், காற்றும், அடிபணிய 1

ஒத்தமை நற்செய்திகளில் பதிவு செய்யப்பட்டுள்ள 12 பொதுவானப் புதுமைகளில், 6வது புதுமையில் நம் தேடல் பயணம் இன்று துவங்குகிறது. 'காற்றையும், கடலையும் அடக்குதல்' என்ற தலைப்பில், மத்தேயு மாற்கு ஆகிய இரு நற்செய்திகளிலும், (மத். 8:23-27; மாற். 4:35-41), 'காற்றையும், நீரின் கொந்தளிப்பையும் அடக்குதல்' என்ற தலைப்பில் லூக்கா நற்செய்தியிலும் (லூக். 8:22-25) இப்புதுமை கூறப்பட்டுள்ளது.
Hendrik Van der Loos என்ற எழுத்தாளர், "இயேசுவின் புதுமைகள்" (The Miracles of Jesus) என்ற நூலில், இயேசு ஆற்றியப் புதுமைகளை, இருவகையாகப் பிரித்துள்ளார். மக்களை மையப்படுத்தியும், இயற்கையை மையப்படுத்தியும் இயேசு புதுமைகள் செய்தார் என்பதை, அவர் விளக்கிக்கூறியுள்ளார். மக்களை மையப்படுத்தியப் புதுமைகள், குணமளிக்கும் புதுமைகளாக, தீய ஆவியை விரட்டும் புதுமைகளாக, இறந்தோருக்கு உயிரளிக்கும் புதுமைகளாகக் கூறப்பட்டுள்ளன. இயற்கையின் மீது இயேசு கொண்டிருந்த சக்தியை வெளிப்படுத்தும் புதுமைகளாக, கடலையும், காற்றையும் அடக்குதல், கடல் மீது நடத்தல், பல்லாயிரம் பேருக்கு உணவளித்தல், தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றுதல் ஆகியப் புதுமைகள் கூறப்பட்டுள்ளன.

நாம் தேடலை மேற்கொண்டுள்ள இப்புதுமையின் நிகழ்களத்தை, கலிலேயக் கடல், திபேரியக் கடல் (யோவான் 6:1), அல்லது, கெனசரேத்து ஏரி என பல்வேறு பெயர்களுடன் நற்செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இப்புதுமையின் அறிமுக வரிகள், மாற்கு நற்செய்தியில் இவ்வாறு பதிவாகியுள்ளன:
மாற்கு 4:35-38
அன்றொரு நாள் மாலை நேரம். இயேசு சீடர்களை நோக்கி, "அக்கரைக்குச் செல்வோம், வாருங்கள்" என்றார். அவர்கள் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிட்டு, படகில் இருந்தவாறே அவரைக் கூட்டிச் சென்றார்கள். வேறு படகுகளும் அவருடன் சென்றன. அப்பொழுது ஒரு பெரும் புயல் அடித்தது. அலைகள் படகின் மேல் தொடர்ந்து மோத, அது தண்ணீரால் நிரம்பிக் கொண்டிருந்தது. அவரோ படகின் பிற்பகுதியில் தலையணை வைத்துத் தூங்கிக்கொண்டிருந்தார்.

இவ்வறிமுக வரிகள், இயேசு தன் சீடர்களுக்கு விடுத்த ஓர் அழைப்புடன் ஆரம்பமாகின்றன. "அக்கரைக்குச் செல்வோம், வாருங்கள்" (மாற். 4:35; லூக். 8:22) என்று இயேசு விடுத்த இவ்வழைப்பு, இயேசு விடுத்த முதல் அழைப்பை, சீடர்களுக்கு நினைவுறுத்தியிருக்கும். மீன்பிடிப்பதை, தங்கள் தொழிலாகக் கொண்டிருந்தோரிடம், "என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்" (மாற். 1:17) என்று இயேசு விடுத்த முதல் அழைப்பு, அவர்கள் வாழ்வை மாற்றியது. உவமைகள், மற்றும், புதுமைகள் வழியே, மனிதர்களைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இயேசுவைப் பின்தொடர்ந்த சீடர்களை, அடுத்த நிலைக்கு அழைத்தார், இயேசு.
'அக்கரைக்குச் செல்வோம்' என்று இயேசு விடுத்த அழைப்பில் கூறப்பட்டுள்ள 'அக்கரை', புறவினத்தார் வாழ்ந்த கெரசேனர் பகுதி. எனவே, இயேசு, தன் சீடர்களை, புறவினத்தார் வாழும் பகுதியில் உழைப்பதற்கு அழைத்தார் என்ற கண்ணோட்டத்தில், இவ்வழைப்பை எண்ணிப்பார்க்கலாம்.

இயேசுவின் அழைப்பைக் கேட்டு சீடர்கள் பயணம் மேற்கொண்ட கலிலேயக் கடல், அல்லது, கெனசரேத்து ஏரி, கடல் மட்டத்திற்குக் கீழ் அமைந்துள்ள நீர்நிலை. அந்த நீர்நிலையைச் சுற்றி, மலைகள் அமைந்துள்ளன. கடல் மட்டத்திற்குக் கீழ் அமைந்திருந்ததாலும், மலைகள் அந்த நீர்நிலையைச் சூழ்ந்திருந்ததாலும், அங்கு அடிக்கடி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, புயல்கள் எழுந்தன.
குறிப்பாக, மாலை நேரங்களில், பயல்கள் எழுவதற்கு வாய்ப்புக்கள் அதிகம் இருந்தன. அத்தகையதொரு மாலைப்பொழுதில், 'அக்கரை செல்வதற்கு' இயேசு அழைப்பு விடுத்தது, சீடர்களிடம் தயக்கத்தை உருவாக்கியிருக்கும். இருப்பினும், இயேசு அவர்களுக்கு வழங்கிய முதல் அழைப்பினால் ஈர்க்கப்பெற்று, தங்கள் உறவுகளை, படகை, வலைகளை விட்டு வந்த சீடர்கள், தற்போது, மற்றொரு சவாலைச் சந்திக்க, தங்கள் பயணத்தைக் துவக்கினார்கள்.

அவர்கள் எதிர்பார்த்துச் சென்ற புயல், விரைவில் அவர்களைத் தாக்கியது. அவ்வேளையில், அப்படகில், இயேசு உறங்கிக்கொண்டிருந்தார் என்ற குறிப்பை, மூன்று நற்செய்தியாளர்களும் தெளிவாகப் பதிவுசெய்துள்ளனர்.
இயேசுவின் மனிதத்தன்மையை வெளிக்கொணரும் சில செயல்கள், விவிலியத்தில், மிக அரிதாகக் கூறப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, இயேசு அழுதார் என்ற விவரம், நற்செய்திகளில் இரு முறை மட்டுமே இடம்பெற்றுள்ளது. இலாசரின் கல்லறை அருகே இயேசு அழுதார் என்று (யோவான் 11:35) நற்செய்தியாளர் யோவானும், இயேசு எருசலேம் நகரை நெருங்கி வந்ததும் அதைப் பார்த்து அழுதார் (லூக்கா 19:41) என்று, நற்செய்தியாளர் லூக்காவும் குறிப்பிட்டுள்ளனர்.
சமாரியாவில் உள்ள சிக்கார் என்ற ஊருக்குச் சென்றபோது, பயணத்தால் களைப்புற்றிருந்த இயேசு கிணற்று ஓரமாய் அமர்ந்தார் (யோவான் 4:6) என்று யோவான் குறிப்பிட்டுள்ளார். கண்ணீர் விடுவது, களைப்புறுவது ஆகிய குறிப்புக்கள், இயேசுவை, முழுமையான மனிதர் என்று காட்டுகின்றன. நாம் சிந்திக்கும் இப்புதுமையில், இயேசு உறக்கத்தில் ஆழ்ந்தார் என்ற விவரம், இந்த ஒரு நிகழ்வில் மட்டுமே கூறப்பட்டுள்ளது.

புயல் நடுவே, படகில் உறங்கிக்கொண்டிருந்த இயேசு, புயலில் சிக்கிய மற்றொரு கப்பலில் உறங்கிக்கொண்டிருந்த இறைவாக்கினர் யோனாவை (யோனா 1:5) நினைவுறுத்துகிறார் என்று, ஒரு சில விவிலிய விரிவுரையாளர்கள் கூறியுள்ளனர்.
யோனா 1:4-5
ஆண்டவர் கடலில் கடுங்காற்று வீசும்படி செய்தார். கடலில் பெரும் கொந்தளிப்பு உண்டாயிற்று; கப்பல் உடைந்துபோகும் நிலையில் இருந்தது. கப்பலில் இருந்தவர்கள் திகிலடைந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தம் தம் தெய்வத்தை நோக்கி மன்றாடலானார்கள். கப்பலின் பளுவைக் குறைப்பதற்காக அவர்கள் அதிலிருந்த சரக்குகளைக் கடலில் தூக்கியெறிந்தார்கள். யோனாவோ ஏற்கெனவே கப்பலின் அடித்தட்டுக்குப் போய்ப் படுத்து அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்.

புயல் நடுவே, இயேசு தூங்கினார் என்பதை, மூன்று நற்செய்தியாளர்களும் வெவ்வேறு வழிகளில் கூறியுள்ளனர். இயேசு தூங்கிக் கொண்டிருந்தார் (மத். 8:24) என்று மத்தேயுவும், அவர் ஆழ்ந்து தூங்கிவிட்டார் (லூக். 8:23) என்று லூக்காவும் சொல்லும்போது, மாற்கு இன்னும் சிறிது கூடுதலாக, அவரோ படகின் பிற்பகுதியில் தலையணை வைத்துத் தூங்கிக் கொண்டிருந்தார் (மாற். 4:38) என்று இந்தக் காட்சியைச் சித்திரிக்கிறார்.

புயலுக்கு நடுவிலும் ஒருவரால் தூங்க முடியுமா? முடியும். மனசாட்சியோடு மல்யுத்தம் செய்யாமல், மன நிம்மதியோடு தூங்கச் செல்பவர்கள், நன்றாகத் தூங்கமுடியும். ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் குழந்தையைப் பார்த்திருக்கிறீர்களா? அவ்வப்போது, குழந்தையின் உதட்டோரத்தில் ஒரு சின்னப் புன்னகை தோன்றும். வானதூதர்கள் வந்து குழந்தையிடம் பேசுகின்றனர் என்று பெரியவர்கள் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். அத்தகைய ஒரு தூக்கத்தில் இயேசுவும் ஆழ்ந்திருந்தார்.

நாள் முழுவதும் மக்கள் பலரைக் குணமாக்கிய திருப்தி அவருக்கு. உடல் நலம் மட்டுமல்ல. உள்ள நலமும் மக்களுக்குத் தந்த திருப்தி. தான் சொன்ன வார்த்தைகள், பலருடைய மனதையும் குணமாக்கியிருக்கும் என்று அவர் நம்பினார். நாள் முழுவதும் நல்லவற்றையே செய்து வந்த இயேசு, உடலளவில் களைத்துப் போனார். மனதளவில், மனசாட்சி அளவில், 'தெம்பாக' இருந்தார். உடல் களைப்பு, உள்ளத் தெம்பு... நல்ல உறக்கத்திற்கு இந்த இரண்டும் தேவை.

நம்மில் பலருக்கு ஒரு நாள் முடியும்போது, உடல் சோர்ந்து விடுகின்றது. மனமோ, தேவையான, அல்லது, தேவையற்ற நினைவுகளைச் சமந்து, அலைபாய்கிறது. எனவே, உடல் தூங்க முனைந்தாலும், உள்ளம் தூங்க மறுப்பதால், போராட்டம் ஆரம்பமாகிறது. ஒரு சிலர் இந்த போராட்டத்திற்கு காணும் ஒரு தீர்வு என்ன?... தூக்க மாத்திரைகள் அல்லது மது பானங்கள். இவை, தீர்வுகளா? தீமைகளா? சிந்திப்பது நல்லது.

நமக்கெல்லாம் தெரிந்த ஒரு வழியைச் சிந்தித்துப் பார்க்கலாம். நாள் முழுவதும் நமது சொல், செயல் இவற்றால் மனதில் பாரங்கள் சேராமல் பார்த்துக் கொள்ளவேண்டும். அப்படியே, நம்மையும் மீறி, வந்து சேரும் பாரங்களை, படுக்கைக்குப் போகுமுன், கடவுள் பாதத்திலோ அல்லது வேறு வழிகளிலோ இறக்கி வைக்க முயலவேண்டும்.
நமக்கெல்லாம் தெரிந்த ஓர் ஆங்கிலப் பழமொழி: A joy shared is doubled, a sorrow shared is halved. அதாவது, இன்பத்தைப் பகிர்ந்தால், இரட்டிப்பாகும்; துன்பத்தைப் பகிர்ந்தால் பாதியாகக் குறையும். பாரங்கள் பாதியான, அல்லது பாரங்களே இல்லாத மனதைப் படுக்கைக்குச் சுமந்து சென்றால், சீக்கிரம் தூக்கம் வரும்.

புயல் வீசியது, இயேசு தூங்கிக்கொண்டிருந்தார். புயலையும் மீறி, சீடர்கள் எழுப்பிய கூப்பாடு, இயேசுவை விழித்தெழ செய்தது. இயேசு எழுந்தார், புயலை அடக்கினார். அதன் பிறகு, தன் சீடர்களைப் பார்த்து, "ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?" (மாற்கு 4:40) என்று கேட்டார்.
 இயேசு, தன் சீடர்களிடம் கேட்ட இக்கேள்வி, புயலையும், நம்பிக்கையையும் சேர்த்துப் பார்க்க ஒரு வாய்ப்பை உருவாக்கித் தருகிறது. புயல் வீசும் நேரத்தில் நம் நம்பிக்கை எங்கே போகிறது? ஆழ் மனதில் அதுவும் தூங்கிக் கொண்டிருக்கிறதா? அல்லது, எழுந்து நின்று சப்தம் போட்டு இறைவனை அழைக்கிறதா? அல்லது புயல் வரும்போதெல்லாம் நம்பிக்கை நமக்கு டாட்டா காட்டிவிட்டு, நடுக்கடலில் நம்மைத் தத்தளிக்க விட்டுவிடுகிறதா? இக்கேள்விகளுக்குரிய பதில்களை நாம் அடுத்தத் தேடலில் புரிந்துகொள்ள முயல்வோம்.

No comments:

Post a Comment